Published:Updated:

‘அறிகுறி இல்லை; குணமடைந்த 70 நாள்களுக்குப் பின் பாசிட்டிவ்!’ -கொரோனா வைரஸால் குழம்பும் சீனா!

சீனா
சீனா ( AP )

சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமாகி 70 நாள்கள் ஆன பலருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஒரு இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்டது. ஆனால், வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது தொடர்பாகவே பல கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டு... சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாகி வருகிறது. டிசம்பர் மாதம் இறுதியில் உருவான இந்த வைரஸ், உலகம் முழுவதும் பரவி, சுமார் 26 லட்சம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி 1,87,000-க்கும் அதிகமானவர்களைப் பலிகொண்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனாவில் இருந்து மீண்ட சீனா!

முதன் முறையாக சீனாவில் இந்த வைரஸ் உறுதிசெய்யப்பட்ட பிறகு, வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு துரித மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் அடைக்கப்பட்டது, ட்ரோன் மற்றும் ரோபோக்கள் மூலம் கண்காணிப்பு, ஒரே வாரத்தில் பெரிய மருத்துவமனை உருவாக்கம் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

அதேபோல், வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டது. ஐந்து முதல் ஆறு முறை பரிசோதனை நடத்தி, அதில் அனைத்திலும் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே வைரஸ் குணமாகிவிட்டதாக அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். தற்போது சீனா, வைரஸில் இருந்து மீண்டுவிட்டதாகவும் சிறிய அளவில் மட்டுமே வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவும் தளர்த்தப்பட்டு, கடந்த 3 வாரங்களாக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

சீனா
சீனா

புதிய குழப்பம் ஏற்படுத்தும் கொரோனா!

இந்நிலையில், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி, 60 முதல் 70 நாள்கள் ஆனவர்களுக்கு தற்போது மீண்டும் வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது. அதிலும் எந்த அறிகுறியும் இல்லாமல் வைரஸ் பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. இது, சீன மருத்துவர்கள் மட்டுமல்லாது சர்வதேச அளவில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

'ராயட்டர்ஸ்' ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள சீனாவைச் சேர்ந்த ஒருவர், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதும் வுஹானில் மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டேன். இறுதியாகத்தான் வுஹான் மத்திய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். பிப்ரவரி மூன்றாவது வாரத்தில், எனக்கு 10 முறை வைரஸ் சோதனை செய்யப்பட்டது. அதில் பெரும்பாலும் பாசிட்டிவ் என்றே முடிவுகள் வந்தன. ஆனால், இறுதியில் சில முடிவுகள் நெகட்டிவ் என வந்ததால் நான் குணமடைந்துவிட்டதாக வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்.

சீனா
சீனா
AP

தற்போது நான் நலமாகவே உள்ளேன். அப்படியே உணருகிறேன். எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், வைரஸ் சோதனையின் முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளன. மீண்டும் சோதித்தாலும் அதே முடிவே காட்டுகிறது. 3 முறைக்கு மேல் சோதித்துவிட்டார்கள், அப்போதும் பாசிட்டிவ் முடிவுகள் மட்டுமே வந்தன. இது என்ன மாதிரியான வைரஸ்... இதில் என்ன இருக்கிறது என ஒன்றும் புரியவில்லை” என விரக்தியுடன் பேசியுள்ளார்.

கொரோனா மீது அதிகரிக்கும் சந்தேகம்!

கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்ததும், அனைத்து உலக நாடுகளிலும் ஊரடங்கைத் தளர்த்துவதற்கான ஆலோசனைகளும் ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சீனாவிலிருந்து இப்படி ஒரு செய்தி வந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது மட்டுமில்லாமல், தற்போது வரை 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வந்தால் அவருக்கு வைரஸ் இல்லை என்றே கூறப்படுகிறது.

கோவிட் 19 - சீனா
கோவிட் 19 - சீனா

ஆனால் தென் கொரியாவில், 3, 4 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 1000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. அதேபோல், இத்தாலியிலும் சில நோயாளிகளுக்கு ஒரு மாதத்துக்குப் பிறகும் வைரஸ் பாசிட்டிவ் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் தனிமைப்படுத்தப்படும் நாள்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவை அனைத்துக்கும் மேல், குணமாகி 70 நாள்கள் ஆனவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, வைரஸின் தன்மை குறித்த சந்தேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட்-19... இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகிறதா சீனா..?

சீனாவில் இதுவரை எத்தனை பேருக்கு இதேபோன்று சோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் எத்தனை பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது போன்ற எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் ராயட்டர்ஸ் நடத்திய ஆய்வில், அங்கு 12-க்கும் அதிகமான குணமடைந்தவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சீனா
சீனா

“சார்ஸ் வைரஸ் பரவலின்போது இதேபோன்ற எதையும் நாங்கள் காணவில்லை. கொரோனா புது வித வைரஸ். இந்த தொற்று நோயைப் பொறுத்தவரை, வைரஸ் பாதிப்பு இருந்து அறியப்பட்டவர்களைவிட, அறியப்படாதவர்கள் இன்னும் நிறைய பேர் உள்ளனர்” என வுஹானில் உள்ள ஜாங்னான் மருத்துவமனையின் துணைத் தலைவர் யுவான் யூஃபெங் தெரிவித்துள்ளார்.

`தாமத நடவடிக்கைகளே வைரஸ் பரவலுக்குக் காரணம்’ - சீன அரசை விமர்சித்த பெண் மருத்துவர் மாயம்!

மேலும், வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் கொரோனா தங்கியிருக்கலாம். அதனால் பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கும். ஆனால், இது பாதிக்கப்பட்டவருக்குப் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தென்கொரியா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு