Published:Updated:

மெஜாரிட்டியை பிடித்த மேக்ரான்!

மேக்ரான்
பிரீமியம் ஸ்டோரி
மேக்ரான்

15-வது வயதில் தனக்குப் பாடம் எடுத்த ஆசிரியையான பிரிகெட்டியைக் காதலித்தார் மேக்ரான். இருவருக்கும் 25 வயது வித்தியாசம்!

மெஜாரிட்டியை பிடித்த மேக்ரான்!

15-வது வயதில் தனக்குப் பாடம் எடுத்த ஆசிரியையான பிரிகெட்டியைக் காதலித்தார் மேக்ரான். இருவருக்கும் 25 வயது வித்தியாசம்!

Published:Updated:
மேக்ரான்
பிரீமியம் ஸ்டோரி
மேக்ரான்

வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் அதிபராக மீண்டும் தேர்வாகியிருக்கிறார் இமானுவேல் மேக்ரான். இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள், கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியது... எனக் கடந்த சில ஆண்டுகளாக, சர்வதேச அரசியலில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று மேக்ரான். பிரான்ஸ் அரசியலில் மேக்ரான் விஸ்வரூபம் எடுத்தது எப்படி?

பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற மேக்ரான், வணிகம் - வங்கி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவந்தார். அரசியல் ஆர்வத்தால் 2004-ல் சோஷியலிசக் கட்சியில் இணைந்தாலும், 2011 வரை தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. 2012-ம் ஆண்டுதான் மேக்ரானின் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பித்தது என்று சொல்லலாம்... அப்போது பிரான்ஸின் அதிபராக இருந்த பிரான்ஸ்வா ஹொலாந்தே, தன் ஆலோசகர்களில் ஒருவராக மேக்ரானை நியமித்தார். பிரான்ஸின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய மேக்ரானின் பரிந்துரைகள் அதிபரை வெகுவாகக் கவர்ந்தன. இரண்டே ஆண்டுகள்தான்... 2014-ல் பிரான்ஸின் தொழில், வணிகத்துறை அமைச்சரானார் மேக்ரான். அமைச்சரானதும், பிரான்ஸின் பொருளாதாரத் திட்டங்களில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

மெஜாரிட்டியை பிடித்த மேக்ரான்!

வயது கடந்த காதல்!

15-வது வயதில் தனக்குப் பாடம் எடுத்த ஆசிரியையான பிரிகெட்டியைக் காதலித்தார் மேக்ரான். இருவருக்கும் 25 வயது வித்தியாசம்! இதனால், மேக்ரான் வீட்டில் இவர்களின் காதலுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாதவர் தனக்கு 18 வயது நிறைவடையும் வரை காத்திருந்து, அதன் பிறகு வீட்டைவிட்டு வெளியேறி பிரிகெட்டியைக் கரம்பிடித்தார். அமைச்சர் பதவியேற்ற பிறகு மேக்ரான் - பிரிகெட்டி காதல் கதை பிரான்ஸ் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானது.

2016-ல் அரசியலில் அதிரடியை நிகழ்த்தினார் மேக்ரான்... தனது அமைச்சர் பதவி மற்றும் சோஷியலிசக் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, `என் மார்ச்சே’ என்ற கட்சியைத் தொடங்கியவர், ‘நான் இடதுசாரி அல்ல, மையவாதி’ என்று அறிவித்தார். 2017-ல் பிரான்ஸ் முழுவதும் மேலோங்கியிருந்த அமெரிக்க எதிர்ப்பைத் தனக்குச் சாதகமாக்கி பிரசாரம் செய்தவர், அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று அதிபரானார். குறைந்த வயதில் (39) பிரான்ஸ் அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட முதல் நபர் என்ற பெருமையும் மேக்ரானுக்குக் கிடைத்தது.

மேக்ரான் மீது அதிருப்தி!

தன்னை மையவாதி என்று அழைத்துக்கொண்டாலும், வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிரானவராகவே திகழ்ந்தார் மேக்ரான். அதேசமயம், 2020-க்குப் பிறகு மெதுவாக வலதுசாரிக் கொள்கைகள் பக்கமும் அவர் சாயத் தொடங்கியதால், அவரது கட்சிக்குள்ளேயே அதிருப்திகள் எழத் தொடங்கின. அரசின் கொள்கைகள் சில சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகக் கூறி அவரின் ஆதரவாளர்கள் சிலரே மேக்ரானுக்கு எதிராகத் திரும்பினர். கொரோனாவை ஒழுங்காகக் கட்டுப்படுத்தாதது, 2020-ல் பிரான்ஸில் நடந்த இஸ்லாமியர் மீதான தாக்குதல்கள் உள்ளிட்டவை மேக்ரான் அரசுமீது மேலும் அதிருப்தியை அதிகரிக்கச் செய்தன.

இந்த நிலையில்தான் வருகின்ற மே 13-ம் தேதியுடன் மேக்ரானின் அதிபர் பதவிக்காலம் நிறைவடையவிருக்கும் நிலையில் பிரான்ஸில் அதிபர் தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கியது. பிரான்ஸ் அதிபர் தேர்தலில், முழுப் பெரும்பான்மை (Absolute Majority) முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, முதல் சுற்றில் வேட்பாளர் ஒருவருக்கு 50 சதவிகித வாக்குகள் கிடைத்துவிட்டால் அவரே அதிபராகத் தேர்வு செய்யப்படுவார். யாருக்கும் 50 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காவிட்டால், இரண்டாம் சுற்றுத் தேர்தல் நடைபெறும். அதன்படி ஏப்ரல் 10 அன்று நடந்த முதல் சுற்றுத் தேர்தல் முடிவுகளில் மேக்ரான், லே பென் ஆகியோர் முறையே முதலிரண்டு இடங்களைப் பிடித்தனர். தொடர்ந்து நடந்த இரண்டாவது சுற்றுத் தேர்தலில் 58.5 சதவிகித வாக்குகளைப் பெற்று அதிபரானார் மேக்ரான்!

மெஜாரிட்டியை பிடித்த மேக்ரான்!

“நோ மேக்ரான்... நோ லே பென்...”

முன்னதாக இரண்டாம் சுற்றுத் தேர்தலின்போதே மேக்ரான், லே பென் இருவருக்கும் எதிராக `நோ மேக்ரான்... நோ லே பென்’ என்ற கோஷங்களோடு பிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ``தீவிர வலதுசாரியான லே பென் அதிபரானால் ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்படும். அதேபோல பழைமைவாதத்தையும், சுற்றுச்சூழலுக்கு எதிரான கொள்கைகளையும் பிரகடனப்படுத்தும் மேக்ரான் அதிபரானால், பிரான்ஸின் எதிர்காலத்துக்கு ஆபத்து ஏற்படும்’’ என்று போராட்டக்காரர்கள் போர்க்கொடி தூக்கினர். மேக்ரான் வெற்றிபெற்ற பிறகும் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்ததால், ஈஃபில் டவர் முன்பாக நடைபெற்ற வெற்றிப் பேரணியில் பேசிய அவர், ``இது எனது கடந்த ஆட்சியின் தொடர்ச்சியாக இருக்காது. புது அரசாக இருக்கும்’’ என்று போராட்டக்காரர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சர்வதேசத் தலைவராகத் துடிக்கிறாரா மேக்ரான்?

பிரான்ஸ் அரசியலை உற்று நோக்கும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், ``ஜெர்மனியின் இரும்புப் பெண்மணி ஏஞ்சலா மெர்க்கல் அரசியலிலிருந்து விலகிய பிறகு, ஐரோப்பியக் கண்டத்தில் புதினுக்குப் பிறகு சக்திவாய்ந்த தலைவராகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நினைக்கிறார் மேக்ரான். புதினுடன் நட்புறவில் இருக்கும்போதிலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கிவருவது மேக்ரானின் இரட்டை வேட அரசியலைக் காட்டுகிறது. சர்வதேச அரசியலில் தனித்த இடத்தைப் பிடிக்கவும், 2022 தேர்தலில் அதிபர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவும் இந்தப் போரைப் பயன்படுத்திக்கொண்டார் மேக்ரான்’’ என்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் வசிக்கும் 4,564 பிரெஞ்சு குடிமக்கள் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism