Published:Updated:

துப்பாக்கிச்சூடு நடத்திய போதைக் கும்பல்; மனிதக் கேடயமான மகன்! -அமெரிக்காவை உலுக்கிய உச்சகட்ட கொடூரம்

அமெரிக்காவில், போதைப்பொருள் கும்பலுக்கும் அதனை வாங்கச் சென்றவருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், தன் மகனைக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளார் தந்தை.

தந்தை நஃபீஸ்
தந்தை நஃபீஸ் ( Twitter )

வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா (Pennsylvania) என்ற மாகாணத்தில் வசித்துவருபவர், நஃபீஸ் மன்ரோ ( Nafes Monroe). இவரின் 11 மாத குழந்தை, யாசீம் முனீர் ஜென்கின்ஸ். அமெரிக்காவில், போதைப்பொருள்கள் விற்பனை வெகுகாலமாக மறைமுகமாக நடந்துவருகிறது.

நஃபீஸ்
நஃபீஸ்
Twitter

இந்நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி தன் இரண்டாவது மனைவி, நண்பர், குழந்தை ஆகியோருடன் போதைப்பொருள் வாங்கச் சென்றுள்ளார், நஃபீஸ். விற்பனையாளர்களிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு பொருளை வாங்கிக்கொண்டு காரில் ஏறியபோது, அந்தக் கும்பல் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. போதைப் பொருள் வாங்குவதற்காக நஃபீஸ் கள்ளநோட்டைப் பயன்படுத்தியதால் கடுப்பான கும்பல், அவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், காரின் முன் இருக்கையிலிருந்த நஃபீஸின் இரண்டாவது மனைவியும் நண்பரும் இறங்கி ஓடியுள்ளனர். அதற்குள் அந்தக் கும்பல் நஃபீஸின் காருக்கு அருகில் வந்து, தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தான் பெற்ற குழந்தையை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளார் தந்தை. இதனால் 11 மாத குழந்தைமீது நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளன. தற்போது, குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறது.

துப்பாக்கி
துப்பாக்கி

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள போலீஸ் அதிகாரி அந்தோணி வோசி, “இந்த வழக்கு விசாரணையில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில்தான் குழந்தை காயமடைந்தது என முதலில் கூறப்பட்டது. பின்னர், நஃபீஸிடம் நடந்த விசாரணையில், அவர் தன் குழந்தையை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது. நஃபீஸ், கள்ளநோட்டு பயன்படுத்துவது இது முதல்முறையல்ல.

`உன் தங்கையைக் கொன்றுவிட்டேன்... சாவி பூந்தொட்டியில்!'- அமெரிக்காவில் இந்திய கணவனின் விபரீதச் செயல்

பாதுகாப்பு இல்லாமல், போதைப்பொருள் வாங்க நஃபீஸ் சென்றபோது, வேண்டுமென்றே தன் குழந்தையையும் அழைத்துச்சென்றதாக நாங்கள் நம்புகிறோம் அல்லது குழந்தை தன்னுடன் இருந்தால் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அழைத்துச்சென்றிருக்கலாம். மேலும், குழந்தை காயமடைந்த பிறகு நஃபீஸ் நேராக மருத்துவமனைக்குச் செல்லாமல், முதலில் தன் வீட்டுக்குச்சென்றுவிட்டு பின்னர், குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். நஃபீஸ் கைதுசெய்யப்பட்ட பிறகுதான் உண்மை வெளியில் வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை யாசீம் முனீர் ஜென்கின்ஸ்
குழந்தை யாசீம் முனீர் ஜென்கின்ஸ்
Twitter

குழந்தையின் நிலை குறித்து நஃபீஸின் முதல் மனைவி பேசுகையில், “ என் குழந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான். அவன் அப்பாவி, மிகவும் விலை மதிப்பற்றவன். அவனுடைய புன்னகைக்கு ஈடாக எதுவுமே இல்லை. அவனின் இந்த நிலைக்கு இதயமற்றவர்களே காரணம். இந்தக் கொடூர நிகழ்வின் பின்னால் யார் உள்ளார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

என் மகன் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்ய வேண்டும். அவனுக்கு நீதி கிடைக்கும் வரை என்னால் உண்ணவும் உறங்கவும் முடியாது. என் மகனின் இந்த நிலைக்குக் காரணமானவர்கள் நிச்சயம் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்” எனக் கடந்த மாதம் 'ஏபிசி' ஊடகத்திடம் கலங்கியவாறு தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நஃபீஸ், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.