Published:Updated:

இமானுவேல் மேக்ரான்: பொதுவெளியில் பிரான்ஸ் அதிபரைத் தாக்கிய நபர்! - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொதுவெளியில் தாக்கப்பட்ட அதிபர் இமானுவேல்
பொதுவெளியில் தாக்கப்பட்ட அதிபர் இமானுவேல்

பிரான்ஸில் கொரோனா பரவல் தணிந்து இயல்புநிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் அதிபர் இமானுவேல் மேக்ரானை பொது இடத்தில்வைத்து மர்ம நபர் ஒருவர் கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா முதலாம் அலையின்போது நோய் பாதிப்பு மிகுதியாக இருந்தபோதிலும், முன்னெச்சரிக்கையாக இரண்டாம் அலைக்கு அந்த நாடு தயாரானதால், தற்போது பெரும் பாதிப்புகளைத் தவிர்த்திருக்கிறது. பிரான்ஸில் தற்போது, கொரோனா பரவல் தணிந்திருப்பதால் மீண்டும் அதன் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. தொற்றுப் பரவல் காரணமாகச் சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதித்திருந்த பிரான்ஸ், தற்போது இந்தியா உள்ளிட்ட நோய்ப் பாதிப்பு மிகுதியாக உள்ள நாடுகளைத் தவிர்த்து பிற நாட்டுப் பயணிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது.

இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் பிரான்ஸில், தற்போது அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் பல கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதலாம் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த அதிபர் தற்போது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.

ஹெர்மிடேஜ்  உணவகத்தில் அதிபர் இமானுவேல் மேக்ரான்
ஹெர்மிடேஜ் உணவகத்தில் அதிபர் இமானுவேல் மேக்ரான்
Photo: EPA-EFE

சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் நேற்று பிரான்ஸின் 'டிரோம்' நகருக்குச் சென்றிருந்தார். அங்கு ஹெர்மிடேஜ் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, வெளியில் தன்னைச் சந்திப்பதற்காகக் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கிச் சென்றார். மக்களிடம் அவர் கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவரை அணுகி நபர் ஒருவர் பேச முற்பட்டார். அதிபர் இமானுவேலும், அந்த நபரின் அருகில் சென்று அவரிடம் கைகொடுத்தார். பதிலுக்குக் கைகொடுத்த அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அதிபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

அந்த நபரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை மடக்கிப் பிடித்து அதிபரைப் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்த முயன்றனர். இருப்பினும், அவர் அந்த நபரின் அருகில் சென்றார். போலீஸார் அதிபரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினார்கள்.

அதிபரின் கன்னத்தில் மர்ம நபர் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்துக்குச் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

அதிபர் இமானுவேல் மேக்ரானைக் கன்னத்தில் அறைந்த அந்த நபர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 'இமானுவேல் ஒழிக... இமானுவேல் மேக்ரானின் கொள்கைகள் ஒழிக' என்று அடுத்த சில நிமிடங்களுக்குக் கோஷமிட்டுக்கொண்டிருந்தார். போலீஸார் அதிபரைத் தாக்கிய நபருடன் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு நபரையும் கைதுசெய்து வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

தாக்குதல் தொடர்பாக, பத்திரிகை ஒன்றிடம் பேசிய அதிபர் இமானுவேல், "இது போன்ற சம்பவங்கள் மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்னைகளை மறைப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. இவர்களைப் போன்ற தனிமைப்படுத்தப்பட்ட நபர்களால் பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது. ஆனால், எனக்கு பயமில்லை. நம் மக்கள் என்ற முறையில்தான் நான் அந்த நபரின் அருகில் சென்று அவருக்குக் கைகொடுத்தேன். எதிர்பாராதவிதமாக என்னைத் தாக்கிவிட்டார்.

இருப்பினும், என்னைத் தாக்கிய அந்த நபருக்கு அடுத்தபடியாக இருந்தவர்களிடம் சென்று அவர்களுடன் புகைப்படங்கள்கூட எடுத்துக்கொண்டேன். இந்தச் சம்பவத்தால் நான் துளியும் அச்சமடையவில்லை. நான் வழக்கம்போல், என்னுடைய சுற்றுப்பயணத்தைத் தொடர்வேன், மக்களைச் சந்திப்பேன், அவர்களின் குறைகளைக் கேட்டறிவேன்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக, பிரான்ஸ் அதிபர்களின் பொதுவெளிப் பயணங்களின்போது அவர்களின் பாதுகாப்புக்கு 77 (GSPR) ஆயுதம் ஏந்திய பாதுகாப்புக் குழுவினர் இருப்பார்கள். ஆனால், தற்போது இந்தச் சம்பவத்தின்போது கொரோனா பரவல் காரணமாக அதிபர் இமானுவேலின் பாதுகாப்புக்கு 10 பேர் மட்டும் உடன் வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதிபர் பயணம் மேற்கொள்ளும் பகுதிகளை அவரின் வருகைக்கு முன்பாகவே ஆய்வு செய்து உறுதி செய்த பின்னரே அதிபர் அங்கு செல்ல (GSPR) குழுவினர் அனுமதிப்பார்கள். நேற்றைய தினம், அதிபரைத் தாக்கிய அந்த நபர் கூட்டத்தில் மக்களோடு மக்களாக, ஆயுதம் ஏதும் இல்லாமல் ஊடுருவி இருந்ததால் அந்த நபரின் வருகைக்கான நோக்கத்தைப் பாதுகாப்புக் குழுவினரால் அறிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்கள் எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத 28 வயது இளைஞர்கள் என்றும், இதுவரையில் எந்த வழக்கிலும் கைதாகாத நபர்கள் என்றும் போலீஸார் ஊடகங்கள் சிலவற்றுக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

இமானுவேல் மேக்ரான்: பொதுவெளியில் பிரான்ஸ் அதிபரைத் தாக்கிய நபர்! - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

அதிபர் இமானுவேல் தற்போதைய தாக்குதலைப் போன்றே முன்னதாக பல சமயங்களில் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறார். சமீபத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், அதிபர் மக்ரோனும் அவரின் மனைவி பிரிஜிட்டும் மத்திய பாரிஸிலுள்ள டுலெரீஸ் (Tuileries) தோட்டத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அவரின் எதிர்ப்பாளர்கள் சிலர் கூட்டமாகக் குழுமி நின்று, இருவரையும் அவதூறாகப் பேசி, வாய்மொழி துஷ்பிரயோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

2017-ல் பிரான்ஸ் அதிபராகப் பதவியேற்ற இமானுவேல் அமலுக்குக் கொண்டுவந்த 'தாராளமயக் கொள்கை' மற்றும் பல்வேறு சட்டங்களை கண்டித்து இடதுசாரி அமைப்பினர் தொடர்ந்து அவருக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதலும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. அதிபரைத் தாக்கிய நபர், அவர் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தும்விதமாகக்கூட கன்னத்தில் அறைந்திருக்கிறார் என்ற வாதத்தைப் பலரும் முன்வைக்கின்றனர்.

இருப்பினும், கைதாகியுள்ள நபர்கள் போலீஸாரிடம் தன்னிலை விளக்கம் அளிக்கும் பட்சத்தில் மட்டுமே தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெரியவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு