Published:Updated:

`13 பேர் பலி; 30 ஆண்டுகளில் மிக மோசம்!’ - கனடாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு

கனடா
கனடா ( AP )

கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவின் பிடியில் சிக்கி மொத்த உலகமும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கனடா நாட்டு மக்களை மேலும் ஒரு சோகம் ஆட்கொண்டுள்ளது. நேற்று அங்கு மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் காவலர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததே இந்தக் கவலைக்குக் காரணம். கிழக்கு கனடாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக விளங்குகிறது நோவா ஸ்கோடியா. கனடா நேரப்படி நேற்று காலை 11:30 மணிக்கு (இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி) என்பீல்ட் என்ற பகுதியில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கனடா
கனடா
AP

அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அங்கு மர்ம நபர் ஒருவர் தன் கண்ணில் படும் அனைவர் மீதும் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். உடனடியாக விரைந்து செயல்பட்ட காவலர்கள் சில நிமிடங்கள் எதிர் துப்பாக்கிச்சூடு நடத்தி மர்ம நபரைச் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பேசியுள்ள அந்நாட்டு காவல்துறை அதிகாரி, ``என்பீல்ட் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்தவர்கள், அங்கு பெட்ரோல் போட வந்தவர்கள் மற்றும் அருகில் வீடுகளிலிருந்தவர்கள் என அனைவர் மீதும் அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அவர் 51 வயதான கேப்ரியல் வோர்ட்மென் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு நோவா ஸ்கோடியாவின் பல இடங்களில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக அவசர உதவி எண்ணுக்குத் தகவல் வந்துகொண்டே இருந்தது. இரவு முழுவதும் சுமார் 10 மைல்களுக்குத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

கனடா
கனடா
AP

இந்தக் கொலைகளுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, குறிப்பிட்டு இல்லாமல் அனைவரும் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார் குற்றவாளி. அவர் போலீஸ் உடையில் அதேபோல வாகனத்தைத் தயார் செய்து சுற்றியுள்ளார். அதனால் தான் இரவு முதல் போலீஸாரின் பிடியில் சிக்காமலிருந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 28 வருடமாகப் பணியில் இருக்கும் ஹெய்டி என்ற பெண் காவலர் உயிரிழந்துள்ளார்.

`ஜஸ்டின் ட்ரூடோ மனைவி முதல் ஈரான் அதிபரின் ஆலோசகர் வரை..!' -தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா

அவருக்கு 23 மற்றும் 2 வயதில் பிள்ளைகள் உள்ளனர். பிறரை காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரை நீத்துள்ளார் ஹெய்டி. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் கனடாவில் நடந்த மிகப் பயங்கரமான தாக்குதலாக இது உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு