Published:Updated:

`ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு இரட்டிப்பு நிதி!' -கரம் கொடுத்த ஃபேஸ்புக், பில்கேட்ஸ் அறக்கட்டளை

ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்காகச் சர்வதேச அளவில் தமிழ் மக்களிடம் நிதி திரட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை
ஹூஸ்டன் தமிழ் இருக்கை

உலகத் தமிழர்களின் பங்களிப்போடு அமெரிக்காவில் உள்ள பிரசித்திபெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள் நிறைவுபெற்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர் உலகத் தமிழர்கள். அதற்கான நிதி திரட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஹூஸ்டன் பல்கலைக்கழகம்
ஹூஸ்டன் பல்கலைக்கழகம்

ஹூஸ்டனில் உள்ள தமிழ் மக்கள் தங்களால் முடிந்த அளவு தொகையைத் தமிழ் இருக்கைக்காக வழங்கியுள்ளனர். தற்போது இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள தமிழர்களின் உதவியை நாடியுள்ளது ஹூஸ்டன் தமிழ் இருக்கைக் குழு. இதற்காக ஃபேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு, அதன்மூலம் நிதி திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு ஃபேஸ்புக் நிறுவனமும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும் இணைந்து உதவ முன்வந்துள்ளனர்.

ஒருவர் அளிக்கும் நிதியை இரண்டு மடங்காக இந்த நிறுவனங்கள் அளிக்க உள்ளன. வரும் டிசம்பர் 3-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை நிதி திரட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது. `நிதி அளிக்க நினைப்பவர்கள் ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கான ஃபேஸ்புக் பக்கம் மூலம் அளிக்கலாம்' என அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், செயலாளர் பெருமாள் அண்ணாமலை உள்பட பலரும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை
ஹூஸ்டன் தமிழ் இருக்கை

பெருமாள் அண்ணாமலையிடம் பேசினோம். ``தமிழ் மொழியின் தொன்மையை ஆராய ஹார்வர்டில் இருக்கை அமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்றன. அதேபோன்று தமிழர்களுடைய வணிகக் கூறுகள், வணிக மேலாண்மை போன்றவை 2000 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தன என்பதைக் கண்டுபிடிக்க ஹூஸ்டன் தமிழ் இருக்கை உதவும். இந்த ஆய்வுகள்தான் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் முதன்மையான நோக்கம்.

Vikatan

உலகத் தமிழர்களின் பங்களிப்பால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை நிறுவப்படவுள்ளது. அதற்கு மொத்தம் 28 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

தமிழ் இருக்கை குழு
தமிழ் இருக்கை குழு

முதல்கட்டமாக ஹூஸ்டன் தமிழ் மக்கள் இதுவரை 3 கோடி ரூபாய் வரையில் நிதி வழங்கியுள்ளனர். தமிழ் இருக்கைக்காக டெக்ஸாஸ் மாகாண அரசு 14 கோடி ரூபாயை வழங்கவுள்ளது. மீதமுள்ள 11 கோடி ரூபாயை அனைத்து நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் திரட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

பண்டைய காலத் தமிழர்களின் வணிகக் கூறுகளை ஆராயும் நோக்கில், ஹூஸ்டனில் தமிழ் இருக்கை விரைந்து அமைய வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த இருக்கையும் உலகத் தமிழர்களின் பங்களிப்போடு சிறப்பான முறையில் அமையும்” என்றார் நம்பிக்கையான குரலில்.