Published:Updated:

‘2-வது அலை மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்!’ - அதிகாரியின் எச்சரிக்கையும் ட்ரம்பின் விமர்சனமும்

ட்ரம்ப் - ராபர்ட் ரெட்ஃபீல்ட்
ட்ரம்ப் - ராபர்ட் ரெட்ஃபீல்ட் ( AP )

அமெரிக்காவில் இரண்டாவது அலை வீசினால் அது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறிய அதிகாரியை அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகிலேயே கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு 8 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,000 - த்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள அமெரிக்கா அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கைத் தளர்த்தக் கோரி அந்நாட்டின் பல மாகாணங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ட்ரம்பும் ஆதரவு தெரிவித்து, ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

‘தெரியாமல் நடந்திருந்தால் அது தவறு; ஆனால்...?’  - கொரோனா விஷயத்தில் சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப்

ஆனால் இதற்கு மாகாண ஆளுநர்களும் மருத்துவ நிபுணர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஆளுநர்களுக்கும் அதிபருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. கொரோனா விவகாரத்தில் ஏற்கெனவே தாமதமாகச் செயல்பட்டதினால்தான் தற்போது அமெரிக்கா மிக நெருக்கடியான நிலையில் உள்ளதாகப் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது மீண்டும் ஊரடங்கைத் தளர்த்தினால் அது 2-வது அலை வீச வாய்ப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

ராபர்ட் ரெட்ஃபீல்ட்
ராபர்ட் ரெட்ஃபீல்ட்
AP

இந்நிலையில கொரோனாவின் இரண்டாவது அலை இன்னும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைவர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசியுள்ள ராபர்ட், “குளிர்காலத்தில் அமெரிக்காவில் மீண்டும் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அது தற்போது நாம் கடந்து வந்த பாதையை விட மிகக் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவல் அதிகரிக்கக் கூடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

`சீனாவுக்குள் விசாரணை; ட்ரம்ப் முன்னிறுத்தும் நிபுணர்கள் குழு!' -கொரோனா விவகாரத்தில் முற்றும் மோதல்

கொரோனா தொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ட்ரம்ப், ராபர்ட் ரெட்ஃபீல்டின் கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். ராபர்ட் சொல்வதுபோல் ஒருபோதும் நடக்காது என்றும் அது குறித்து அவர் தெளிவான விளக்கமளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

“காய்ச்சலும், தொற்று நோயும் சேர்ந்து வந்தால் சிக்கலான நிலை உருவாகும் என்று மட்டுமே தான் கூறியதாகவும், 2-வது அலை மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தான் கூறவில்லை” என்று ராபர்ட் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிகாரி ராபர்ட்டையும் அவரின் பேட்டியை பிரசுரித்த பத்திரிகையையும் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு