Published:Updated:

மர்மங்களின் இருப்பிடமா Area 51...?! 'உண்மை தெரிஞ்சாகணும்' எனத் துடிக்கும் சதிக் கோட்பாட்டாளர்கள்

குறிப்பிட்ட நாளில் பெரும் எண்ணிக்கையில் ஏரியா 51-ஐ முற்றுகையிடுவதுதான் இவர்களின் திட்டம்

கடந்த சில நாள்களாக Area 51 தொடர்பான மீம்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என ஒரு இடம்கூட விடாமல் ஏரியா 51 மீம்கள் நிறைந்து கிடக்கின்றன. உலகம் முழுதும் தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது ஏரியா 51 என்ற பெயர்.

ஏரியா 51
ஏரியா 51

அமெரிக்காவில் இருக்கும் இந்த இடம் எதற்காக இப்போது திடீரென வைரலாகிறது? அதற்குக் காரணம் ஒரு ஃபேஸ்புக் ஈவென்ட் வைத்த ஒரு தொடக்கப் புள்ளிதான். உலகமே உற்று நோக்கும் அளவுக்கு ஏரியா 51-ல் என்னதான் இருக்கிறது ?

ஏரியா 51 மர்மங்களின் இருப்பிடம்!

ஏரியா 51 என்ற பெயர் ஒருவேளை உங்களுக்குப் புதிதாக இருக்கக் கூடும். ஆனால், உங்கள் அருகில் வேற்றுக்கிரகவாசிகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் யாராவது இருந்தால் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்கு ஏரியா 51-ஐ நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஏலியன்கள், வேற்றுக்கிரகவாசிகள் எனப் பல்வேறு விஷயங்கள் உண்மையில் இருப்பதாகவும், அவர்கள் பூமிக்கு வந்து செல்வதை உலக அரசுகள் மறைக்கின்றன என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் conspiracy theorists எனப்படும் சதிக் கோட்பாட்டாளர்கள். பொதுவாகவே, மர்மம் என்ற ஒரு விஷயம் எப்போதும் அவர்களின் கவனத்தை ஈர்த்துவிடும். அப்படிப் பட்டவர்களின் பார்வையில் ஏரியா 51 தென்படாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

ஏரியா 51
ஏரியா 51
Google Maps

Storm Area 51, They Can't Stop All of U' என்ற ஃபேஸ்புக் ஈவென்ட் ஒன்றுதான் இப்போது ஏரியா 51 தொடர்பான பேச்சு அடிபடக் காரணம். வரும் செப்டம்பர் 20-ம் தேதி ஏரியா 51-ஐ முற்றுகையிட்டு அமெரிக்க அரசாங்கம் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்களை வெளிக்கொண்டு வருவதுதான் அந்த நிகழ்வின் நோக்கம். இப்படிப் பல லட்சம் பேர் அங்கே போய் ஏலியன்களை அரசு மறைத்து வைத்திருக்கிறதா என்பதைப் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். இதற்குச் சதிக் கோட்பாட்டாளர்களிடையே வரவேற்பு அமோகமாக இருக்கிறது. இதுவரை அங்கே செல்ல முடிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சதிக் கோட்பாட்டாளர்கள் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைப்பார்கள். அவற்றின் நோக்கம் இந்த உலகம் நம்பிக் கொண்டிருக்கும் விஷயங்களில் இருக்கும் உண்மையை வெளிக் கொண்டுவருவதாகத்தான் இருக்கும். எடுத்துக்காட்டாகப் பூமி கோள வடிவமாகத்தான் இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம். ஆனால், அரசுகள்தான் மக்களை அப்படி இருப்பதாகக் கூறி ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும், உண்மையில் பூமி தட்டையானது எனவும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இன்றும் இருக்கிறது. அதை நிரூபிக்கப் பல முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுவது வழக்கம். இது போன்ற முயற்சிகள் தோல்வியில்தான் முடியும். அவர்களைப் பார்த்து உலகம் சிரிக்கும். அதையும் சமாளிக்கத் தயாராகவே இருப்பார்கள் சதிக் கோட்பாட்டாளர்கள்.

