Published:Updated:

மதுபான விடுதிகளில் துப்பாக்கிச்சூடு; தாயுடன் சடலமாகக் கிடந்த நபர்!- ஜெர்மனியை உலுக்கிய இரவு சம்பவம்

ஜெர்மன் துப்பாக்கிச்சூடு
ஜெர்மன் துப்பாக்கிச்சூடு

ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச்சூடு இனவெறி காரணமாக நடந்திருக்குமா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஜெர்மனியின் ஹனாவு நகரில் உள்ள இரண்டு மதுபான விடுதிகளில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். முதலில் மர்மநபர்கள் சிலர் இந்தத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகித்தனர். பயங்கரவாத நோக்கத்துடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா என போலீஸார் சந்தேகித்தனர். இதையடுத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடந்த இரண்டு இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் ஒரே நபரே அடுத்தடுத்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரது கார் பதிவெண்ணைக் கொண்டு அந்தநபர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரிக்கத் தொடங்கினர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஜெர்மனைச் சேர்ந்த Tobias R (வயது 43) என்பது தெரியவந்துள்ளது.

ஜெர்மனி தாக்குதல்
ஜெர்மனி தாக்குதல்

ஹனாவு நகரில் உள்ள ஷிஷா பாருக்குள் இரவு 10 மணிக்குப் புகுந்த டோபியஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு சரமாரியாகச் சுட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறியவர் 3 கிலோமீட்டர் காரில் பயணித்து அரேனா பார் அமைந்துள்ள பகுதிக்கு விரைந்துள்ளார். அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு திரும்பியுள்ளார்.

துப்பாக்கி பயன்படுத்துவதற்கு ஜெர்மனியில் கடுமையான கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் தனிநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டோபியஸ் மீது இதற்கு முன்பாக எந்த வழக்கும் இல்லை எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமத்தை அவர் சமீபத்தில் வாங்கியது தெரியவந்தது.

ஜெர்மனி தாக்குதல்
ஜெர்மனி தாக்குதல்
Michael Probst

இதையடுத்து அவரது இருப்பிடத்துக்கு போலீஸார் விரைந்தனர். அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை போலீஸார் சோதனை செய்தனர். அதில் துப்பாக்கி மற்றும் வெடிப்பொருள்கள் இருந்துள்ளன. இதையடுத்து அவரது வீட்டுக்கு விரைந்தனர். அங்கு தன் தாயுடன் டோபஸ் சடலமாகக் கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ”இனவெறி காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். அவர் மீது எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு தன் 72 வயது தாயைக் கொலை செய்துவிட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம்” என போலீஸார் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு