கிம் ஜாங் உன் வடகொரிய அதிபர் சர்வாதிகாரி. கொரோனா அச்சம் உலகம் முழுக்க பரவியிருக்கும் இந்த நேரத்திலும் ஒரு சர்வாதிகாரியின் பெயர் கடந்த சில வாரங்களாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து வருகிறது. மற்ற நாடுகளைப் போல் வடகொரியாவிலிருந்து எந்தத் தகவலும் எளிதில் கிடைத்துவிடாது. அரசுத் தரப்பிலிருந்து சொல்லப்படுவது மட்டும்தான் செய்தி.

ஏப்ரல் 15-ம் தேதி வடகொரியாவில் மிகவும் முக்கியநாளாக பார்க்கப்படுகிறது. வடகொரியாவை உருவாக்கிய கிம் இல் சுங் பிறந்தநாள் விழா ஏப்ரல் 15-ம் தேதி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் அதிபர் கலந்துகொள்ளவில்லை. கிம் இல் சுங் வேறுயாரும் இல்லை தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா. வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு அடித்தளமிட்டவர். இதில் கிம் கலந்துகொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏப்ரல் 11-ம் தேதிக்குப் பின்னர் பொதுநிகழ்ச்சிகள் எதிலும் கிம் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல்கள் உலகநாடுகளை எட்டியது.
இதையடுத்து கிம் தொடர்பான வதந்திகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. கிம் தொடர்பாக உறுதியான எந்தத் தகவல்களும் வெளியே வராத நிலையில், அடுத்த அதிபர் யார் என்ற விவாதங்கள் எழுந்துள்ளது. நாம் அதற்குள் செல்ல வேண்டாம். கிம் இறந்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.

கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதன்பின்னர் அவர் கோமாநிலைக்குச் சென்றுவிட்டதாகவும் ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சீன பத்திரிகையாளர் ஷிஜியான் சிங் ஷோ வடகொரிய அதிபர் கிம் இறந்துவிட்டார் என்ற தகவல் நம்பகமான இடத்தில் இருந்து வந்துள்ளது எனக் கூறுகிறார்.
இந்த நிலையில், சவப்பெட்டியில் கிம் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கண்ணாடிப் பேழையில் கிம் படுக்கவைக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சுற்றிலும் மலர்கள் வைக்கப்பட்டுள்ளது. சிவப்புநிற துணி அவரது உடலின் மீது போர்த்தி இருப்பது போன்ற அந்தப்படம் சமூகவலைதளத்தில் சுற்றி வருகிறது. இந்தப்படத்தைக் கொண்டு கிம் இறந்துவிட்டார் என சிலர் கதைகளை கட்டிவருகிறார்கள்.

இது உண்மையான புகைப்படம் அல்ல எடிட் செய்யப்பட்ட புகைப்படம் எனக் கூறப்படுகிறது. வடகொரிய முன்னாள் அதிபரும் கிம் ஜாங் உன் தந்தையுமான கிம் ஜொங் இல் 2011-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது எடிட் செய்து கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்பது போல் சிலர் சித்திரித்து வருகின்றனர்.
கிம் ஜொங் இல் இறுதிச்சடங்கு புகைப்படத்தையும் இப்போது இணையத்தில் சுற்றிவரும் கிம் படம் எனக் கூறும் இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த விவரம் தெரியவரும். இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான நிலையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. தலையணையில் இருக்கும் வடிவமைப்பு. புகைப்படம் எடுக்கப்பட்ட கோணம் ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளது. 2014-ம் ஆண்டு இப்படித்தான் கிம் திடீரென மாயமானார், பிறகு திரும்பி வந்தார். கிம் தொடர்பான சந்தேகங்களுக்கு அவரே வந்து விடையளித்தால் உண்டு. எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.