Published:Updated:

`முதலில் அலர்ட் செய்த ஹீரோ; கண்டித்த போலீஸ்!’ - கொரோனா எச்சரிக்கை விடுத்த மருத்துவர் மரணம்

மருத்துவர் - கொரோனா
மருத்துவர் - கொரோனா

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பற்றி முதன் முதலில் எச்சரிக்கை விடுத்த ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் லீ உயிரிழப்பு.

சீனாவின் ஹுபே மாகாணத்தின் வுகான் நகரில் உள்ள ஒரு இறைச்சி சந்தையிலிருந்து பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் சீனாவில் மட்டும் இதுவரை 560 பேர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கடந்த ஒரு மாதமாகச் சீனாவைப் புரட்டிப் போட்டுள்ள இந்த வைரஸ் பற்றி டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார் ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் லீ வென்லியாங் (Li Wenliang). இவர் வுகான் மத்திய மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார். சரியாக டிசம்பர் 30-ம் தேதி ஒரு நோயாளியைச் சோதனை செய்த லீ, அவருக்கு வைரஸ் தாக்கம் இருந்ததைக் கண்டறிந்து தன் சக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

முதலில் அது சார்ஸ் வைரஸாக இருக்கும் எனச் சந்தேகித்த லீ, தன்னுடன் பணிபுரியும் மருத்துவர்களை மாஸ்க் அணிந்துகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தன் சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். ஆனால் அப்போது இவரது பேச்சை மதிக்காகச் சீன காவலர்கள், `இனிமேல் இது போன்ற வதந்தி பரவும் விஷயங்கள் பற்றிப் பேசக் கூடாது' என்று கண்டித்து அவரிடம் இருந்து ஒரு கடிதம் வாங்கியுள்ளனர். அதற்குப் பிறகு ஜனவரி மாதத்தின் பாதியில்தான் அங்கு வைரஸ் தாக்கம் அதிகரித்து அது கொரோனா வைரஸ் என்று சீன அரசே அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மருத்துவர்  லீ  வென்லியாங்
மருத்துவர் லீ வென்லியாங்

கொரோனா வைரஸைக் கண்டறிந்த எட்டு விசில் ப்ளோவர்களில் (whistleblower - ஒரு பொது அமைப்பில் நடக்கும் தவறு, குற்றம், விநோதங்களைச் சுட்டிக்காட்டுபவர்) இவரும் ஒருவர் என்று சீன மக்கள் லீயை ஹீரோவாகக் கொண்டாடினர். முன்னதாக மருத்துவரிடம் தவறாக நடந்துகொண்டதற்காக ஹுபே போலீஸும் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அதன் பிறகு மருத்துவர் லீ, களத்தில் இறங்கி வைரஸால் பாதிக்கப்பட்ட பிறருக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளார். நாளடைவில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரும் தான் பணியாற்றிய வுகான் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

சீனாவில் கதறிஅழுத அம்மா - மகள் முதல், கேரளாவில் தப்பி ஓடிய இருவர் வரை... கொரோனா அப்டேட்ஸ்!

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மருத்துவர் லீ நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார். மருத்துவரின் இறப்பை அவர் வேலை செய்த மத்திய மருத்துவனை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `` கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் லீ வென்லியாங் பிப்ரவரி 7-ம் தேதி அதிகாலை 2:58 மணிக்கு உயிரிழந்துள்ளார். அவரைக் காக்க நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவர்  லீ  வென்லியாங்
மருத்துவர் லீ வென்லியாங்

மருத்துவர் லீ உயிரிழந்ததற்கு வுகான் உட்பட சீனாவின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்த மக்களும் தங்களின் இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்து வருகின்றனர். ``அவர் மற்றவர் வாழ்வுக்காக எச்சரித்த ஹீரோ” என்று சக மருத்துவர்கள் லீக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பின் செல்ல