Published:Updated:

``சரியான நேரத்தில் செய்த சிறந்த வேலை!" - விமான நிலைய ஊழியரைப் பாராட்டிய ட்ரம்ப்

அமெரிக்க விமான நிலையத்தில் தாறுமாறாக ஓடிய வாகனத்தை நிறுத்திய ஊழியருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

Trump
Trump

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள 'ஓ ஹரே' (o Hare) சர்வதேச விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு விமானத்தில் நேற்று வழக்கம்போல், தூய்மை மற்றும் உணவுப் பொருள்கள் அடுக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

Chicago Airport
Chicago Airport

அப்போது விமானத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த குளிர்பானங்கள் கொண்டு சென்ற சிறிய வாகனத்தின் இன்ஜினை இயங்கிய நிலையிலேயே விட்டுச் சென்றுள்ளார் அதன் ஓட்டுநர். அந்த நேரத்தில், ஓட்டுநர் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள் அடங்கிய பெட்டி ஒன்று திடீரென வண்டியின் கீழ் பிரேக், கியர் இருக்கும் பகுதியில் விழுந்துள்ளது.

`90 கி.மீ வேகத்தில் சென்ற  காருக்குள்  தூங்கிய டிரைவர்’…அதிர வைத்த வைரல் வீடியோ!

இதையடுத்து அந்த வண்டி ஒரே இடத்தில் சக்கரம்போல் சுழலத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். அந்த வாகனம் அருகிலிருந்த விமானத்தின் மீது மோதுவதுபோல வட்டமடித்துக்கொண்டே இருந்தது.

Chicago Airport
Chicago Airport

அந்தநேரத்தில், விமான நிலைய ஊழியர் ஒருவர், சமயோசிதமாகச் செயல்பட்டு அருகிலிருந்த மற்றொரு வாகனத்தைத் தனியாக இயக்கி, வட்டமடித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி அதைக் கீழே தள்ளி நிறுத்தினார். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் விமானநிலையத்தில் நின்றிருந்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கணநேரத்தில் யோசித்துச் சிறப்பாகச் செயல்பட்ட அந்த விமான நிலைய ஊழியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுவரை அந்த வீடியோவை பல லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். அந்த ஊழியரால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இந்த வைரல் வீடியோவைப் பார்த்து, சிறப்பாகச் செயல்பட்ட ஊழியருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வீடியோவை டேக் செய்து அதனுடன், ‘ சரியான நேரத்தில் செய்த சிறந்த வேலை’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதிபரின் செயல் நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது