Election bannerElection banner
Published:Updated:

நைஜீரியா: பள்ளி மாணவிகள் 300 பேர் கடத்தல்; அதிர்ச்சியில் பெற்றோர்கள்! - என்ன நடக்கிறது?

மாணவிகள் கடத்தல்
மாணவிகள் கடத்தல்

``நாங்கள் எங்கள் குழந்தைகளை மீட்கப்போகிறோம், ஏனெனில், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் தயாராக இல்லை. எங்கள் குழந்தைகளைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் அவர்களைக் காட்டுக்குள் பின்தொடர முடிவுசெய்திருக்கிறோம்.”

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இவர்கள் கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களைக் கொன்று குவிப்பதோடு, பள்ளி மாணவ, மாணவிகளைக் கடத்திச் சென்று அவர்களைத் தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள்.

வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஜம்பாராவிலுள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் வகுப்பறைக்குள் புகுந்து 317 பள்ளி மாணவிகளைக் கடத்திச் சென்றிருப்பதாக காவல்துறை நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னதாக, ஜம்பேரா மாநில தகவல் ஆணையர் சுலைமான் தனவ் அன்கா, பத்திரிகையாளர்களிடம், ``பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் வந்து சிறுமிகளை கடத்திச் சென்றிருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த தகவல்படி அவர்கள் வாகனங்களுடன் வந்து மாணவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். சம்பவம் நடந்த பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.

நைஜீரியா
நைஜீரியா

ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம் (யுனிசெஃப்), 300-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கடத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

மேலும், யுனிசெஃப் நைஜீரிய பிரதிநிதி பீட்டர் ஹாக்கின்ஸ், ``பயங்கரவாதிகள், சிறுமிகளைக் கடத்திய சம்பவம், கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகள்மீது மற்றொரு மிருகத்தனமான தாக்குதலால் நாம் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம்" என்றார்.

ஜம்பரா மாநிலத்திலுள்ள ஜங்கேபே என்ற கிராமத்திலுள்ள அரசுப் பெண்கள் அறிவியல் மேல்நிலைப்பள்ளியில் அதிகாலை 1 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான கும்பல் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஷெஹு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஜம்பாரா மாநில காவல் படை, ராணுவத்துடன் இணைந்து அரசுப் பெண்கள் அறிவியல் மேல்நிலைப் பள்ளியில் பயங்கரவாதிகளால் ஆயுதமுனையில் கடத்தப்பட்ட 317 மாணவிகளை மீட்கும் நோக்கில் தேடும் வேட்டை, மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிற" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விரக்தியில் மக்கள்:

கடத்தப்பட்ட மாணவிகளில் தனது இரு மகள்களும் இருப்பதாகப் பெற்றோர் ஒருவர் கூறியிருக்கிறார். ``10 மற்றும் 13 வயதுடைய எனது மகள்கள் இருவரும் கடத்தப்பட்டிருக்கிறார்கள். என் இரு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் பிரிந்து தவித்துவருகிறேன்" என்றார்.

நைஜீரியா
நைஜீரியா
Ibrahim Mansur

அந்தப் பகுதி மக்கள், அரசு அதிகாரிகள்மீது கோபத்தில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாக அவர்கள் எந்த அரசு அதிகாரின் பேச்சையும் கேட்காமல் அங்கு வரும் வாகனங்களில் கற்களை வீசித் தாக்கிவருகிறார்கள்.

மேலும், கடத்தப்பட்ட மாணவியின் தந்தை ஒருவர் கூறுகையில், ``நாங்கள் எங்கள் குழந்தைகளை மீட்கப்போகிறோம், ஏனெனில், அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க அரசாங்கம் தயாராக இல்லை. எங்கள் குழந்தைகளைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் அவர்களைக் காட்டுக்குள் பின்தொடர முடிவுசெய்திருக்கிறோம். நாங்கள், எங்கள் குழந்தைகளை மீட்கும் வரை இப்போது யார் பேச்சையும் கேட்க மாட்டோம்" என்றார்.

கடந்த மூன்று மாதங்களுக்குள் நைஜீரியாவின் மூன்றாவது பள்ளித் தாக்குதல் இது. இந்தத் தாக்குதல் சம்பவம், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பெற்றோர்கள் குழந்தைகளை இந்தச் சூழலில் பள்ளிக்கு அனுப்புவது மிகவும் ஆபத்தானது என்று கருதுகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு