Published:Updated:

`கொலையைப் போலவே வழக்கிலும் மர்மம்?' - கஷோகி விவகாரத்தில் வெடிக்கும் ஹேட்டிஸ் சென்ஜி!

பத்திரிகையாளர் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு சவுதி அரசு தூக்குத்தண்டனை வழங்கியுள்ளது.

ஹேட்டிஸ் சென்ஜி
ஹேட்டிஸ் சென்ஜி

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரான ஜமால் கஷோகி, சவுதி மன்னர் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். சவுதியில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததை உணர்ந்த ஜமால், அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். சவுதி அரச குடும்பத்தில் இளவரசருக்கு எதிரானவர்களுடன் ஜமாலுக்கு நல்ல நெருக்கம் இருந்தது.

ஜமால் கஷோகி
ஜமால் கஷோகி

இந்நிலையில், அக்டோபர் 2-ம் தேதி 2018-ல் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருக்கும் சவுதி தூதரகத்துக்குத் தன் திருமணம் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக வருங்கால மனைவியான ஹேட்டிஸ் சென்ஜியுடன் சென்றிருந்தார். கஷோகி மட்டும் தூதரகத்துக்குள் செல்ல சென்ஜி வெளியில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் கஷோகி வெளியில் வராததால், சென்ஜி உள்ளே சென்று விசாரித்தார். கஷோகி சென்று வெகுநேரமாகிவிட்டது என்ற பதிலே அவருக்குக் கிடைத்தது.

`வெட்டப்பட்ட விரல்கள்; அமிலத்தில் கரைக்கப்பட்ட உடல்!’- கஷோகி கொலையில் சவுதியின் தீர்ப்பு

ஜமால் கஷோகி கொல்லப்பட்டதாக துருக்கி அரசு அறிவித்தது. கஷோகியின் கொலையில் சவுதி அரசுக்குத் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. கஷோகி கொலைக்கு சவுதி இளவரசர் சல்மான்தான் காரணம் எனத் திட்டவட்டமாகக் கூறிய துருக்கி அரசு, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது. இதை சுவுதி அரசு மறுத்தது. இந்த விவகாரம் ஐ.நா வரை சென்றது. பல்வேறு நெருக்கடிகளுக்குப் பின்னர், ஜமால் கொல்லப்பட்டதை சவுதி அரசு ஒப்புக்கொண்டது. தூதரக அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் கொல்லப்பட்டதாக சவுதி தெரிவித்தது. ஆனால், இதுவரை ஜமாலின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரை கொலை செய்து உடலை அமிலத்தில் கரைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி

சவுதி அமைச்சரவையில் உயர்மட்ட பதவியில் இருக்கும் 11 பேர் ஜமால் கஷோகி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு தூக்குத்தண்டனையும், 3 பேருக்கு சிறைத்தண்டனையும் விதித்து சவுதி அரசு உத்தரவிட்டுள்ளதாக டிசம்பர் 23-ம் தேதி சவுதி அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை. ஜமால் கொலையைப் போன்றே இந்த வழக்கு விசாரணையும் மர்மமாகவே உள்ளது.

தீர்ப்பு குறித்து பேசியுள்ள ஹேட்டிஸ் சென்ஜி, ``நீதித்துறை விசாரணை முறையாக நடைபெறாமல் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அறிக்கைகள் ரகசியமாகவே உள்ளது. சவுதி வெளியிட்டு அறிவிப்பில் இந்தக் கொலை ஏன் நடந்தது, யார் செய்தார்கள். அவரது உடல் எங்கே போன்ற எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. 15 மாதங்களாக நாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறோம். இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தீர்ப்பில் பதில் இருக்க வேண்டும். இல்லையென்றால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாருக்கும் தண்டனை வழங்க முடியாது.

ஹேட்டிஸ் சென்ஜி
ஹேட்டிஸ் சென்ஜி

நான் இதை நிச்சயமாக ஏற்க மாட்டேன். இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது, இது சட்டத்துக்கு எதிரானது. வழக்கை விரைவாக முடிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பேசவிடாமல் தங்கள் தரப்பு நியாங்களை விளக்க வாய்ப்பு வழங்காமல் தூக்கிலிடப்பட்டால், இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையை நாம் ஒருபோதும் அறிய முடியாது” என வேதனையுடன் கூறினார்.