ஹெச்1பி விசாவில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு... ட்ரம்ப் உத்தரவால் இந்தியர்களுக்கு என்ன நன்மை?

ஹெச்1பி விசா நடைமுறையில் என்ன மாற்றம் வந்தாலும் திறமையானவர்களுக்கு அமெரிக்காவில் எப்போதும் சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு.
அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணி புரியும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பை முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க தொழிலாளர் நல வாரியம் ஜனவரி 15 அன்று உயர்த்தி ஆணை வெளியிட்டிருந்தது. இந்தியாவிலிருந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெரும்பான்மையானவர்கள் ஹெச்1பி விசா பெற்றுதான் அமெரிக்காவில் உள்ள பல நகரங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
ட்ரம்ப் அரசு கொண்டுவந்த இந்த புதிய சட்டத்தின் மூலம் அங்கு ஹெச்1பி விசா மூலம் பணிபுரியும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர இருக்கிறது. புதிய அறிவிப்பின் மூலம் இந்த ஊதியவரம்பு குறைந்தபட்சம் 16% வரை உயர்கிறது.

ஹெச்1பி விசா என்றால் என்ன?
முதலில் ஹெச்1பி விசா என்றால் என்ன என்று பார்க்கலாம். அமெரிக்க நாடு திறமைசாலிகள் எங்கு இருந்தாலும் அவர்களை தனது நாட்டுக்கு அழைத்து வந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திறமையான வெளிநாட்டவர்களுக்கு இந்த ஹெச்1பி விசா வழங்கி வருகிறது.
தகவல் தொழில்நுட்பத்துறை 2000-மாவது ஆண்டுக்குப் பிறகு, அதிவிரைவில் வளரத் தொடங்கியது. இந்தியா, சீனா போன்ற பல நாடுகளில் இருந்து ஹெச்1பி விசா பெற்று அதிக அளவு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணிபுரியத் தொடங்கினர்.
ட்ரம்ப் அதிபர் ஆவதற்கு முன்பு இந்த விசாவுக்கு ஆட்களைத் தேர்வு செய்வது குலுக்கல் முறையில் நடந்தது. உதாரணத்துக்கு 5 லட்சம் வெளிநாட்டினர் ஹெச்1பி விசா கேட்டு விண்ணப்பம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண்டுக்கு ஒரு லட்சம் விசா வழங்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்தால் 5 லட்சம் விண்ணப்பங்களில் ஒரு லட்சம் நபர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இவ்வாறு இந்தியா மற்றும் சீன நாடுகளிலிருந்து சென்ற ஊழியர்கள் குறைந்த அளவு ஊதியத்தில் வேலை செய்யத் தொடங்கினர். மேலும், அமெரிக்கர்கள் உடன் ஒப்பிட்டால் அதிக நேரம் பணிபுரிவதற்குத் தயாராக இருந்தனர். அவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களும் அதிக அளவில் வெளிநாட்டவரை பணியில் அமர்த்தி குறைந்த ஊதியத்தில் லாபம் பார்க்கத் தொடங்கின. வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனத்துக்கு 100 விசா வேண்டுமென்றால் 1,000 நபர்களுக்கு விண்ணப்பம் செய்தன. அதனால் அவர்கள் நினைத்தபடி தேவையான நபர்களுக்கு விசா கிடைத்தது.
அதிக அளவில் வெளிநாட்டவர்களை பணிக்கு எடுப்பது அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை தட்டிப் பறிப்பதாக இருக்கிறது என்று பெருவாரியான அமெரிக்கர்கள் கருதத் தொடங்கினர்.
ஹெச்1பி விசா வழங்கப்படுவதற்கு முன்பு அந்தப் பணி செய்வதற்கு திறமையான ஊழியரை ஒரு நிறுவனம் முதலில் அமெரிக்காவில் தேட வேண்டும். அந்தப் பணியிடம் தொடர்பான விளம்பரம் அமெரிக்காவில் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தத் திறமைக்கு உரிய நபர் அமெரிக்காவில் இல்லை என்றால்தான் வெளிநாட்டில் இருந்து அந்தப் பணிக்கு ஹெச்1பி விசா விண்ணப்பித்த ஊழியருக்கு விசா வழங்கப்படும். இப்படித்தான் ஹெச்1பி விசாக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

இப்படி குலுக்கல் முறையில் விசா ஒதுக்கீடு செய்யப்படுவது கீழ்க்கண்ட பிரச்னைகளை உடையதாக இருந்தது:
1. திறமையான நபர்களை குலுக்கல் முறையில் தேடுவது சரியான நடைமுறையாக இல்லை என்று அமெரிக்க நிறுவனங்கள் கருதத் தொடங்கின.
2. தகுதி வாய்ந்த நபர் அமெரிக்காவில் இருந்தாலும் அவருக்கு பணி வழங்காமல் வெளிநாட்டவருக்கு இந்திய மற்றும் சீன நிறுவனங்கள் பணி வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
3. இந்திய, சீன நிறுவனங்கள் தமது ஊழியர்களை அதிக நேரம் பணி செய்ய வைப்பதன் மூலம் மறைமுகமாக அமெரிக்கர்களும் அதிக நேரம் வேலை செய்ய பணிக்கப்பட்டனர்.
சென்ற ஆண்டு வெரிசான் நிறுவனத்தின் ஒரு பகுதியை இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் வாங்கியது. அதன் காரணமாக வெரிசான் நிறுவனத்தில் வேலை செய்த அமெரிக்கர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டனர்.
அப்போது பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிக்குச் செல்வதற்கு மறுத்துவிட்டனர். அதற்கான காரணமாகப் பெரும்பான்மையானோர் சொன்னது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் விடுமுறை நாள்கள் குறைவு, ஓய்வுக்கால பலன்கள் குறைவு போன்றவையே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்க வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதைத் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும்பான்மையான அமெரிக்க மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. இந்தத் தேர்தல் வாக்குறுதி அவர் அதிபர் ஆவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஹெச்1பி விசா குலுக்கல் முறையில் நடைபெறுவதற்கு தடை விதித்தார். திறமையானவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் விசா எண்ணிக்கையையும் அமெரிக்க அரசு குறைத்தது. இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் உள்நாட்டு அமெரிக்கர்களுக்குப் பணி வழங்கத் தொடங்கின.
மேலும் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை குறைந்த ஊதியத்தில் வரவழைத்தனர். தனித்துவமான வேலைக்கு எப்படி குறைந்த ஊதியத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள் என்ற கேள்வி இதன் மூலம் எழுந்தது.
அதிக ஸ்கில்ட் வேலை என்றால் அதற்கு அதிக ஊதியம் கொடுத்தால்தான் ஊழியர்கள் கிடைப்பார்கள் என்பது உலக நியதி. அதன் காரணமாகத்தான் ஹெச்1பி விசாவிற்கான குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கு ட்ரம்ப் அரசு ஆணையிட்டது.
ஊதியம் அதிகம் கொடுக்க வேண்டும் என்றால் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூரில் ஆட்களைத் தேடும், உண்மையிலேயே அமெரிக்காவில் ஆட்கள் கிடைக்கவில்லை என்றால் மட்டும்தான் வெளிநாட்டிலிருந்து ஆட்களைக் கொண்டு வரும், அது போல அதிக ஊதியம் வாங்கி வரும் வெளிநாட்டவரும் மிகத் திறமையானவராகத்தான் இருந்தாக வேண்டும் என்று ஒரே கல்லில் மூன்று மாங்காயை ட்ரம்ப் அரசு இதில் அடித்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியாவில் நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த மூன்று ஆண்டுகளில் சுலபமாக அமெரிக்க வேலைக்குச் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டது.
மேலும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ட்ரம்ப் ஹெச்1பி விசா வழங்குவதை ஏப்ரல் மாதத்திலிருந்து நிறுத்தி வைத்தார். அந்தத் தடை இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடர் காலத்தில் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேர்தலில் இப்போது ட்ரம்ப் அரசு தோல்வி அடைந்து விட்டது. புதிய அதிபராக ஜோ பைடனும் பொறுப்பேற்று விட்டார். எனவே ட்ரம்பின் இந்த கடைசி கட்ட அறிவிப்பை பைடனும் ஏற்றுக்கொள்வாரா என்பதைப் பொறுத்தே இந்த உச்ச வரம்பு உயர்வு செயல்படுத்தப்படும்.

ட்ரம்ப் அரசின் மேல் பல எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அவருக்கு பெருவாரியான அமெரிக்கர்களின் ஆதரவு எப்போதும் இருந்தது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலிலும் அவர் கடும் போட்டியை ஏற்படுத்தியிருந்தார். அவர் பதவியை விட்டுச் செல்லும் முன்பு அவர் தேர்தல் அறிக்கையில் அறிவித்த அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அறிவிப்பிற்கு நியாயம் கற்பிப்பதாகவே அவர் அளவில் இந்த முயற்சி இருக்கிறது.
ஹெச்1பி விசா நடைமுறையில் என்ன மாற்றம் வந்தாலும் திறமையானவர்களுக்கு சிவப்புக் கம்பளம் அமெரிக்காவில் எப்போதும் உள்ளது. சீன நாட்டவர்களும் அதிகளவில் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த மாற்றம் இந்தியர்களை விட அதிக அளவிற்கு சீன நாட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. அதனால் இந்த மாற்றம் திறமையான இந்தியர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் பணிபுரிவதற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பையும் கொண்டு வராது. நமது இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் தமது ஆற்றலால் தொடர்ந்து அமெரிக்காவில் கொடி நாட்டுவார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.