Published:Updated:

`இரண்டு வாரத்தில் 23 திருமணங்கள், 23 விவாகரத்துகள்! - இலவச வீட்டுக்காக மோசடி செய்த சீன குடும்பம்

சீனாவில் அரசு வழங்கும் இலவச வீடுகளைப் பெற, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள்ளேயே மாறி மாறி திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றுள்ளனர்.

Marriage
Marriage

கிழக்கு சீனாவின் ஸேஜியாங் (Zhejiang) மாகாணத்தில் இருக்கும் லிஷூய் (Lishui) என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தின் மேம்பாட்டுப் பணிக்காக, அங்குள்ள மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தருகிறது சீன அரசு . தற்போது அந்த மக்கள் இருக்கும் இடத்தை அரசு எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக அதே கிராமத்தில் வேறு இடத்தில் 40 சதுர மீட்டர் அளவிலான வீடுகளை இலவசமாக வழங்கி வருகிறது.

China
China

அங்குள்ள மக்களுக்குச் சொந்தமாக நிலம் இருந்தாலும், இல்லையென்றாலும் தற்போது அரசு தரும் இலவச வீடுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பான் (pan) என்பவரின் குடும்பம், தங்கள் உறவினர்களையே மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 11 வீடுகளை முறைகேடாகப் பெற்றுள்ளனர் என சீன ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

'அமெரிக்கக் கண்டம் அளவுக்கு காடுகள் வேண்டும். இல்லையென்றால்....!' எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

பான் என்பவர் தன் மனைவி ஷியை (Shi) விவாகரத்து செய்துவிட்டு இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அரசு இலவச வீடுகள் வழங்கும் கிராமத்தில்தான் தற்போது ஷி வசித்து வந்துள்ளார். அரசின் அறிவிப்பை அறிந்த பான், விவாகரத்து செய்த தன் மனைவி ஷியை மீண்டும் திருமணம் செய்துகொண்டு அந்தச் சான்றிதழை அரசிடம் காட்டி, பானும் இலவச வீட்டில் வாழத் தகுதியைப் பெற்றுள்ளார்.

House
House

அவருக்கு வீடு கிடைத்த பிறகு, ஷியை விவாகரத்து செய்துவிட்டு தன் அண்ணியைத் திருமணம் செய்துகொண்டு மற்றொரு வீடு பெறுகிறார், பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு அண்ணியின் தங்கையைத் திருமணம் செய்து மூன்றாவது வீடு பெற்று அவரையும் விவாகரத்து செய்துள்ளார். இதே போன்று ஷியும் தன் முன்னாள் கணவரைத் திருமணம் செய்து வீடு பெற்றுள்ளார், பானின் தந்தையும் இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து வீடு பெற்றுள்ளார்.

வெறும் இரண்டு வாரத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 11 பேர், தங்களுக்குள்ளேயே 23 முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் இந்தக் குடும்பத்துக்கு 11 இலவச வீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிராம மேம்பாட்டு அதிகாரிகள், பான் குடும்பத்தினரின் மோசடி தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்துதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Arrest
Arrest

மோசடி உறுதியான பிறகு, பான் குடும்ப உறுப்பினர்கள் 11 பேரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்த மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்த நான்கு பேரைத் தவிர, மற்ற அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று அந்தக் கிராமத்தில் உள்ள மற்றவர்கள் மோசடி செய்துள்ளனரா என்ற விசாரணையில் இறங்கியுள்ளனர் சீன அதிகாரிகள்.