Published:Updated:

ஏன் கொல்லப்பட்டார் ஜோவெனல்? நிலைகுலைந்த ஹைத்தி!

ஜோவெனல்
பிரீமியம் ஸ்டோரி
ஜோவெனல்

- தாக்‌ஷாயிணி

ஏன் கொல்லப்பட்டார் ஜோவெனல்? நிலைகுலைந்த ஹைத்தி!

- தாக்‌ஷாயிணி

Published:Updated:
ஜோவெனல்
பிரீமியம் ஸ்டோரி
ஜோவெனல்

ஜூலை 7-ம் தேதி நாட்டையே உலுக்கும் செய்தியுடன் விடியும் என்று ஹைத்தி மக்கள் துளியும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கரீபியக் கடலின் தீவு நாடான ஹைத்தி ஏற்கெனவே பூகம்பம், சூறாவளி, பசி, பஞ்சத்தால் புரட்டிப்போடப்பட்டிருக்கும் சூழலில், அந்த நாட்டின் அதிபரான ஜோவெனல் மொய்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஜூலை 7-ம் தேதி அதிகாலை 1 மணியளவில், அவரது வீட்டுக்குள் புகுந்த கூலிப்படையினர், கண்ணிமைக்கும் நேரத்தில் ஜோவெனலின் உடலைச் சல்லடையாக்கியுள்ளனர். ஜோவெனலின் மனைவி ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக மியாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கோரப் படுகொலைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், நாட்டின் தலைமைப் பொறுப்பை அடுத்ததாக யார் ஏற்பது என்கிற குழப்பம் ஹைத்தியில் நிலவுகிறது. ஏன் கொல்லப்பட்டார் ஜோவெனல் என்பதுதான் இப்போது உலக அரசியலை உலுக்கும் கேள்வி.

ஏன் கொல்லப்பட்டார் ஜோவெனல்? நிலைகுலைந்த ஹைத்தி!

வாழைப்பழ மனிதர் டு அதிபர்

ஹைத்தியின் போர்ட் டே பெய்க்ஸ் நகரில், வாகன உதிரி பாகங்கள் விற்பனையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார் ஜோவெனல் மொய்ஸ். பிறகு, இயற்கை விவசாயத்தின்மீது ஆர்வம் வந்து, வாழை விவசாயத்தை ஆரம்பித்தார். 25 ஏக்கரில் தொடங்கிய இந்த வாழை விவசாயம், ஒருசில ஆண்டுகளிலேயே 2,500 ஏக்கர் பரப்பளவில் விரிந்தது. ஜெர்மனிக்கு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சியடைந்தார். அந்தச் சமயத்தில் அவரை ‘வாழைப்பழ மனிதர்’ என்ற அடைமொழியுடன்தான் ஹைத்தி பத்திரிகைகள் அழைத்தன. கையில் பணம் ஏராளமாகப் புரள ஆரம்பித்தவுடன், உயர்மட்டத்தில் உள்ளவர்களின் நட்பும் அவருக்குக் கிடைத்தது. குறிப்பாக, 2011-ல் ஹைத்தி அதிபராக அமர்ந்த மைக்கேல் மார்டெலியுடனான நட்பு ஜோவெனலை உயரத்துக்குக் கொண்டு சென்றது.

2015-ல் ‘ஹைத்தியன் தெட் கேல் பார்ட்டி’ என்கிற கட்சியைத் தொடங்கிய மைக்கேல் மார்டெலி, தன் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோவெனல் மொய்ஸை முன்னிறுத்தினார். இதை அப்போது மைக்கேலுடன் பயணித்த பிற அரசியல்வாதிகள் ரசிக்கவில்லை. கட்சிக்குள் ஜோவெனலுக்கு எதிரான வேலையை அவர்கள் ஆரம்பித்தனர். பல்வேறு பிரச்னைகளுக்கும், குழப்பங்களுக்கும், போராட்டங்களுக்கும் பின்னால், நவம்பர் 2016-ல் அதிபருக்கான தேர்தல் நடைபெற்று, ஜோவெனல் 55 சதவிகித வாக்குகளுடன் அதிபரானார். வாழைப்பழ மனிதராக இருந்தவர், அதிபர் பதவியை ஏற்றதும் பலரது கழுகுப் பார்வைகளும் அவர்மீது குவிந்தன.

‘ஜோவெனல்... பதவி விலகு...’ வெடித்த போராட்டம்!

அதிபராக ஜோவெனல் மொய்ஸ் பதவியில் அமர்ந்ததிலிருந்தே அவருக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. ஹைத்திக்கு அளித்துவந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை மார்ச் 2018-ல் வெனிசுலா நிறுத்திக்கொண்டது. இதனால், பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டது. மண்ணெண்ணெய் விலை 50 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்ததால், கொதித்தெழுந்த ஹைத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். மற்றொருபுறம், நாட்டில் அதிகரித்த ஹெராயின் கடத்தல்காரர்களின் கொட்டத்தை அடக்க முடியாமல் ஹைத்தி ராணுவம் திணறியது. இந்தக் கோபங்களெல்லாம் அதிபர்மீது திரும்பின. அக்டோபர் 2019-ல், ‘ஜோவெனல் பதவி விலகு’ என்கிற கோஷத்துடன் மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கினர். எதிர்க்கட்சிகளும் ஆதரவுக்கரம் நீட்டியதால், இந்தப் போராட்டம் பெரும் மக்கள் இயக்கமாக வலுப்பெற்றது. ஹைத்தி ராணுவமும் போலீஸும் போராட்டத்தை அடக்க முயன்றதில் தோற்றன. 2020-க்குப் பிறகு கொரோனா பேரிடர் தாக்குதல் நாட்டை உலுக்கியதால், நிலைகுலைந்துபோனது ஹைத்தியின் பொருளாதாரம். அந்த நாட்டின் தனிநபர் வருவாய் ஒரு நாளைக்கு வெறும் 148 ரூபாய் என்கிற அளவுக்குக் கீழிறங்கியது. தான் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ஆறு பிரதமர்களை மாற்றியிருக்கிறார் ஜோவெனல். ஆனால், நாட்டின் நிதிநிலையை அவரால் சரிசெய்ய முடியவில்லை. இந்தச் சூழலில் மற்றொரு சிக்கலும் வந்தது...

ஏன் கொல்லப்பட்டார் ஜோவெனல்? நிலைகுலைந்த ஹைத்தி!

முதலில் அதிபர் பதவிக்கு ஜோவெனல் போட்டியிட்டது 2015-ம் ஆண்டில். அந்தத் தேர்தல்தான் ரத்தாகி, மீண்டும் அது 2016-ல் நடைபெற்றது. எனவே, ‘ஐந்தாண்டுகள் பதவிக்காலம் என்ற அடிப்படையில் 2021-ல் அவர் பதவி விலக வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. ஆனால், ‘2016-ல் நடைபெற்ற புதுத் தேர்தலில்தான் நான் வெற்றிபெற்றேன். 2017-ல்தான் அதிபராகப் பொறுப்பேற்றேன். எனவே, 2022 வரை எனக்குப் பதவிக்காலம் இருக்கிறது’ என ஜோவெனல் கூறிவந்தார். இந்த விவகாரத்தால், ஹைத்தியில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஜோசப் மெகென் ஜியான் லூயிஸ் என்பவரை இடைக்கால அதிபராக, கடந்த பிப்ரவரியில் எதிர்க்கட்சிகள் தேர்வுசெய்தன. ஆனால், உலக நாடுகள் அதை ஏற்கவில்லை. எனவே, ஜோவெனல் மொய்ஸே அதிபர் பதவியில் நீடித்துவந்தார்.

ஏன் கொல்லப்பட்டார் ஜோவெனல்? நிலைகுலைந்த ஹைத்தி!

சல்லடையான உடம்பு... சுற்றும் ஆயிரம் கேள்விகள்!

இந்தச் சூழலில்தான், கடந்த ஜூலை 7-ம் தேதி அதிகாலை 1 மணியளவில், ஜோவெனல் கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ராணுவம், போலீஸ், அதிபரின் சிறப்புப் பாதுகாவலர்கள் எனப் பெரும் படையே பாதுகாப்பு அளித்தும், கூலிப்படையினர் அவரைக் கொலைசெய்திருப்பது ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியிருக்கிறது. அதிகாலை 12:55 மணிக்கு, ஜோவெனலின் வீட்டுக்குள் புகுந்த சுமார் 25 கூலிப்படையினர், தங்களை அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக் காவலர்களாக அடையாளப்படுத்தியுள்ளனர். ‘வீட்டைச் சோதனையிட வந்திருக்கிறோம். யாரும் அசையாதீர்கள்’ என்று உரக்கச் சத்தமிட்டுக்கொண்டே அதிபரின் படுக்கையறைக்குள் புகுந்தவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஜோவெனல் மொய்ஸ் உடம்பைத் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலேயே ஜோவெனல் பலியாகிவிட்டார். வந்த வேலை முடிந்தவுடன் கூலிப்படை சிட்டாகப் பறந்துவிட்டது. இந்தப் படுகொலையில், தொடர்புள்ளதாக இதுவரை 17 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 15 பேர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்த நாட்டின் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்களுடன் இரண்டு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களும் கைதுசெய்யப்பட்டிருப்பது விவகாரத்தைச் சூடாக்கியிருக்கிறது.

ஒரு நாட்டின் அதிபர் கொல்லப்படும்வரை, அவரின் பாதுகாவலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? டொமினிக்கன் குடியரசு நாட்டின் வழியாகத்தான் 11 கூலிப்படையினர் வந்ததாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அந்த நாட்டுக்கும் ஹைத்திக்குமான எல்லைப் பிரச்னையில், ஜோவெனலின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க சி.ஐ.ஏ அமைப்பு எச்சரித்தும், ஹைத்தி உளவுத்துறை ஏன் கண்காணிக்கவில்லை... இந்தக் கூலிப்படையினருக்கு ஆயுதம் எங்கிருந்து கிடைத்தது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் முளைத்திருக்கின்றன. இந்தக் கொலை குறித்து ஹைத்தி போலீஸ் விசாரித்துவருகிறது. அவர்களுக்கு உதவ சீனியர் எஃப்.பி.ஐ அதிகாரிகளை அனுப்பியிருக்கிறது அமெரிக்கா. விசாரணை வேகம் சூடுபிடித்திருக்கிறது.

ஏன் கொல்லப்பட்டார் ஜோவெனல்?

கொலைக்கான காரணங்களாகப் பலவற்றைச் சொல்கின்றன ஹைத்தி பத்திரிகைகள். இடைக்கால பிரதமராக க்ளாட் ஜோசப் என்பவர் பதவியிலிருக்கும் நிலையில், தான் கொல்லப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஏரியல் ஹென்றி என்பவரைப் பிரதமராக நியமித்திருக்கிறார் ஜோவெனல். இடைக்கால அதிபராகத் தூக்கிப் பிடிக்கப்பட்ட நீதிபதி ஜோசப் மெகென் என்பவரும் அமைதியாகிவிட்டார். ஜோவெனல் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், ஹைத்தியை வழிநடத்த கிளாட் ஜோசப்பை விட்டால் வேறு ஆளே இல்லை என்கிற நிலையே நிலவுகிறது. ‘நான்தான் ஹைத்தியின் பிரதமர். என்னைத்தான் ஜோவெனல் நியமித்தார்’ என்று ஏரியல் ஹென்றி கூப்பாடு போட்டாலும், யாரும் அவரைச் சட்டை செய்வதாக இல்லை. தன் அதிகாரத்தைத் தக்கவைக்க, கிளாட் ஜோசப்பே ஏதாவது செய்திருப்பாரோ என்கிற சந்தேகத்தை பத்திரிகைகள் எழுப்புகின்றன.

ஏன் கொல்லப்பட்டார் ஜோவெனல்? நிலைகுலைந்த ஹைத்தி!

மற்றொருபுறம், சீனாவுடன் ஜோவெனல் மோதிய விவகாரமும் ஒரு பின்னணியாகச் சொல்லப்படுகிறது. `தாங்களே உண்மையான சீனா’ என்று பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் தைவானை, கவுதமாலா, ஹோண்டுராஸ், ஹைத்தி, பராகுவே, நிகரகுவா என உலகின் 15 நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. இந்த நாடுகளுக்கெல்லாம் அழுத்தம் கொடுத்து, தைவானுடனான உறவை முடித்துக்கொள்ளும்படி சீனா அறிவுறுத்தியது. சீனாவிடம் நிதியுதவி பெறுவதற்காக டொமினிக்கன் குடியரசு, ஏப்ரல் 2018-ல் தைவானுடனான உறவை முறித்துக்கொண்டது. அதேபோல, ஹைத்தியும் உறவை முறித்துக்கொண்டால், நிதியுதவி அளிப்பதாக சீனா கூறிவந்தது. இதை ஜோவெனல் ஏற்கவில்லை. தவிர, சீனாவின் ஹாங்காங் சட்டத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்துவந்தார் ஜோவெனல். இவையெல்லாம் பீஜிங்கை வெறுப்பேற்றியதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், ‘எல் பாய்ஸ்’ என்கிற ஸ்பானிஷ் மொழிப் பத்திரிகைக்கு ஜோவெனல் அளித்திருந்த பேட்டியில், “என்னை நீக்கிவிட்டு நாட்டை அபகரித்துக்கொள்ள சில பெரு முதலாளிகள் முயல்கின்றனர். அவர்கள் விரும்பிய திட்டங்களுக்கு நான் அனுமதியளிக்கவில்லை என்கிற கோபத்திலிருக்கிறார்கள்” என்றார். ஜோவெனலைக் கொல்வதற்கு நான்கு வெளிநாட்டு நிறுவனங்கள் கூலியாட்களை நியமித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதன்படி பார்த்தால், அந்தப் பெருமுதலாளிகள் செய்த படுகொலையாகவும் இது இருக்கலாம்.

எது எப்படியோ, ஏற்கெனவே வறுமை, வன்முறை, பொருளாதார நசிவு என நாலாபக்கமும் நசுங்கிப்போயிருக்கும் ஹைத்தி, அதிபர் ஜோவெனல் மொய்ஸின் படுகொலையால் முற்றிலும் நிலைகுலைந்துபோயிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism