Published:Updated:

கொரோனா:`மக்கள்தான் ஹீரோக்கள்!' - 4 மாதங்களுக்குப் பிறகு உயிரிழப்பு இல்லாத நியூயார்க்

நியூயார்க்
நியூயார்க் ( AP )

நியூயார்க்கில் கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக நேற்று கொரோனாவால் ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி தற்போது சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,42,559 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,71,701 ஆகவும் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 75,88,789 ஆகவும் அதிகரித்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

நியூயார்க்
நியூயார்க்
AP

அதிலும், குறிப்பாக நியூயார்க் நகரம் கொரோனாவின் பெரும் ஹாட்ஸ்பாட்டாக இருந்தது. மொத்த அமெரிக்காவிலும் இதுவரைக்கும் 34 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் நியூயார்க்கில் மட்டும் 4 லட்சம் பேர் உள்ளனர். மார்ச் 11-ம் தேதி முதன் முறையாக நியூயார்க்கில் கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டது. மார்ச் மாத இறுதிக்குள் நோய்த் தொற்று பல மடங்கு அதிகரித்தது.

`2 ட்ரக்குகள் முழுவதும் அழுகிய உடல்கள்’ - நியூயார்க்கின் மோசமான நிலையை உணர்த்தும் சம்பவம் #Corona

ஏப்ரல் 9-ம் தேதி எப்போதும் இல்லாத வகையில் ஒரேநாளில் சுமார் 799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த நிகழ்வு மொத்த அமெரிக்காவையும் அதிரவைத்தது. மொத்தமாக அங்கு 18,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நியூயார்க்கில் வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடுமையான ஊரடங்கு, தொடர் பரிசோதனை, சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவால் நேற்று அங்கு 341 பேருக்கு பாசிட்டிவ் முடிவுகள் வந்துள்ளன அதேநேரம் கடந்த 4 மாதத்தில் முதன்முறையாகக் கொரோனாவால் ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை.

நியூயார்க்
நியூயார்க்
AP

“நியூயார்க்கைச் சேர்ந்த மக்கள்தான் இந்தக் கதையின் ஹீரோக்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும் அரசு ஆலோசனைகளைப் பின்பற்றியும் அனைவரின் நலனுக்காகவும் இணைந்து செயல்பட்டனர். எங்கள் நகரை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பதன் அர்த்தம் என்ன என்பதை நிரூபிக்க கோவிட் தடுப்புப் பணிகள் அதிவேகமாக முடுக்கிவிடப்பட்டன.

இதன் விளைவுதான் உயிரிழப்புகள் இல்லாத நாள் வந்துள்ளது. அதே நேரம் நாட்டின் பல பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வருவதால் நியூயார்க்கில் தற்போது இருக்கும் பாதுகாப்பை எங்களால் குறைக்க முடியாது. வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட எங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வோம்” என நியூயார்க் சிட்டி ஹாலின் செய்தித் தொடர்பாளர் ஏவரி கோஹன் (Avery Cohen ) தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு