அரசியல்
அலசல்
Published:Updated:

நாம் பார்ப்பது நிஜ புதினே அல்ல... குண்டை தூக்கிப்போடும் உக்ரைன் உளவுத்துறை!

விளாடிமிர் புதின்
பிரீமியம் ஸ்டோரி
News
விளாடிமிர் புதின்

ரஷ்ய அதிபர் புதினுக்குத் தீவிர உடல்நல பாதிப்புகள் இருக்கின்றன. இது இனிமேலும் மிகப்பெரிய ரகசியமாக இருக்க முடியாது

வதந்திகள் சுவாரஸ்யமானவை. அதிலும் சர்வதேச அரங்கில் சக்திவாய்ந்த தலைவர்கள் குறித்த வதந்திகள் வெகு சுவாரஸ்யமானவை. `வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார்’, `சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பெருமூளையில் பாதிப்பு’ உள்ளிட்ட அதிகாரபூர்வமற்ற செய்திகள் இணையத்தைக் கலங்கடித்தன. அந்த வகையில், சமீபகாலமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து வரும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. அதுவும், `பொது நிகழ்ச்சிகளில் நாம் பார்ப்பது நிஜ புதின் அல்ல; அவரைப்போலவே இருக்கும் வேறொருவர்’ என்று உக்ரைன் வெளியிட்டிருக்கும் தகவல் பேரதிர்ச்சியைத் தந்திருக்கிறது!

கைரிலோ புடனோவ்
கைரிலோ புடனோவ்

சந்தேகம் கிளப்பிய உளவுத்துறை

ரஷ்யா - உக்ரைன் நாடுகள், 150 நாள்களுக்கு மேலாகப் போரிட்டுவருகின்றன. இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி யளித்த உக்ரைன் உளவுத்துறையின் தலைவர் கைரிலோ புடனோவ், ``ரஷ்ய அதிபர் புதினுக்குத் தீவிர உடல்நல பாதிப்புகள் இருக்கின்றன. இது இனிமேலும் மிகப்பெரிய ரகசியமாக இருக்க முடியாது. உளவியல் சார்ந்த நோய்களும் அவருக்கு இருக்கின்றன. பொது நிகழ்வுகளில் புதினின் ‘பாடி டபுளை’ப் பயன்படுத்துகிறார்கள். புதினின் பழைய மற்றும் சமீபத்திய புகைப்படங்களை ஒப்பிடும்போது புதினின் காது வித்தியாசமாக இருப்பதே இதற்கு சாட்சி. ஒவ்வொருவரின் கைரேகையும் எப்படித் தனித்தன்மை பெற்றிருக்கிறதோ, அதேபோல காதுகளும் தனித்தன்மையுடன் இருக்கும்.புதினின் ‘பாடி டபுளு’டைய நடை, பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவை வித்தியாசமாக இருக்கின்றன. உற்று கவனித்தால், உயரத்திலும் வித்தியாசத்தைக் காணலாம்’’ என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக கடந்த மாதம் புதின், அரசு முறைப் பயணமாக இரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றிருந்தபோதுகூட இது போன்றதொரு சந்தேகத்தைக் கிளப்பியது உக்ரைன் உளவுத்துறை. `தெஹ்ரானில், விமானத்திலிருந்து புதின் இறங்கிவந்தபோது வித்தியாசமாகத் தென்பட்டார். வழக்கத்தைவிட வேகமாக நடந்து வந்தார். எப்போதும் இருப்பதைவிட, அதிக கவனமாக இருந்தார். எனவே, தெஹ்ரானுக்கு புதினின் ‘பாடி டபுள்’ சென்றிருக்கலாம்’ என்றது உளவுத்துறை. இதைத் தொடர்ந்து தெஹ்ரானில் புதின், விமானத் திலிருந்து இறங்கிவரும் வீடியோ வைரலானது. அதில், அவர் ஒரு கையை மட்டுமே அசைத்துக் கொண்டு வேகமாக நடந்து வந்தார். இந்த நிலையில், மீண்டும் புதினின் ‘பாடி டபுள்’ குறித்து உளவுத்துறையின் தலைவரே பொதுவெளியில் பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரிட்டிஷ் நாளிதழான `டெய்லி ஸ்டார்’ திடுக்கிடும் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ``இவ்வளவு நாள்கள் போரிட்டும் உக்ரைனைக் கைப்பற்ற முடிய வில்லை என்பதால், எட்டு ராணுவ உயரதிகாரி களை பணிநீக்கம் செய்திருக்கிறார் புதின். தன்னைப் படுகொலை செய்துவிட்டு, ராணுவத் தினர் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவார்களோ என்று பயப்படுகிறார். ஆகையால், தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் கூட்டங்களுக்கு புதினின் ‘பாடி டபுளைப்’ பயன்படுத்துகிறார்கள். அந்த டூப்ளிகேட் புதினுக்கு, புதினைப்போல நடந்துகொள்ளப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன’’ என்று அந்தச் செய்தியில் சொல்லப் பட்டிருந்தது.

உடல்நிலை குறித்தும் செய்திகள்

புதினின் உடல்நலக் கோளாறுகள் குறித்தும் பல்வேறு செய்திகளைச் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன. மே மாதத்தில், உலகப் புகழ்பெற்ற `தி இன்டிபெண்டன்ட்’ ஊடகம், ``புதினுக்குப் புற்றுநோய் இருக்கிறது. மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார்’’ என்று செய்தி வெளியிட்டது. அந்தச் சமயத்தில் வேறு சில சர்வதேச ஊடகங்கள், ``புதின் டி.வி-யில் தோன்றிப் பேசும்போது, அவர் என்ன பேச வேண்டுமென்பதை காகிதங்களில் பெரிய எழுத்துகளில் அச்சடித்துக் கொடுக் கிறார்கள். ஒரு காகிதத்தில் இரண்டு வரிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அந்த அளவுக்கு புதினின் பார்வை மங்கிவருகிறது’’ என்று தெரிவித்திருந்தன.

நாம் பார்ப்பது நிஜ புதினே அல்ல... குண்டை தூக்கிப்போடும் உக்ரைன் உளவுத்துறை!

இவை தவிர, `வயதைக் குறைத்துக் காட்ட புதின் காஸ்மெட்டிக் சர்ஜரி மேற்கொண்டிருக் கிறார்’, `புதினுக்கு பார்கின்சன் நோய் (மைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு) இருக்கிறது’ எனப் பல்வேறு தகவல்கள் செய்தித் தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ``70 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் புதின், தினசரி பொதுவெளியில் தோன்றுகிறார். இவ்வளவு சுறுசுறுப்பான தலைவருக்கு நோய் இருக்கிறது என்று எப்படித்தான் சொல்கிறார்களோ?’’ என்று ஒரு முறை கேள்வியெழுப்பியிருந்தார்.

புதின் குறித்து வரும் சர்ச்சைத் தகவல்கள் அனைத்தையுமே, `வெறும் வதந்திகள்; நம்ப வேண்டாம்’ என்ற பதிலைச் சொல்லி மாஸ்கோ நிர்வாகம் தொடர்ந்து மறுத்துவருகிறது. ஆனால், அந்த வதந்திகள் அனைத் திலும் `உடல்நலக் கோளாறு’ என்ற விஷயம் பொதுவாக இருப்பதால், `நெருப்பில்லாமல் புகையாது’ என்ற கண்ணோட்டத்துடனேயே இதை அணுகவேண்டியிருக்கிறது. புதின் என்ற ஒற்றைத் தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரஷ்யா விலிருந்து, உண்மைத் தகவல்கள் வெளிவருவது கடினம்தான். அதேநேரம், உண்மையை ரொம்ப காலத்துக்குப் பூட்டி வைக்கவும் முடியாது!

`பாடி டபுள்’ என்றால் என்ன?

சினிமா சண்டைக் காட்சிகளில் நடிகர்களுக்கு பதிலாக ‘டூப்’ போடும் கலைஞர்களைப்போல, தோற்றத்தில் ஒருவரின் நகல்போலவே இருக்கும் மற்றொருவரை `பாடி டபுள்’ என்பார்கள். சினிமாவைத் தாண்டி, அரசியல்வாதிகளும் தங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது, தங்களைப்போலவே இருக்கும் ஒருவரைப் பொதுவெளிக்கு அனுப்பிய வரலாறுகளும் உண்டு. சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், இராக் அரசியல்வாதி சதாம் உசேன், அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் உள்ளிட்டோர் ஏற்கெனவே பாடி டபுளைப் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.