Published:Updated:

`தி பவர் ஆஃப் யூத்!' - கிரேட்டா தன்பெர்கைக் கௌரவித்த டைம் பத்திரிகை

டைம் பத்திரிகையின் இந்த வருட`யூத் ஆஃப் பவர்' நபராக கிரேட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிரேட்டா தன்பெர்க்
கிரேட்டா தன்பெர்க்

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க், 2019 ஆம் ஆண்டிற்கான டைம் பத்திரிகையின் சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ``உங்களுக்கு எவ்வளவு தைரியம்" என்ற கேள்வியை அமெரிக்காவில் காலநிலை குறித்து நடந்த உச்சி மாநாட்டில் கேட்டதன் மூலம் உலக அளவில் பிரபலமானார் கிரேட்டா. 16 வயதாகும் இவர், சுற்றுச்சூழல் குறித்தும் காலநிலை மாற்றம் குறித்தும் மக்களைச் சிந்திக்க வைத்தவர்.

`தி பவர் ஆஃப் யூத்!' - கிரேட்டா தன்பெர்கைக் கௌரவித்த டைம் பத்திரிகை

``உங்கள் வெற்று வார்த்தைகளால் என் கனவுகளையும் என் குழந்தைப்பருவத்தையும் திருடிவிட்டீர்கள். மக்கள் கஷ்டப்படுகிறார்கள். மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். முழுச் சுற்றுச்சூழல் அமைப்புகளும் சரிந்து வருகின்றன. ஒரு பெரிய அழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். நீங்கள் பேசக்கூடியது பணம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் கதைகள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்" என்று காலநிலை குறித்து அமெரிக்காவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கேள்வி எழுப்பினார் தன்பெர்க். இதன்மூலம் உலக அரங்கில் அதிகம் பேசப்பட்டார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், டைம் பத்திரிகையின் முக்கியமான நூறு நபர்களில் இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில் டைம் பத்திரிகையின் இந்த ஆண்டிற்கான சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரேட்டா ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் (asperger syndrom) எனும் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய் உள்ளவர்கள் மக்களுடன் பேசுவதில் சில தடுமாற்றங்கள் இருக்கும்.

ஆனாலும் சில குறிப்பிட்ட செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பர். 16 வயதுடைய மற்ற சிறுவர், சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதும், வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த நிலையில், சுற்றுச்சூழலைப் பற்றியும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றியும் அவர்கள் பேசுவதற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கிரேட்டா தன்பெர்க்
கிரேட்டா தன்பெர்க்

ஒரே நாளில் இவர் அமெரிக்க உச்சி மாநாட்டில் கேள்வியைக் கேட்டுவிடவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பத்திரிகை சுற்றுச்சூழல் குறித்து ஒரு கட்டுரைப் போட்டி வைத்தது. அந்தக் கட்டுரைப் போட்டியில் கிரேட்டாவின் கட்டுரை முதலிடம் பிடித்தது. மேலும், அந்தக் கட்டுரை வெளியான பின்னர், அதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கிரேட்டாவைத் தொடர்பு கொண்டு சூழலியல் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனால், களத்திற்கு வந்து எப்போது போராடப் போகிறோம் என்ற எண்ணம் அவருக்கு எழுந்தது. 16 வயதுச் சிறுமியை யார் என்ன செய்ய முடியும் என்று யோசித்தார்.

இந்தச் சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்குச் சென்றார். உலகமே அவரை திரும்பிப் பார்த்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுற்றுச்சூழலுக்காக ஒதுக்கினார். நாடாளுமன்றத்துக்குச் சென்றார். சுற்றுச்சூழல் குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதினார். சக மாணவர்களிடம் இதுகுறித்து பேசினார். மாணவர்களை ஒன்று திரட்டினார். `பள்ளிக்குச் செல்லும் வயதில், உனக்கு எதுக்கு வேண்டாத வேலை?' என்று சொன்னவர்களைப் புறக்கணித்தார். இதை கிரேட்டாவே கூறியிருக்கிறார்.

 கிரேட்டா தன்பெர்க்
கிரேட்டா தன்பெர்க்

`எதிர்காலம் என்று நீங்கள் சொல்கிறபோது, 2050-ம் ஆண்டுக்கு மேல் நீங்கள் சிந்திப்பதில்லை. அப்போது, என் வாழ்நாளில் பாதியைக் கூட தாண்டியிருக்க மாட்டேன். 2078-ல் நான் எனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடினால், அப்போது நான் எப்படி இருப்பேன், என் குழந்தைகள், என் பேரக் குழந்தைகள் ஆகியோரின் நிலை என்னவாக இருக்கும் என்றெல்லாம் நீங்கள் யோசித்துப் பார்த்தீர்களா?.

ஆறிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் பணக்கார நாடுகள் தங்களது பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றும் அளவைக் குறைத்தால் மட்டுமே மருத்துவமனைகள், மின்சாரம், பள்ளிகள், சுத்தமான குடிநீர் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்து தங்களின் வாழ்க்கை முறையை உயர்த்திக்கொள்ள முடியும். இந்தத் தேவைகளில் ஏற்கெனவே வளரச்சியடைந்திருக்கும் நாம், பருவநிலை மாற்றம் குறித்துக் கவலைப்படவில்லை என்றால், இந்தியா அல்லது நைஜீரியா போன்ற நாடுகள் அந்தப் பிரச்னையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்று தனது இன்னோர் உரையில் தன்பெர்க் கேள்வி எழுப்பியிருந்தார்.