குஜராத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர், சட்டவிரோதமாக அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் ட்ரம்ப் சுவரை (Trump wall) கடக்க முயன்றபோது அதிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இது குறித்து வெளியான தகவலின்படி, உயிரிழந்த நபர் குஜராத்தின் காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பிரிஜ்குமார் யாதவ் என்றும், அவர் கலோலிலுள்ள ஜி.ஐ.டி.சி-யில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார் என்றும் தெரியவந்திருக்கிறது.

பின்னர் இந்தச் சம்பவம் பற்றி தகவலறிந்த மாநில குற்றப் புலனாய்வுத் துறை, இதில் உண்மையைக் கண்டறியவும், சட்டவிரோதமாக மக்களைக் குடியேற்றுவதில் ஈடுபட்டிருக்கும் முகவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரியொருவர், ``பிரிஜ்குமார் யாதவ், அவரின் மனைவி, மூன்று வயது மகன் ஆகியோர் பதினைந்து நாள்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டனர். இதற்காக கலோலிலுள்ள ஒரு முகவரை அவர்கள் அணுகியிருக்கின்றனர். அதன்படி, கடந்த புதன்கிழமையன்று அவர்கள் மெக்ஸிகோவிலுள்ள(Mexico) டிஜுவானாவிலிருந்து(Tijuana) அமெரிக்காவின் சான் டியாகோவுக்கு(San Diego) எல்லையைக் கடக்கவிருந்தனர்.

அன்று யாதவ் தன்னுடைய குழந்தையை கைகளில் பிடித்துக்கொண்டு உலோகத் தகடுகள் மற்றும் கம்பிகள் கொண்ட கான்கிரீட் சுவரில் ஏறினார். கூடவே அவரின் மனைவியும் ஏறினார். அப்போது திடீரென யாதவ் குழந்தையுடன் டிஜுவானா பக்கமும், அவரின் மனைவி சான் டியாகோ பக்கமும் விழுந்தனர். பின்னர் சத்தம்கேட்டு ஓடிவந்த மெக்ஸிகோ பாதுகாப்பு அதிகாரிகள், யாதவையும், குழந்தையையும் மீட்டனர். ஆனால், யாதவ் மட்டும் உயிரிழந்துவிட்டார். சான் டியாகோ பக்கம் விழுந்த யாதவின் மனைவிக்கு கைகள் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று தெரிவித்தார்.