Published:Updated:

`கொரோனா இன்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான்!’ - இத்தாலியின் கருத்தை மறுத்த WHO

கொரோனா
கொரோனா

'கொரோனா இன்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான். நாம் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்றாக இருக்கிறது. அங்கு மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,33,197 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,475- ஆகவும் உள்ளது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த இத்தாலியில், தற்போதுதான் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வரத் தொடங்கியுள்ளனர்.

இத்தாலி
இத்தாலி
AP

இந்நிலையில், தன் நாட்டில் இருக்கும் கொரோனா வைரஸின் நிலை தொடர்பாக இத்தாலியைச் சேர்ந்த Rai தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்த ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்க்ரிலோ, “உண்மையில் கொரோனா வைரஸ் மருத்துவரீதியாக இத்தாலியில் இனி இல்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சோதனை செய்யப்பட்ட வைரஸ் மாதிரியையும் 10 நாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரியையும் ஒப்பிடும்போது, தற்போது வைரஸின் வீரியம் முற்றிலும் குறைந்துள்ளதைக் காட்டியது” எனப் பேசியிருந்தார்.

`2 மாதத்துக்கு முந்தைய நிலை இல்லை; வைரஸ் வலுவிழந்துள்ளது!’- இத்தாலி மருத்துவர்கள் #Corona

இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியோர், மருத்துவர் ஜாங்க்ரிலோவின் கருத்தை முற்றிலும் மறுத்துள்ளனர். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால தலைவர் மைக்கேல் ரியான், “நாம் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா இன்னும் கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் தான். திடீரென வைரஸ் தன் இயல்புநிலையை விடுத்து, குறைந்த பாதிப்பு ஏற்படுத்தும் நோய்க்கிருமியாக இருக்க முடிவு செய்துள்ளது என்ற கருத்துகளை உருவாக்காமல் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

WHO
WHO

இத்தாலியின் தேசிய சுகாதார கவுன்சில் தலைவர் பிராங்கோ லோகடல்லி பேசும்போது, “ஜாங்க்ரிலோவின் கருத்துகளால் நான் முற்றிலும் குழப்பமடைந்தேன். இத்தாலியில் தினமும் உருவாகும் புதிய கொரோனா பாசிடிவ் கேஸ்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே போதும் வைரஸ் வீரியம் குறைந்துள்ளதா என்பதைக் கணிக்க முடியும்” என்று கூறியுள்ளார். இத்தாலியில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

`இது ஒரு நியாயமற்ற போர்’ - கொரோனாவுக்கு சிகிச்சையளித்த 100 இத்தாலி மருத்துவர்கள் மரணம்
அடுத்த கட்டுரைக்கு