`வாரத்தில் 4 நாள்கள் அலுவலகம்... 6 மணி நேரம் வேலை!'- ஆச்சர்யப்படுத்தும் சன்னா மரின்

இதற்கு முன்னுதாரணமாக இருப்பது பின்லாந்தின் அண்டை நாடான ஸ்வீடன். அங்கு அலுவலக நேரம் 6 மணிநேரம் மட்டுமே. இந்தக் கோட்பாட்டை அவர்கள் நீண்ட நாள்களாகப் பின்பற்றி வருகின்றனர்.
உலகின் இளைய பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் சன்னா மரின். 34 வயதான இவர், கடந்த டிசம்பர் 6-ம் தேதி பின்லாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமரும் இவரே. இப்படி ஏராளமான பெருமைகளுக்குச் சொந்தக்காரரான சன்னாவிடமிருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் உள்ளன.

இந்த நிலையில், பின்லாந்து நாட்டில் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாகவும் 6 மணி நேரம் அலுவலக நேரமாகவும் குறைப்பதற்குக் கோரிக்கை விடுத்துள்ளார் சன்னா. தற்போது அங்கு 5 நாள்கள், 8 மணி நேர வேலை என்பது விதிமுறை. ஆனால், 4 நாள்களாகக் குறைப்பதிலிருக்கும் நன்மையைக் கூறி சன்னா தன்னுடைய ஆதரவாளர்களுடன் இதற்கான சோதனை காலத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே சன்னா போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகப் பணியாற்றியபோது, ``வாரத்தில் 4 நாள்கள் அலுவலகம், 6 மணி நேரம் வேலை என ஏன் இருக்கக் கூடாது... 8 மணிநேரம் உண்மையில் நல்ல உற்பத்தியைக் கொடுக்கிறதா...

மக்கள் தங்களின் குடும்பம், நண்பர்கள், பொழுதுபோக்குகள் மற்றும் கலாசாரம் போன்ற வாழ்க்கையின் பிற அம்சங்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அதற்கு முழுத் தகுதியானவர்கள் அவர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
இதற்கு முன்னுதாரணமாக இருப்பது பின்லாந்தின் அண்டை நாடான ஸ்வீடன். அங்கு அலுவலக நேரம் 6 மணிநேரம் மட்டுமே. இந்தக் கோட்பாட்டை அவர்கள் நீண்ட நாள்களாகப் பின்பற்றி வருகின்றனர். இந்தக் கொள்கையை ஸ்வீடன் நாடு செயல்படுத்தியபோது, ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், அதிக உற்பத்தித் திறனுடனும் இருப்பதாகக் கண்டறிந்தனர். மேலும், குறைக்கப்பட்ட வேலை நேரத்தினால், சேவைகள் விரிவாக்கப்பட்டு, அதிகமான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இதன் விளைவாக வரி வருவாய் அதிகரித்தது. இதை முதல்முதலில் சோதனை செய்த நிறுவனம் டொயோட்டா. அந்நேரத்தில் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் சந்தோஷமாகவும் அதே சமயத்தில் அதிக உற்பத்தியும் கொடுப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இப்படி ஏராளமான பாசிட்டிவ் விஷயங்கள் கொண்டிருப்பதால், தற்போது சன்னா மரின் தன்னுடைய நாட்டு மக்களுக்கும் இப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார்.
`இப்படியொரு மாற்றம் இங்க வராதா' என்கிற உங்கள் மைண்டு வாய்ஸ் வெளியில் கேக்குது பாஸ்!