Published:Updated:

`சரிந்த ஆப்பிள் பொருள்களின் விற்பனை!’ - 4 மில்லியன் டாலர் வரை குறைந்த டிம் குக்கின் சம்பளம்

சர்வதேசப் பொருளாதார சூழல், வர்த்தக நிலைமைகள் மற்றும் அந்நிய செலாவணி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆப்பிள் ஆண்டுதோறும் தனது இலக்குகளை நிர்ணயிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிம் குக்
டிம் குக்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆப்பிள் பொருள்களின் விற்பனை மந்தமாக இருந்ததால், அதன் சிஇஓ டிம் குக்கின் வருடாந்திர சம்பளம் 11.6 மில்லியன் டாலர்களாகச் சரிந்துள்ளது. 2018-ம் ஆண்டு சுமார் 15.7 மில்லியன் டாலர்களை வருடாந்திர சம்பளமாக பெற்றார் குக்.

ஆப்பிள் நிறுவனம்!
ஆப்பிள் நிறுவனம்!

யார் இந்த டிம் குக்?

குக் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இதற்கு முன்னால், டிம் ஆப்பிளின் தலைமை இயக்க அதிகாரியாக அதன் கோ-ஃபவுண்டர் ஸ்டீவ் ஜாப்ஸின் கீழ் பணியாற்றினார். உலகளாவிய விற்பனைக்கான மூத்த துணைத் தலைவராக குக் மார்ச் 1998-ல் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் உலகளாவிய விற்பனை மற்றும் செயல்பாடுகளுக்கான நிர்வாக துணைத் தலைவராக பணியாற்றினார். ஆகஸ்ட் 24, 2011 அன்று அவர் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

தலைமை நிர்வாகியாக இருந்த காலத்தில், சர்வதேச மற்றும் உள்நாட்டு கண்காணிப்பு, இணைய பாதுகாப்பு, பெருநிறுவன வரிவிதிப்பு, அமெரிக்க உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்குக் குரல் கொடுத்தார். குக் நைகி, தேசிய கால்பந்து அறக்கட்டளை போன்றவற்றின் இயக்குநராகவும், டியூக் பல்கலைக்கழகத்தின் அறங்காவலராகவும் பணியாற்றுகிறார்.

டிம் குக்
டிம் குக்

டிம்மின் சம்பளத்தில் சரிவு!

2018-ம் ஆண்டு ஆப்பிளின் விற்பனை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 100 சதவிகிதம் அதிகமாக இருந்தால், டிம் குக்கின், போனஸை சேர்த்து 12 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. ஆனால், 2019-ல் ஆப்பிள் தனது இலக்கைவிட 28% மட்டுமே அதிகமாக விற்பனை செய்துள்ளது. இதனால் டிம்மின் சம்பளம் 7.7 மில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.

சம்பளத்துக்கு அப்பால், குக் 8 மில்லியன் டாலர்களைச் சம்பாதித்துள்ளார். இதில் சுமார் 16,800 டாலர்கள் திட்டமிடலில் பங்காற்றியதற்காகவும், 8,85,000 டாலர்கள் அவரது பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட விமானத்துக்காக ஒதுக்கப்பட்டதாக ஆப்பிளின் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கிறது. பாதுகாப்பு நலனுக்காகவும், செயல்திறனுக்காகவும் அவர் தனிப்பட்ட விமானம் பயன்படுத்துவதாக அறிக்கை பதிவு செய்துள்ளது. பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட விமானம் ஆப்பிளின் இயக்குநர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

 ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம்

சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையைத் தவிர டிம் குக்கிற்கு சுமார் 113 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளும் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேசப் பொருளாதார சூழல், வர்த்தக நிலைமைகள் மற்றும் அந்நிய செலாவணி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆப்பிள் ஆண்டுதோறும் தனது இலக்குகளை நிர்ணயிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற ஊழியர்களின் ஊதியம்

குக் மட்டுமல்லாமல் ஆப்பிள் தலைமை நிதி அதிகாரி லூகா மேஸ்திரி, பொது ஆலோசகர் கேட் ஆடம்ஸ் மற்றும் தலைமை இயக்க அதிகாரி ஜெஃப் வில்லியம்ஸ் ஆகியோரின் போனஸும் 4 மில்லியனில் இருந்து 2.6 மில்லியனாக குறைந்துள்ளது. தற்போது ஆப்பிளில் சராசரியாக ஒரு ஊழியர் 57,596 டாலர்கள் சம்பாதிக்கிறார்.

 பங்குகள்
பங்குகள்

இது கடந்த ஆண்டு 55,426 டாலர்களாக இருந்தது. குக்கின் கடந்த ஆண்டு சம்பளம் ஆப்பிள் ஊழியரின் சம்பளத்தைவிட 201 மடங்கு அதிகமாக இருந்தது. ஆப்பிளின் பங்குகள் 2019-ம் ஆண்டில் சுமார் 89 சதவிகிதம் உயர்வைக் கண்டது. பிப்ரவரி 26 அன்று நடைபெறவிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் ஆப்பிள் பங்குதாரர்கள், நிர்வாகிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தைக் குறித்து முடிவெடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.