Published:Updated:

`வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு!’ - செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து வெளியேறிய ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததால், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலிருந்து ட்ரம்ப் வெளியேறினார்.

அமெரிக்காவில், கொரோனா பரவல் தொடங்கியது முதல் தற்போது வரை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டின் நிலை தொடர்பாகவும், கொரோனாவை எதிர்த்து அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை குறித்தும் பேசிவருகிறார். அவருடன் அந்நாட்டு கொரோனா பரவலைத் தடுக்க நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகளும் தங்கள் கருத்தைத் தெரிவித்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். இந்த நிலையில் நேற்றும் வெள்ளை மாளிகையில் இதே போன்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது, அதிபரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அருகில் வந்து ட்ரம்ப்பின் காதில் ஏதோ முணுமுணுத்தார். அதன் பிறகு `என்ன நடக்கிறது?’ என்று கேட்டுவிட்டு, செய்தியாளர்கள் அறையிலிருந்து வெளியேறிய அவர், ஒன்பது நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ``வெள்ளை மாளிகைக்கு அருகில் ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவரை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இது ஓர் எதிர்பாராத சம்பவம். ஆனால், தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.

`டிஜிட்டல் உலகில் ஏற்பட்ட பெரும் பிளவு!’ - டிக்டாக், வீ சாட் செயலிகளுக்குத் தடைவிதித்த ட்ரம்ப்

சுடப்பட்ட அந்த நபர், தற்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆயுதம் வைத்திருந்த மனிதரின் அடையாளம் மற்றும் அவரின் நோக்கம் பற்றி எதுவும் தெரியவில்லை” என்று கூறியுள்ளார். தொடர்ந்து, ``இந்தச் சம்பவத்தால் பதற்றம் அடைந்திருக்கிறீர்களா?’’ என்று பத்திரிகையாளர்கள் அதிபரிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், ``என் முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரிகிறதா... உலகம் எப்போதுமே ஆபத்துகள் நிறைந்த இடம்தான். இது தனித்துவமான ஒன்று இல்லை. என் பாதுகாப்புப் படையில் இருப்பவர்கள் மிகவும் அருமையானவர்கள். சிறந்தவர்களில் சிறந்தவர்கள். இந்தப் படையுடன் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன்” என்று கூறினார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தைச் சுற்றியிருக்கும் அனைத்துச் சாலைகளும் அடுத்த சில மணி நேரங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டன. அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டு, ஆயுதம் வைத்திருந்த நபர் தொடர்பாகவும், அவர் அங்கு வந்த காரணம் தொடர்பாகவும் விசாரணை செய்யப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``நான் துப்பாக்கிக் குண்டு வெடித்த சத்தத்தைக் கேட்டேன். அதற்கு முன்னதாக ஒருவர் அலறும் சத்தமும் கேட்டது. அது ஒரு ஆணின் குரல். பிறகு ஏழெட்டு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர்” என வெள்ளை மாளிகைக்கு வெளியே போராட்டம் நடத்திய ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்கா : `1.55 லட்சம் உயிரிழப்புகள்!’ - கட்டுப்பாட்டில் உள்ளதாக ட்ரம்ப் தகவல்
அடுத்த கட்டுரைக்கு