Published:Updated:

`உச்சம் தொட்ட பாதிப்பு; அமெரிக்கா, தெற்காசியாவில் மோசமாகும் நிலைமை..!’ - எச்சரிக்கும் WHO

WHO - டெட்ரோஸ்
WHO - டெட்ரோஸ் ( AP )

உலகம் முழுவதும் கொரோனா பரவலின் நிலை நாளுக்குநாள் மிகவும் மோசமாகிக்கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் பரவத் தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த உலகத்தையும் ஆக்கிரமித்து, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போதுவரை சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவலின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியா
இந்தியா
AP

ஜெனீவாவில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், ``சீனாவில் வைரஸ் உறுதியான பிறகு, கிழக்கு ஆசியாதான் வைரஸின் பரவலின் மையமாக இருந்தது, பிறகு ஐரோப்பிய நாடுகள் வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக அறியப்பட்டன. ஆனால், இவை அனைத்தையும் தற்போது அமெரிக்கா முந்திவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் நிலை மெதுவாக சீரடைந்து வருகிறது.

ஆனால், மற்ற நாடுகளில் வைரஸ் பரவலின் நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. உலக அளவில் கிடைக்கும் கொரோனா தரவுகளில் கடந்த 10 நாள்களில் ஒன்பது நாள்கள் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளன. அதிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் மட்டும் எப்போதும் இல்லாத வகையில் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,36,000-க்கும் அதிகமாக உள்ளது.

``கொரோனா மிக விரைவில் இரண்டாம் அலை தாக்குதலை ஏற்படுத்தக்கூடும்!" - எச்சரிக்கும் WHO

ஞாயிற்றுக்கிழமை கிடைத்த கொரோனா தரவுகளில் சுமார் 75 சதவிகிதம், வெறும் 10 நாடுகளில் பதிவாகியுள்ளன. அதிலும், பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் உருவாகியுள்ளன. தற்போது அமெரிக்கா உட்பட பிற நாடுகளில் நடக்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டம், கொரோனா பரவலைக் கடுமையாக்கி வருகிறது. வைரஸ் நிலைமை மேம்பட்டு வரும் நாடுகளில் நடக்கும் இந்தப் போராட்டங்களால் அங்கு மேலும் பாதிப்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

உலக சுகாதார நிறுவனம், நிறவெறிக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தை முழுமையாக ஆதரிக்கிறது. எல்லா வகையான பாகுபாடுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். ஆனால், நிறவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். முடிந்தவரை மற்றவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டராவது விலகியிருங்கள்.

கைகளை நன்கு சுத்தம் செய்யுங்கள், இருமல் வந்தால் முகத்தை மூடிக்கொள்ளுங்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் முகமூடிகளை அணிந்துகொள்ளுங்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் போராட்டக்களத்துக்கு செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருங்கள். மேலும், உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ளுங்கள்” என WHO தலைவர் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு