Published:Updated:

`மக்கள் மீண்டும் சந்திக்கத் தொடங்கிவிட்டனர்!' -கொரோனா பரவல் வாய்ப்பால் கவலைப்படும் WHO

WHO
WHO

பொருளாதாரத்தையும் மக்கள் வீட்டில் இருப்பதையும் சமமாகக் கையாள அனைத்து நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,41,335 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,352 ஆகவும் உள்ளது. இந்த நிலையில், வைரஸ் பரவல் பற்றியும் அனைத்து நாடுகளின் நிலை தொடர்பாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸும் அவசரகால திட்ட இயக்குநர் ரியானும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர்.

மைக்கேல் ரியான்
மைக்கேல் ரியான்

முதலில் பேசிய ரியான், ``உலகில் அதிகரித்து வரும் தொற்றுநோயை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது உலகளாவிய வைரஸ் பரவலில் அதிகமான தொற்றை அமெரிக்கா தாங்கி வருகிறது. சர்வதேச அளவில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் நான்கு நாடுகள் வட மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவை. இங்கு வைரஸ் பரவல் மிகவும் அதிகமாக உள்ளது.

அதேபோல் வைரஸின் அடுத்த பெரும் ஹாட்ஸ்பாட்டாக பிரேசில் உருவாகி வருகிறது. அங்கு, அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. பிரேசிலில், சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் இன்னும் மோசமாகவே உள்ளன. அங்கு 90% படுக்கைகள் இப்போதே நிரம்பிவிட்டன. உலகளவில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் 8 லட்சம் பாசிட்டிவ் கேஸ்களுடன் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 41,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டனர்.

WHO - டெட்ரோஸ்
WHO - டெட்ரோஸ்
AP

ஐரோப்பாவைப் பொறுத்தவரை அங்கு வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது, இருந்தும் பிற நாடுகளில் அதிகரித்துவரும் பரவலால், ஐரோப்பாகூட பாதுகாப்பாக இருக்க முடியாது. மீண்டும் அங்கு வைரஸ் பரவும் அச்சம் உருவாகியுள்ளது. பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு ஊரடங்கு திறக்கப்படும் அழுத்தம் அதிகரித்துள்ளது. பொதுமுடக்கம் திறக்கப்பட்டதும் மக்கள் மீண்டும் சந்திக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் நோய்ப் பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது ’ எனப் பேசியுள்ளார்.

இவரையடுத்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், ``மிகவும் ஆபத்தான வைரஸுக்கு எதிராக உலகளவில் விழிப்புணர்வு தேவை. முடிந்தவரை மக்கள் வீட்டில் இருப்பதையும் பொருளாதாரத்தையும் சமநிலைப்படுத்த உலக நாடுகள் முயல வேண்டும். கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது பதுக்கப்படாமல் அனைத்து நாடுகளுக்கும் சமமாக வழங்குவதில் உலக சுகாதார நிறுவனம் உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு