Published:Updated:

பாதியிலேயே நிற்கும் பாகிஸ்தான் ஜனநாயகம்!

இம்ரான் கான்
பிரீமியம் ஸ்டோரி
இம்ரான் கான்

எப்படியும் இம்ரான் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் இருந்தன. அவமானத்தைத் தவிர்க்க இம்ரான் ராஜினாமா செய்துவிடுவார் என்று எதிர்பார்த்தன

பாதியிலேயே நிற்கும் பாகிஸ்தான் ஜனநாயகம்!

எப்படியும் இம்ரான் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் இருந்தன. அவமானத்தைத் தவிர்க்க இம்ரான் ராஜினாமா செய்துவிடுவார் என்று எதிர்பார்த்தன

Published:Updated:
இம்ரான் கான்
பிரீமியம் ஸ்டோரி
இம்ரான் கான்

கிரிக்கெட் போட்டியில் டாஸ் ஜெயிக்கும் கேப்டன், ஒன்று பேட்டிங்கைத் தேர்வு செய்யலாம்; அல்லது பௌலிங்கைத் தேர்ந்தெடுக்கலாம். போட்டியையே ஜெயித்துவிட்டதாக அறிவிப்பது விதிமீறல் அல்லவா? பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டனும் பின்னாளில் அரசியலுக்கு வந்து பிரதமராக ஆனவருமான இம்ரான் கான் இப்போது அதைத்தான் செய்திருக்கிறார். அவர் நிகழ்த்திய தந்திரங்களால் இப்போது பாகிஸ்தான் நிச்சயமற்ற எதிர்காலத்தைச் சந்திக்கிறது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் அரசுமீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. `புதிய பாகிஸ்தானை உருவாக்குவோம்' என்ற முழக்கத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் ஆனார் இம்ரான். 342 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் 156 இடங்களே இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சிக்குக் கிடைத்தன. மூன்று சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று 177 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார் அவர். ஆட்சி நான்காவது ஆண்டை நிறைவு செய்ய இருக்கும் இந்த நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்தன.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பூட்டோ குடும்பத்தின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப் நடத்திவரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியுமே அங்கு மாறி மாறி ஆட்சி செய்தன. இம்ரானின் அரசியல் பிரவேசமே இந்தச் சூழலை மாற்றியது. பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ இப்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளால் நவாஸ் ஷெரீப் நாட்டை விட்டே வெளியேறிவிட, அவர் கட்சியை இப்போது தம்பி ஷெபாஸ் ஷெரீப்பும், நவாஸின் மகள் மரியம் நவாஸும் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, இம்ரானுக்கு எதிராக ஒரே அணியில் இணைந்தன. இந்த நேரத்தில் இம்ரான் கட்சியிலிருந்தே 20க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் அவருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர். கூட்டணிக்கட்சியான எம்.க்யூ.எம் திடீரென எதிரணிக்குத் தாவியது. இப்படிப்பட்ட சூழலில்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

எப்படியும் இம்ரான் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் இருந்தன. அவமானத்தைத் தவிர்க்க இம்ரான் ராஜினாமா செய்துவிடுவார் என்று எதிர்பார்த்தன. ஆனால், `கடைசிப் பந்து வீசப்படும்வரை நான் விளையாடுவேன்' என்று ஒரு கிரிக்கெட்டர் போலவே சொன்னார் இம்ரான்.

பிலாவல் பூட்டோவும் ஷெபாஸ் ஷெரீப்பும்
பிலாவல் பூட்டோவும் ஷெபாஸ் ஷெரீப்பும்

ஏப்ரல் 3-ம் தேதி நாடாளுமன்றம் கூடியது. அவையை நடத்திய துணை சபாநாயகர் காசிம் சூரி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடவில்லை. `அந்தத் தீர்மானமே அரசியல் சட்டத்துக்கு விரோதமானது' என்று அறிவித்தார். தன் ஆட்சியை வீழ்த்துவதற்கு வெளிநாடுகள் சதி செய்வதாக இம்ரான் குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் தங்கள் கட்சிப் பேரணியில் அவர் காட்டினார். துணை சபாநாயகர் இதைக் காரணமாகச் சொல்லியே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்தார். `பாகிஸ்தான் அரசியல் சட்டத்தின் பிரிவு 5-ன் படி, அரசுக்கு விசுவாசமாக இருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. எம்.பி-க்களுக்கும் இது பொருந்தும். வெளிநாடுகள் சதி செய்யும் இந்த நேரத்தில் எல்லோரும் அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்' என்பது துணை சபாநாயகர் கொடுத்த விளக்கம்.

