Published:Updated:

ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் முன்னெடுக்கும் #HelpingNotHelping!

``நமது குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய பெருங்கொடுமையானது அவர்களை நிறுவனமயபடுத்துவதே.''

ஜே.கே. ரௌலிங்
ஜே.கே. ரௌலிங்

`ஹாரி பாட்டர்' நாவல் மூலம் இன்றளவும் புனைவு எழுத்துலகின் பேசுபொருளாகத் திகழ்பவர் ஜே.கே.ரௌலிங். இங்கிலாந்தில் வசித்து வரும் இவர் லுமோஸ் என்ற குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். லண்டனில் நடைபெற்ற `One Young world' மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உலகம் முழுவதும் சேவை நோக்கத்துடன் எண்ணற்ற மாணவர்களும் இளைஞர்களும் அநாதை இல்லங்களுக்கு பயணம் செய்த வண்ணம் உள்ளனர். இதுபோன்ற நற்செயல் செய்வோருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாகப் பல குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து அவர்களைக் கடத்தும் செயல்களில் சில சமூக விரோதிகள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். `அநாதை இல்லச் சுற்றுலா' என்ற பெயரில் மிகப்பெரிய சந்தையொன்று செயல்பட்டு வருவதாகவும் அவ்வாறு கடத்தப்படும் குழந்தைகளிடம் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளதென்றும் இவர்களில் பலர் குற்றச் சம்பவங்கள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஜே.கே.ரௌலிங்
ஜே.கே.ரௌலிங்

நமது குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய பெருங்கொடுமையானது அவர்களை நிறுவனமயபடுத்துவதே என்றும் உலகிலுள்ள 80 லட்சம் குழந்தைகளில் 80% சதவிகிதம் பேர் அநாதை இல்லங்களில் வசிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இங்கிலாந்தின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான அலுவலகத்தோடு இணைந்து #HelpingNotHelping என்ற ஹேஷ்டேக் பிரசாரத்தைத் தொடங்கி வைத்து பேசிய அவர், நம்மிடம் உள்ள அறியாமையால் இதைப் போன்ற தீய செயல்களைச் செய்து வருவோர் பலர் சர்வதேச அளவில் நிதியை நம்மிடமிருந்தே திரட்டி வருவதாகக் கூறினார். மேலும், குழந்தைகளுக்கான சேவைகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்கள் அநாதை இல்லங்களைத் தவிர்த்து அவர்களுக்காகக் களத்தில் பணியாற்றும் அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.