Published:Updated:

மியான்மர் வரலாறு: தொடர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கும் ராணுவம்..! - என்ன நடக்கிறது அங்கே?

`மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யப்பட்டு, ராணுவம் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டது’ என்ற செய்தி இன்றைய தேதியில் நமக்கு புதிதாக இருந்தாலும், அந்த நாட்டுக்கு ஆட்சிக் கவிழ்ப்பு என்பதும், ராணுவ ஆட்சி என்பதும் புதிதல்ல.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மியான்மரில் ராணுவத்தினரால் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங் சாங் சூகி உட்பட முக்கிய அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக் லீக் கட்சியினர் ஆட்சியில் இருந்த நிலையில்தான், அந்த ஆட்சியைக் கவிழ்த்து ராணுவத்தினர் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு நாட்டில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அரசுத் தொலைக்காட்சி சேவையும் முடக்கப்பட்டிருக்கிறது. வங்கி சேவைகளும் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து தனது ஆதரவாளர்கள் போராட வேண்டும் எனவும் ஆங் சாங் சூகி தெரிவித்திருக்கிறார்.

ஆங் சாங் சூகி
ஆங் சாங் சூகி
Aung Shine Oo

என்ன சொல்கிறது ராணுவம்?

2015-ம் ஆண்டு சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி நடத்திவந்தது. அதன் பிறகு தற்போது 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி வெற்றி பெற, வரும் திங்களன்று நாடாளுமன்றம் கூடவிருந்த வேளையில்தான் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடந்திருக்கிறது. இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு ராணுவம் சொல்லும் காரணம், தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என்பதுதான்.

2015-ம் ஆண்டு பெற்ற வெற்றியைக் காட்டிலும், 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரிதான ஒரு வெற்றியை சூகியின் தேசிய ஜனநாயக் லீக் கட்சி பெற்றது. இந்தத் தேர்தலில் அவர்கள் 83 சதவிகித வாக்குகளை அந்தக் கட்சி பெற்றிருந்தது. இருப்பினும், ஆட்சிக் கவிழ்ப்பு செய்திருக்கும் ராணுவம், இப்போது அதிகாரத்தை ராணுவத் தலைவர் ஜெனரல் மிங் ஆங் லெய்ங்கிடம் ஒப்படைத்திருக்கிறது.

மியான்மர்
மியான்மர்
Thein Zaw

ஓய்வுபெறும் தறுவாயை நெருங்கும் ஜெனரல் மிங் ஆங் லெய், நியாயமான ஒரு தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெறும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் எனப் பல்வேறு நாடுகள் ராணுவத்தினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

மியான்மரின் வரலாறு!

மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யப்பட்டு ராணுவம் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டது என்ற செய்தி இன்றைய தேதியில் நமக்குப் புதிதாக இருந்தாலும், அந்த நாட்டுக்கு ஆட்சிக் கவிழ்ப்பு என்பதும், ராணுவ ஆட்சி என்பதும் புதிதல்ல. மியான்மருக்கு 1948-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து விடுதலை கிட்டியது. இருப்பினும், நாட்டில் அமைதி நிலவவில்லை. அதன் பிறகு 1962-ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தலைவர் நிவின் தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து அதிகாரம் ராணுவத்திடம் சென்றது.

அதன் பிறகு 1988-ம் ஆண்டு ஜனநாயகத்துக்கு ஆதரவாகப் பல போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றில், கலந்துகொண்டார் ஆங் சாங் சூகி.

ஆங் சாங் சூகி
ஆங் சாங் சூகி

கிட்டத்தட்ட 15 வருடங்கள் வீட்டுக் காவலில் இருந்தவர் ