Published:Updated:

மோடி போகாத டாக்ஸி… ராகுல் போன டாக்ஸி! | FactCheck

இந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும், போப்புடனான மோடியின் சந்திப்பு மகிழ்ச்சியாகவே அமைந்தது.

ஒரு டாக்ஸியில் பிரதமர் நரேந்திர மோடி சென்று இறங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் நேற்று வைரல் ஆனது. உண்மையில் அது டாக்ஸியா? ஃபேக்ட் செக்கிங் செய்யும் இணையதளங்கள் இதை மறுத்துள்ளன.

மோடி பயணம் செய்த கார்
மோடி பயணம் செய்த கார்

ஜி20 உச்சி மாநாட்டுக்காக இத்தாலி சென்றிருக்கிறார் மோடி. அக்டோபர் 30-ம் தேதி சனிக்கிழமை அவர் வாடிகன் சென்று போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார். இந்த சந்திப்புக்காக ஃபோக்ஸ்வாகன் பஸாத் கார் ஒன்றில் மோடி பயணம் செய்தார். மோடி காரிலிருந்து இறங்குவது, போப்புடன் சந்திப்பை முடித்துவிட்டு மீண்டும் காரில் ஏறுவது என இரண்டு புகைப்படங்கள் வெளியாகின.

இந்தக் காரின் உச்சியில் டாக்ஸி என மஞ்சள் நிற போர்டு இருப்பது மாதிரியும், காரின் பின்பக்கத்தில் டாக்ஸி நிறுவன விளம்பர வாசகம் இருப்பது மாதிரியும் புகைப்படங்கள் அக்டோபர் 31-ம் தேதி ட்விட்டரில் வைரல் ஆகின. ‘அரசுமுறைப் பயணமாகப் போனவருக்கு டாக்ஸி கொடுத்து மட்டம் தட்டி விட்டார்கள்’ என்று பலரும் இதை வைத்து கிண்டல் செய்தனர். ‘மோடி இத்தாலியில் மகிழ்ச்சியாக டாக்ஸியில் பயணம் செய்தார்’ என்று ஒருவர் கிண்டல் செய்ய, ‘4,500 கோடி ரூபாய் விமானத்தில் வந்தவரை 450 ரூபாய் டாக்ஸியில ஏற வச்சிட்டீங்களேடா’ என்று இன்னொருவர் நக்கல் செய்தார். ‘‘அடுத்த முறை மோடி அமெரிக்கா போகும்போது, ‘ஓலா பிடிச்சு ஒயிட் ஹவுஸ் வந்துடுங்க’ என்று ஜோ பைடன் சொல்லிவிடுவார் போல’’ என்று வேறொருவர் கலாய்த்தார்.

Fake: மோடி டாக்ஸி படம்
Fake: மோடி டாக்ஸி படம்

ஆனால், உண்மையில் மோடி பயணம் செய்தது டாக்ஸி இல்லை. அங்கிருக்கும் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த காரில்தான் பயணம் செய்தார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட படங்களில் இதுபோன்ற ‘டாக்ஸி’ பலகை இல்லை. யாரோ போட்டோஷாப் செய்து இதையெல்லாம் சேர்த்திருக்கிறார்கள். இத்தாலி டாக்ஸிக்களில் கறுப்பு நிற போர்டில் வெள்ளை எழுத்துகளில்தான் டாக்ஸி என எழுதியிருக்கும். வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில்தான் டாக்ஸிக்கள் இருக்கும். மோடி பயணம் செய்தது கறுப்பு நிறக் கார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும், போப்புடனான மோடியின் சந்திப்பு மகிழ்ச்சியாகவே அமைந்தது. சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே மோடிக்கு நேரம் கொடுத்திருந்தார் போப். ஆனால், ஒரு மணி நேரம் இருவரும் உரையாடினர். 2013-ம் ஆண்டு போப் பதவியேற்றார் பிரான்சிஸ். அதன்பின் அவரைச் சந்திக்கும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். வாடிகனுக்கு இதற்குமுன் போன இந்தியப் பிரதமர் வாஜ்பாய். 2000 ஜூனில் வாடிகன் சென்ற அவர், அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பாலை சந்தித்தார்.

Modi
Modi

ஆசியாவிலேயே கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இங்கு கடைசியாக வாஜ்பாய் ஆட்சியில் 1999-ம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் வந்திருந்தார். மோடி இப்போது விரைவிலேயே இந்தியா வருமாறு போப் பிரான்சிஸுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அழைப்பை போப் ஏற்றுக்கொண்டுள்ளார். கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கோவா மாநிலத்தில் விரைவில் தேர்தல் வர இருக்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மோடி - போப் சந்திப்பைவிட, இந்த டாக்ஸி விவகாரமே பெரும் பரபரப்பு ஏற்படுத்திவிட்டது.

அதே சனிக்கிழமை இன்னொரு டாக்ஸி சம்பவமும் நடந்தது. கோவா தேர்தலுக்கு முன்னோட்டமாக அந்த மாநிலத்துக்குப் போன காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவாவில் ‘பைலட்’ எனப்படும் டூவீலர் டாக்ஸிக்கள் புகழ்பெற்றவை. சுரங்கத் தொழில் நின்றுபோனதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு இப்படி டூவீலர் டாக்ஸியில் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து போனார் ராகுல். ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதனால் இந்தப் பயணம் எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.

ராகுல் காந்தி - டூவிலட் டாக்ஸியில்...
ராகுல் காந்தி - டூவிலட் டாக்ஸியில்...
மோடி டாக்ஸியில் பயணம் செய்யாமலே வைரல் ஆனார்… ராகுல் டாக்ஸியில் போயும் வைரல் ஆகவில்லை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு