கட்டுரைகள்
Published:Updated:

மகிந்தவின் ஆசை... ரணிலின் திட்டம்! - என்ன நடக்கிறது இலங்கை அரசியலில்?

ராஜபக்சே
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜபக்சே

பதவிக்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, மக்களின் நிலை மிகவும் மோசமாகவே இருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த மக்கள், ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்களை வீட்டுக்கு அனுப்பினர். அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், அங்கு ஓரளவுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டது. சற்று பதற்றம் தணிந்திருக்கும் தற்போதைய சூழலில், மகிந்த ராஜபக்சே மீண்டும் அதிகாரம் பெறுவதற்கு தன்னுடைய கட்சியினரைவைத்து அரசியல் காய்களை நகர்த்திவருகிறார். மறுபுறம் அதிபர் ரணிலும் தனது பதவிக்காலத்தை நீட்டித்துக்கொள்ளத் திட்டமிட்டுவருகிறார். எதிர்க்கட்சிகளும் ஆட்சியில் பங்குபெற முயன்றுவருகின்றன. இலங்கை அரசியல் சூழல் எப்படி இருக்கிறது.... அங்கு என்ன நடக்கிறது?

மகிந்தவின் ஆசை... ரணிலின் திட்டம்! - என்ன நடக்கிறது இலங்கை அரசியலில்?

ரணிலின் திட்டம்!

ரணில், இலங்கை அதிபராகப் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. அவர் வருகைக்குப் பிறகு, வெளிநாடுகளிலிருந்து ஓரளவுக்கு நிதி கிடைத்ததால், அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடுப் பிரச்னை சற்று குறைந்திருக்கிறது. கடந்த வாரம், நிதியமைச்சர் என்ற முறையில் பட்ஜெட்டையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டார் ரணில். பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து, இலங்கை சுதந்திரா கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரும் தொடர்ச்சியாக ரணிலைச் சந்தித்துவருகின்றனர். `அமைச்சரவையில் ராஜபக்சேவின் இலங்கை பொதுசன முன்னணிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரையும் ஒன்றிணைத்து சர்வ கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும்’ என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில்தான் சுதந்திரா கட்சி தற்போதுவரை செயல்பட்டுவருகிறது. அவர் பிடியிலிருந்து கட்சியைத் தன் பிடிக்குக் கொண்டுவரும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க. சுதந்திரா கட்சி எம்.பி-க்களும் சந்திரிகாவுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினரும், `சர்வ கட்சிஆட்சியமைக்க வேண்டும். அதில் எங்கள் தலைவர் சஜித்தைப் பிரதமராக்க வேண்டும்’ என்று ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், ரணிலோ வேறு திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள். ``நீண்டகாலம் அதிபர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார் ரணில். அதற்காக, தற்போதைய சூழலைப் பயன்படுத்திச் சட்டத்தில் ஏதாவது மாற்றம் கொண்டுவர முடியுமா என்பதை ஆராய்ந்துவருகிறது ரணில் தரப்பு. மேலும், அடுத்த ஆண்டு மார்ச்சில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்தலாமா என்றுகூட யோசித்துக்கொண்டிருக்கிறார் ரணில். அதே நேரம், ராஜபக்சேவின் இலங்கை பொதுசன முன்னணிக் கட்சியின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தேர்தல் நடத்தும் திட்டத்தில் இருக்கிறார். ஆனால், ரணிலை அதிபர் வேட்பாளராக ராஜபக்சே கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்பதும் சந்தேகமே’’ என்கின்றனர்.

மகிந்தவின் ஆசை... ரணிலின் திட்டம்! - என்ன நடக்கிறது இலங்கை அரசியலில்?

பிரதமர் கனவில் மகிந்த!

இலங்கையில் போராட்டமும் பதற்றமும் சற்றுத் தணிந்திருப்பதால், ராஜபக்சே கட்சியினர் முழுவீச்சில் களத்தில் இறங்கிவிட்டனர். ‘‘ராஜபக்சே அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள், கோத்தபய, பசில் ராஜபக்சே ஆகியோருக்கு எதிராகவே ஆக்ரோஷமான எதிர்ப்புகளைப் பதிவு

செய்ததால், கட்சிக்குள் அவர்களுக்கான செல்வாக்கு சரிந்துவிட்டது. கட்சியின் பெரும் பகுதியினர் மகிந்த பக்கமே நிற்கின்றனர். நவம்பர் 18-ம் தேதி, தனது 77-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் மகிந்த. பிறந்தநாளுக்குப் பிறகு, தனக்கு நல்ல காலம் பிறக்கும் என அவர் நம்புகிறார்.

நாடாளுமன்றத்தில் எதை நிறைவேற்ற வேண்டுமென்றாலும் ராஜபக்சே கட்சி எம்.பி-க்களின் ஆதரவு ரணிலுக்குத் தேவைப்படுகிறது. காரணம், ரணில் கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே எம்.பி என்பதுதான். இதையே காரணமாக வைத்து, `மகிந்தவைப் பிரதமராக்க வேண்டும்’ என ரணிலுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர் இலங்கை பொதுசன முன்னணி எம்.பி-க்கள்’’ என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள்.

மேலும், ``ரணில், தேர்தல் அறிவிக்க வாய்ப்பிருப்பதால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இப்போதே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர் ராஜபக்சே கட்சியினர். ராஜபக்சேக்களின் வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட விவகாரங்களை எடுத்துரைத்து மக்கள் மத்தியில் அனுதாபம் தேட முயன்றுவருகின்றனர். ஆனால், கட்சிக் கூட்டங்கள் நடந்த பெரும்பாலான இடங்களிலும் எதிர்ப்புகள் வெளிப்படுகின்றன. எனவே, ரணில் இப்போது மகிந்தவைப் பிரதமராக்கவும் வாய்ப்பில்லை; தேர்தல் நடத்தப்பட்டால், அதில் ராஜபக்சே கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவும் வாய்ப்பில்லை’’ என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மகிந்தவின் ஆசை... ரணிலின் திட்டம்! - என்ன நடக்கிறது இலங்கை அரசியலில்?

மக்களின் அவதி!

பதவிக்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, மக்களின் நிலை மிகவும் மோசமாகவே இருக்கிறது. அரசுக்கு எதிராக முன்னின்று போராடியவர்கள் மீது `பயங்கரவாதச் சட்ட’த்தைப் பயன்படுத்திவருகிறது ரணில் அரசு. `காலி முகத்திடலில் 150 நாள்களுக்கு மேலாக நடந்ததுபோல, இனியொரு போராட்டம் நடந்துவிடவே கூடாது’ என்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன.

விலைவாசி உயர்வை எதிர்த்து ஆங்காங்கே போராடிவரும் மக்கள், ``அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைத்தாலும், அவற்றை வாங்கும் அளவுக்கு எங்களிடம் பணமில்லை. 500 ரூபாய் விலையேற்றிவிட்டு, 50 ரூபாய் குறைக்கின்றனர். பிறகு, 20 ரூபாய் உயர்த்துகின்றனர். கேட்டால், விலைவாசி குறைந்துகொண்டே இருக்கிறது எனக் கதைகட்டுகின்றனர். ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டங்களில் முன்னின் றவர்களைக் கண்டறிந்து, அவர்கள்மீது பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்திச் சிறையிலடைக்கின்றனர். ராஜபக்சேக்களுக்கு ஆதரவாகவே ரணிலும் செயல்படுகிறார்’’ எனக் கொந்தளிக்கின்றனர். ரணில் தரப்பினரோ, ``தொடர்ந்து போராடிக் கொண்டேயிருந்தால் வெளி

நாட்டிலிருந்து வரும் நிதியுதவிகள் தடைப்படும் என்பதால்தான் போராட்டங்களை அரசு ஒடுக்குகிறது’’ என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.

நாடு எவ்வளவு மோசனமான நிலைக்குச் சென்றாலும், மக்களை மறந்துவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அரசியல்வாதிகள் மும்முரமாக இருப்பார்கள் என்பதற்கு இலங்கையின் இன்றைய அரசியல் நிலையே மிகச் சிறந்த உதாரணம்.