Published:Updated:

`ஹெச்.ஐ.வி போலதான் கொரோனாவும்; வாழப் பழகிக்கொள்வோம்’ - உலக சுகாதார அமைப்பு

WHO
News
WHO

கொரோனா வைரஸை முழுமையாக அழிக்க முடியாது அதனுடன் இணைந்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என WHO தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரிலிருந்து உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த மனிதக் குலத்தையும் வீட்டுக்குள் சிறை வைத்துவிட்டது. இதன் பிடியிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருந்தும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.4 மில்லியன் ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,98,000 - ஆகவும் உள்ளது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

இது ஒருபுறம் என்றால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மூலம் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். மேலும் ஒரு நாட்டின் பொருளாதாரம் முதல் சர்வதேசப் பொருளாதாரம் வரை அனைத்தும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த முடியாத நாடுகள் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளன. இதனால் வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல் வைரஸை முழுவதும் கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறிய சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் ஊரடங்கை முழுமையாகத் திரும்பப் பெற்றன. ஆனால் தற்போது அங்கும் அறிகுறியே இல்லாமல் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தன்மை பற்றித் தெளிவான முடிவு கிடைக்காமல் ஆராய்ச்சியாளர்களும் திணறி வருகின்றனர். தற்போதைக்கு ஊரடங்கைத் திரும்பப் பெறக் கூடாது அது இரண்டாவது அலைக்கு வழிவகுக்கும் எனத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் அதையும் மீறி தங்கள் நாட்டுப் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சில நாடுகள் ஊரடங்கில் தளர்வு அறிவித்துள்ளன.

மைக்கேல் ரியான்
மைக்கேல் ரியான்

இதனால் வைரஸை முழுமையாக அழிக்க முடியாது அதனுடன் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அதிகமாகக் கவனம் ஈர்த்துள்ளது.

நேற்று ஜெனிவாவில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால தலைவர் மைக்கேல் ரியான் ``முதன்முறையாக மனிதக் குலத்துக்குள் ஒரு புதிய வைரஸ் நுழைந்துள்ளது. எனவே நாம் அதை எப்போது முற்றிலும் அழிப்போம் என்பது கணிக்கமுடியாது. நம் சமூகத்தில் ஏற்கெனவே உள்ள வைரஸ்களைப் போல கொரோனாவும் மாறக்கூடும் மேலும் இதை முற்றிலும் அழிக்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனிதனில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெச்.ஐ.வி வைரஸ் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஆனால் நாம் வைரஸைப் புரிந்துகொண்டு அதனுடன் வாழப் பழகிக்கொண்டோம். அதேபோல்தான் இனி கோவிட் -19 வைரஸுடனும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இது எப்போது நம்மிடமிருந்து விலகும் எப்போது மீண்டும் வரும் என்பதைக் கணிக்க முடியாது. கொரோனாவுக்கு எதிராகப் பல மருந்துகள் சோதனையில் உள்ளன. ஆனால் ஒரு வலிமையான மருந்து எனச் சுட்டிக்காட்டி உறுதி செய்வது கடினமாக உள்ளது” என்று பேசியுள்ளார்.

டெட்ரோஸ்
டெட்ரோஸ்
AP

இவரையடுத்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், “பல நாடுகள் கொரோனாவுக்கு எதிரான வெவ்வேறு நடவடிக்கைகளிலிருந்து வெளியேறி வருகின்றன. ஆனால் அனைத்து நாட்டிலும் எங்கள் பரிந்துரை மற்றும் எச்சரிக்கை இன்னும் உயர்ந்த மட்டத்திலேயே உள்ளது. உலகை இயல்பு நிலைக்குத் திருப்பும் பாதையில் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.