Published:Updated:

கொஞ்சம் காசு... நிறைய கொண்டாட்டம்! - ஜெர்மனியின் அக்டோபர் திருவிழா #MyVikatan

இரண்டு வாரங்களில் 60 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள்... ஜெர்மனியின் மூனிச் நகரமே கொண்டாட்டத்தில் மூழ்கிவிட்டது.

 Oktoberfest
Oktoberfest

உலகின் பல பகுதிகளிலுமிருந்து, நிறைய சுற்றுலாப் பயணிகள் இந்தத் திருவிழாவுக்கு வருகை தருகிறார்கள். இது என்ன விழா என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால், டைம் மெஷினில் 200 வருடங்களுக்கு முன், அதாவது அக்டோபர் 12, 1810-ம் வருடத்துக்கு நாம் பயணிக்க வேண்டும். அன்றுதான் பவேரிய மாநிலத்தின் முதலாம் லுட்விக் அரசர், "Sachsen-Hildburghausen" இளவரசி தெரேஸேவைத் திருமணம் செய்துகொண்டார். அன்று, அது மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டது. அடுத்த வருடமே, விவசாயக் கண்காட்சியும் இதனுடன் சேர்ந்துகொள்ள, 1818-ல் பீர் 'ஃபப்' கள் தங்கள் கலைஞர்களுடன் இணைந்துகொண்டனர். இன்றோ 60 முதல் 70 லட்சம் மக்கள் இதைத் திருவிழாவாக இரண்டு வாரங்கள் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.

 Oktoberfest
Oktoberfest

டான்ஸ், மியூசிக் என்று மக்களைத் துள்ளாட்டம் போட வைக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஒருபுறம்! சிறிய உப்புக் கற்கள் தூவப்பட்ட ஜெர்மனியின் பிரத்தியேக "Pretzel" பிரட் சாப்பிடுவோர் மறுபுறம் என்று அந்த மைதானமே மக்களின் உற்சாக வெள்ளத்தில்!

இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இரண்டும் இணைந்த அக்டோபர் 3-ம் தேதியை உள்ளடக்கிய விதமாக, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் சனிக்கிழமை ஆரம்பித்து அக்டோபர் முதல் வாரம் ஞாயிறன்று முடிவடையும். அந்த வகையில் இந்த வருடம் செப்டம்பர் 21-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆரம்பித்து வரும் 6-ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு முடிவடைகிறது.

தொடக்கவிழா, Schottenhamel கூடாரத்தில் மூனிச் நகர மேயர் பீர் பேரலைத் தட்டி “O’Zapft Is!” ( இது தட்டப்பட்டது) என்று கூறி தொடங்கி வைத்தார்.

விழாவின் முதல் சனிக்கிழமை மதுபான உரிமையாளர்கள் மற்றும் பெருநிலக்கிழார்களின் பரேட் நடைபெறும். இதைப் பார்க்க அன்றையநாளில் கூட்டம் அலைமோதும். வருகைதரும் பெரும்பான்மையினர் "lederhosen and dirndls" என்ற பாரம்பர்ய உடையை அணிந்துதான் வருகிறார்கள். காரில் வருவோருக்கு பார்க்கிங் பிரச்னை கண்டிப்பாக இருக்கும். பாதாள ரயில் அல்லது டாக்ஸி மூலம் எளிதாக விழா மைதானத்தை அடையலாம்.

 Oktoberfest
Oktoberfest

ராட்சத ராட்டினங்கள் போன்ற வெளி அரங்க விளையாட்டுகள் ஒருபுறம் என்றால் செஸ் போன்ற உள் அரங்க விளையாட்டுகள் மறுபுறம். நடனம் ஆடுபவர்கள் தரையிலோ பெஞ்ச் மேலே ஏறி நின்றோ ஆடலாம். ஆனால், மேசை மீது ஏறி நடனமாட அனுமதி இல்லை. நுழைவுக் கட்டணம் கிடையாது. இங்கு தண்ணீர் மற்றும் பிற உணவு வகைகளின் விலை கடந்த வருடத்தைவிட சற்று அதிகம்தான்.

காலநிலையைப் பொறுத்தவரையில் சில சமயம் குளிராய் இருக்கும். இந்த வருடம் 23 டிகிரி வரையிலும் இருக்கிறது. அதனால் மக்களுக்கு சந்தோசம்தான் கூடாரங்களுக்குள் புகைபிடிக்க அனுமதி இல்லை. ஆனால், இதற்காக ஒவ்வொரு கூடாரத்தில் பிரத்தியேக இடம் ஒதுக்கி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் கை நிறைய பணம் இருந்தால் இரண்டுவாரமும் கொண்டாட்டம்தான்.

- ஜேசு ஞானராஜ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/