முற்றுகையிடும் திட்டம்
முற்றுகையிடும் திட்டம்

அப்படி ஒன்றாக இந்த ஏரியா 51 முற்றுகையிடும் நிகழ்வும் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதை ஏற்பாடு செய்தவர்கள் விஷயத்தை சீரியஸாகவே நினைத்தாலும், இதன் முடிவு எப்படியிருக்கும் என்பதைப் பலரும் கணித்துவிட முடியும் என்பதால்தான் கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் குவிந்து வரும் மீம்களுக்கு காரணம் அதுதான். செப்டம்பர் 20-ம் தேதி இந்த நிகழ்வுக்காகச் செல்ல முடிவு செய்த லட்சக்கணக்கானோர் ஜாலிக்காக பட்டனை அழுத்தி வைத்தவர்கள்தாம்.

உண்மையாகவே ஏரியா 51ல் என்ன நடக்கிறது ?

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் அமைந்திருக்கிறது இந்த ஹோமி விமான நிலையம் (Homey Airport). இதுதான் ஏரியா 51-னின் அதிகாரபூர்வ பெயர். இந்தப் பகுதி வியட்நாம் போரின்போது சிஐஏ ஆவணங்களில் ஏரியா 51 என்ற ரகசியப் பெயரால் குறிப்பிடப்பட்டது. 1955-ம் ஆண்டில்தான் இங்கே போர் விமானங்கள் தொடர்பான ஆராய்ச்சி தொடங்கியது. ஏரியா 51 டாப் சீக்ரெட் எனப்படும் சிறப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒரு பகுதி. எனவே, இது தொடர்பான தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. புதிய விமானங்களையும், ராணுவத்துக்கான கருவிகளையும் பரிசோதிக்கும் இடமாகவும் ஏரியா 51 செயல்பட்டு வருகிறது.

போர் விமானம்
போர் விமானம்

நீண்ட காலமாக அமெரிக்கா பல வடிவங்களில் போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது. அதனால் இந்தப் பகுதியில் பல வடிவங்களில் போர் விமானங்கள் பறப்பது வழக்கம். அப்படிப் பறக்கும் விமானங்களைத்தான் வேற்றுகிரகவாசிகள் பயன்படுத்தும் பறக்கும் தட்டுகள் என நம்பியிருக்கிறார்கள். இது தவிர பூமிக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகளை அமெரிக்கா இங்கே அடைத்து வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் எனவும் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

ஏரியா 51-ல் ரகசியமாகச் சில விஷயங்கள் இருப்பது என்பது முற்றிலும் உண்மையான விஷயம்தான். அங்கே ராணுவம் தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. இப்படி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இடத்துக்கு பொது மக்களை அமெரிக்கா மட்டுமல்ல, வேறு எந்த நாடும் அனுமதிக்காது. ஒரு திட்டம் தொடர்பான தகவல்கள் எதிரி நாட்டின் கையில் சிக்கக்கூடாது என்பதில் ஒரு நாடு கவனமாக இருப்பது வழக்கம்தான். இங்கே மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதைவிடவும், அங்கே சென்று பார்க்க ஒன்றுமே இல்லையென்பதுதான் இந்த இடத்தின் உண்மை நிலை. ஆனால் ஏலியன்கள், பறக்கும் தட்டுகள் எனக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் கதைகள் அங்கே செல்லும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அதன் காரணமாகவே இங்கே செல்வதற்குப் பலரும் ஆசைப்படுகிறார்கள். இப்போது நடப்பதும் அதுதான்.

ஏரியா 51
ஏரியா 51

பல லட்சம் பேர் இங்கே செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் நிஜமாகவே அங்கே வருவார்கள் என்பது சந்தேகம்தான். உலகம் இதை காமெடியாகப் பார்க்க விமானப் படை இதை சீரியஸான விஷயமாகப் பார்க்கிறது. "நெவாடாவில் இருக்கும் இந்தப் பகுதியானது விமானப்படை சோதனைகள், போர் விமான பயிற்சிகள் நடைபெறும் பகுதி. அங்கே இருக்கும் பாதுகாப்பு வசதிகளைப் பற்றி விவாதிக்க முடியாது. ஆனால், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் நுழைய முயற்சி செய்வது ஆபத்தை விளைவிக்கும்" என அமெரிக்க விமானப் படை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு