Published:Updated:

தொடர் தாக்குதலில் ரஷ்யா... விட்டுக்கொடுக்காத உக்ரைன்...

உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

உக்ரைன் தலைநகர் கீவ்-வைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யப் படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

தொடர் தாக்குதலில் ரஷ்யா... விட்டுக்கொடுக்காத உக்ரைன்...

உக்ரைன் தலைநகர் கீவ்-வைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யப் படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

Published:Updated:
உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

ஒரு மாதத்தைத் தாண்டியும் நீடிக்கிறது ரஷ்யா-உக்ரைன் போர். ரஷ்யாவின் இடைவிடாத தாக்குதல்களைத் தொடர்ந்து சமாளித்துவருகிறது உக்ரைன். இந்தப் போரில் நிகழ்ந்த சமீபத்திய சம்பவங்கள் இங்கே...

ஹிட்லரிடம் தப்பி... புதின் தாக்குதலில் உயிரிழந்தவர்!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரிலுள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் ரஷ்யா நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில், போரிஸ் என்ற 96 வயது முதியவர் உயிரிழந்தார். அவரது இழப்பு குறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ, ``96 வயதான போரிஸ், ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களிலிருந்து உயிர் தப்பியவர். கார்கிவ் நகரில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். அவரது வீட்டில் ரஷ்யத் துருப்புகள் வெடிகுண்டு வீசியதால் உயிரிழந்துவிட்டார். ஹிட்லரிடமிருந்து உயிர் பிழைத்தவர், தற்போது புதினால் கொல்லப்பட்டிருக்கிறார்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ஹிட்லரை, தனது படைகளால் சுற்றிவளைத்து தற்கொலை செய்யவைத்ததும் இதே ரஷ்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது!

தொடர் தாக்குதலில் ரஷ்யா... விட்டுக்கொடுக்காத உக்ரைன்...

மக்கள்மீது தாக்குதல்!

கடந்த வாரம் உக்ரைனைச் சரணடைந்துவிடுமாறு கடைசி எச்சரிக்கை விடுத்தது ரஷ்யா. அதற்கு, ``ரஷ்யா விடுக்கும் மிரட்டல்களுக்கு உக்ரைன் பணியப்போவதில்லை’’ என்று பதிலடி கொடுத்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இந்த நிலையில், உக்ரைனின் கெர்சன் நகரில் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்தியது ரஷ்ய ராணுவம். ரஷ்யாவின் பிடியிலிருக்கும் கெர்சன் நகரத்தில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ரஷ்யாவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ரஷ்ய ராணுவத்தினர், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதோடு, துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இது தொடர்பான வீடியோவை உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கும் நிலையில், `ஆயுதம் ஏந்தாத பொதுமக்களுக்கு எதிராகத் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது ரஷ்ய ராணுவம். இது போர் விதிகளுக்கு முற்றிலும் எதிரானது’ என்று சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இந்த வீடியோவையும் பகிர்ந்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.

தொடர் தாக்குதலில் ரஷ்யா... விட்டுக்கொடுக்காத உக்ரைன்...

அழிவை ஏற்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள்!

உக்ரைன் தலைநகர் கீவ்-வைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யப் படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஆனாலும், 30 நாள்களுக்கு மேலாக வலிமையான ரஷ்யப் படைகளை, குறைந்த படை பலம்கொண்ட உக்ரைன் சமாளித்துவருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்கள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் இந்தப் போரை உற்றுநோக்குபவர்கள். குறிப்பாக, அமெரிக்கா வழங்கிய ஜாவ்லின் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் பீரங்கிப்படைகள்மீது தீவிர தாக்குதல் நடத்தி, பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கிறது உக்ரைன். இதனால், சில இடங்களில் ரஷ்யாவின் பீரங்கிப் படைகள் பின்வாங்கியிருக்கின்றன. இதையடுத்து, தனது சக்திவாய்ந்த ஆயுதமான Kinzhal ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது ரஷ்யா. ஒலியைவிட 10 மடங்கு வேகமாகப் பயணிக்கும் Kinzhal ஏவுகணை, துல்லியமாக இலக்கைத் தாக்கி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. 2018-ல் இந்த ஏவுகணை அறிமுகப்படுத்தப்பட்டபோது, `இது ரஷ்யாவின் சிறந்த ஆயுதம்’ என்று குறிப்பிட்டிருந்தார் ரஷ்ய அதிபர் புதின்.

போரிஸ்
போரிஸ்

குழந்தைகளைக் கடத்தியதா ரஷ்யா?

ரஷ்யத் தாக்குதலால் உக்ரைனில் சுமார் ஒரு கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்துவிட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்திருக்கிறது. ரஷ்யத் தாக்குதலால் கெர்சன், மரியுபோல் ஆகிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கவில்லை; அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமலும் தவிக்கிறார்கள். இந்த நிலையில்தான், உக்ரைனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திடுக்கிடும் தகவல் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது. ``உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளிலிருந்து 2,389 குழந்தைகளைத் தங்கள் நாட்டுக்கு ரஷ்யப் படைகள் அழைத்துச் சென்றிருப்பதாக உக்ரைன் வெளியுறவுத்துறை சொல்கிறது. இது உதவி அல்ல; கடத்தல்’’ என்கிறது அந்தப் பதிவு. இது பற்றிப் பேசிய உக்ரைன் எம்.பி இன்னா சோவ்சன் (Inna Sovsun), ``உக்ரைன் மக்களை முகாமுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ரஷ்யா கடத்திச் செல்கிறது. ரஷ்யாவுக்குச் சென்ற பின்னர், அவர்களைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி இலவசமாக வேலை வாங்கிக்கொள்கிறது. இது இரண்டாம் உலகப் போரின்போது நாஜிப் படைகள் செய்த வேலைக்குச் சமமானது’’ என்று கொந்தளித்திருக்கிறார்.

புதின் - அன்டோலி சுபைஸ்
புதின் - அன்டோலி சுபைஸ்

ராஜினாமா செய்த புதினின் ஆலோசகர்!

1990-களுக்குப் பின்னர், ரஷ்யாவின் பொருளாதாரக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொண்டவர்களில் முக்கியமானவர் அன்டோலி சுபைஸ். ரஷ்ய அதிபர் புதினை, அவரது ஆரம்பகாலத்திலிருந்தே ஆதரித்துவந்த சுபைஸ், தற்போது புதினின் ஆலோசகராகப் பணியாற்றிவந்தார். சில தினங்களுக்கு முன்னர், மக்கள் மத்தியில் பேசிய புதின், ``ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் தேசத்துரோகிகள்’’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான், ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை எதிர்த்து ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த சுபைஸ், நாட்டைவிட்டும் வெளியேறி புதினுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதேபோல கடந்த வாரம், ரஷ்யாவின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் பணியாற்றிய அர்காடி ட்வோர்கோவிச் என்பவரும், ரஷ்யப் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.