துணை சபாநாயகரின் அதிரடியால், இம்ரான் அரசு தப்பிப் பிழைத்தது. உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்தார் இம்ரான். ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி இதை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். எதிர்க்கட்சிகள் இதை ஏற்காமல் போட்டி நாடாளுமன்றம் நடத்தி, ஷெபாஸ் ஷெரீப்பைப் பிரதமராகத் தேர்வு செய்தன. அத்துடன், ஜனாதிபதியைப் பதவிநீக்கம் செய்யும் நடைமுறையிலும் இறங்கின. உடனடியாக அவர்களுடன் சமாதானத்துக்கு வந்த ஜனாதிபதி, இம்ரான் கானை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார். எனவே, இம்ரான் இடைக்காலப் பிரதமராக இருந்தபடி தேர்தலைச் சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்க, நீதிமன்றம் விபரீதமாக முடிவெடுத்தால் இம்ரான் சிறைக்குப் போகும் சூழல்கூட உருவாகலாம்.

முகம்மது அயூப் கான்
முகம்மது அயூப் கான்

இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இரண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டியவையாக இருக்கின்றன.

‘‘ராஜினாமா செய்வது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சந்திப்பது, தேர்தலை எதிர்கொள்வது என்று மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு நிர்வாகம் என்னிடம் சொன்னது’’ என்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக இம்ரான் கான் சொன்னார். நாட்டை ஆட்சி செய்வதே பிரதமர்தான். அவருக்கு மேல் என்ன ‘நிர்வாகம்’ இருக்கிறது?

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பாஜ்வா கடந்த வாரம் இம்ரானைச் சந்தித்தார். அவரைத்தான் ‘நிர்வாகம்’ என்று இம்ரான் குறிப்பிடுகிறார் என்கின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்.

இந்தியாவில் அரசுக்குக் கட்டுப்பட்டதாக ராணுவம் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானில் யார் பிரதமராக வந்தாலும் அவர்கள் ராணுவத்துக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும். சுதந்திரம் வாங்கிய 75 ஆண்டுகளில் பாகிஸ்தானில் எந்தப் பிரதமரும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ததில்லை. இம்ரான் கானுக்கும் அதே கதி நேர்ந்திருக்கிறது. சொல்லப்போனால், ராணுவ ஆட்சியாளர்கள்தான் பாகிஸ்தானில் நீண்ட காலம் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

ஜியா உல் ஹக்
ஜியா உல் ஹக்

பாகிஸ்தான் ராணுவத்தின் முதல் தளபதியான முகம்மது அயூப் கான் 1958-ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானின் அதிபர் ஆனார். கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்றது. மக்கள் போராட்டத்தின் மூலம் ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு ஜுல்பிகர் அலி பூட்டோ அங்கு ஆட்சிக்கு வந்தார். எட்டு ஆண்டுகள் மட்டுமே ஜனநாயகம் நீடித்தது. ராணுவத் தளபதி ஜியா உல் ஹக் 1977-ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடத்தி ஆட்சியைப் பிடித்தார். பிரதமருக்கு மரண தண்டனை விதித்தார். 11 ஆண்டுகள் கழித்து ஒரு விமான விபத்தில் ஜியா உல் ஹக் இறக்கும்வரை அவர் ஆட்சியே தொடர்ந்தது.

ஜியா காலத்தில் ராணுவத் தளபதியின் அதிகாரங்கள் அதிகரித்தன. ஜியாவின் மரணத்துக்குப் பிறகு தேர்தல் மூலம் பிரதமர்கள் பதவிக்கு வந்தாலும், ராணுவத்தை அவர்கள் பகைத்துக்கொண்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும். இதற்கு நவாஸ் ஷெரீப்பே உதாரணம். 1993-ல் ராணுவத் தளபதியாக இருந்த ஆசிப் நவாஸ் ஓய்வுபெற்றார். அந்த இடத்தில் ஜூனியராக இருந்த ஒருவரை நியமிக்க ஆசிப் முடிவு செய்தார். அதைப் பிரதமர் நவாஸ் ஷெரீப் எதிர்த்தார். ராணுவ அதிகாரிகள் அனைவரும் இணைந்து பிரதமரைப் பதவி விலகவைத்தனர்.

பர்வேஸ் முஷாரப்
பர்வேஸ் முஷாரப்

1997-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது நவாஸ், தனக்கு நம்பிக்கையாக இருந்த பர்வேஸ் முஷாரப்பை ராணுவத் தளபதியாக நியமித்தார். நவாஸ் ஷெரீப்புக்கே தெரியாமல் கார்கில் போரில் முஷாரப் இறங்க, கோபத்துடன் முஷாரப்பைப் பதவிநீக்கம் செய்தார் நவாஸ் ஷெரீப். நவாஸைத் துரத்திவிட்டு ராணுவ ஆட்சியை முஷாரப் ஏற்படுத்தினார்.

அதன்பின் பிரதமர்கள் யாரும் ராணுவத்துடன் மோதியதில்லை. இம்ரானும் ஆரம்பத்தில் ராணுவத்துடன் இணக்கமாகவே இருந்தார். ராணுவத் தளபதி ஜாவேத் பாஜ்வா பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிகிறது. அதன்பிறகு தனக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், பாஜ்வாவுக்குப் பதவி நீட்டிப்பு தராமல், ஐ.எஸ்.ஐ தலைவராக இருக்கும் ஃபைஸ் ஹமீத்தை ராணுவத் தளபதியாக நியமிக்க இம்ரான் ஆசைப்பட்டார். இதனால்தான் இம்ரான் வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவம் ஒரு பக்கம் இம்ரானின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றால், அமெரிக்காவும் இன்னொரு காரணம். `நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீறி ஆட்சியில் தொடர்ந்தால், அதன் விளைவுகளை இம்ரான் சந்திக்க வேண்டியிருக்கும்' என்று அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் டொனால்டு லூம் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத்திடம் மிரட்டல் விடுத்தார் என்று குற்றம் சாட்டுகிறார் இம்ரான். தன் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி-க்கள், இஸ்லாமாபாத்தில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கு அடிக்கடி போனதாகவும் குற்றம் சாட்டினார் இம்ரான்.

ஜாவேத் பாஜ்வா
ஜாவேத் பாஜ்வா

ஜோ பைடன் அதிபரான காலத்திலிருந்து அமெரிக்காவுடன் இம்ரானுக்கு உரசல் நீடிக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இம்ரான் கான் வெளிப்படையாக ட்ரம்ப்பை ஆதரித்தார். இது ஜோ பைடனுக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்க அதிபர் பதவியில் அமரும் எவரும் முதலில் போன் செய்து பேசும் உலகத் தலைவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமரும் இருப்பார். அந்த அளவுக்கு அமெரிக்காவும் பாகிஸ்தானும் நெருக்கம். ஆனால், ஜோ பைடன் இதுவரை இம்ரானுடன் பேசவில்லை. பைடனைக் கடுப்பேற்ற ரஷ்யாவுக்குப் பயணம் சென்றார் இம்ரான். இதுவரை பாகிஸ்தான் பிரதமர்கள் யாரும் ரஷ்யாவைக் கண்டுகொண்டதில்லை.

இப்படி அமெரிக்காவுக்கு எதிராகத் தொடர்ந்து இம்ரான் செயல்படுவதை ஜோ பைடன் ரசிக்கவில்லை. அதனால் தன் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா சதி செய்ததாக இம்ரான் நம்புகிறார்.

ஃபைஸ் ஹமீத்
ஃபைஸ் ஹமீத்

ஒரு சுதந்திர தேசத்தின் அரசை ராணுவமும் வெளிநாட்டு சக்திகளும்தான் தீர்மானிக்கின்றன என்றால், அப்படிப்பட்ட ஓர் அரசு நம் எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்றால், இந்தியா அதுகுறித்து நிச்சயம் கவலைப்பட வேண்டியிருக்கிறது.