Published:Updated:

`15 நாள்களுக்கு உங்கள் அறையிலே இருங்கள்..!' -எகிப்து கப்பலில் சிக்கித் தவிக்கும் 18 தமிழர்கள்

ஏசாரா கப்பல்
ஏசாரா கப்பல்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் எகிப்து கப்பலில் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு வந்துவிட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எகிப்து நாட்டில் 18 தமிழர்கள் கப்பலில் முடங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலத்தைச் சேர்ந்த கிரேண்ட் ராயல் டூர்ஸ் நிறுவனம், எகிப்தில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா
கொரோனா

இதையடுத்து கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அவர்கள் இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். மார்ச் 7-ம் தேதி அவர்கள் தாயகம் திரும்புவதாக இருந்தது.

 `கர்நாடகாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு’ - தீவிர கண்காணிப்பில் குடும்பத்தினர்
 #NowAtVikatan

இதனிடையே, 171 பயணிகளுடன் ஏசாரா என்ற கப்பலில் நைல் நதிக்குச் சென்றுள்ளனர். அந்தக் கப்பலில் ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு உறுதியாக மற்றவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில், மேலும் பலருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

ஏ சாரா கப்பல்
ஏ சாரா கப்பல்

இதையடுத்து, லக்ஷர் என்ற நகரத்தில் அந்தக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த வனிதா மற்றும் அவரது கணவர் ரங்கராஜ் ஆகியோரும் உள்ளனர்.

வனிதா, பொள்ளாச்சியில் சரணாலயம் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். இதுகுறித்து வனிதாவின் மகள் சரண்யா தனது முகநூல் பக்கத்தில், “என்னுடைய தாய், தந்தை உட்பட 18 தமிழர்கள் எகிப்து கப்பலில் சிக்கியுள்ளனர். 33 பயணிகளுக்குக் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

வனிதா ரங்கராஜ்
வனிதா ரங்கராஜ்

சென்னையைச் சேர்ந்த இன்ஜினீயர் ஒருவருக்கும் கொரோனா பாசிட்டிவாகியுள்ளது. 15 நாள்களுக்கு அவரவர் அறைகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்திலும் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை டேக் செய்து பதிவு போட்டார். இதையடுத்து, சரண்யாவைத் தொடர்பு கொண்டு, `அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்' என்று இந்திய தூதரக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அந்த ஒரு இன்ஜினீயரைத் தவிர மற்ற இந்தியர்களை தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூல் பதிவு
முகநூல் பதிவு

முக்கியமாக, சென்னை இன்ஜினீயர் தனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இதனால், அவருக்கு மறுபரிசோதனை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு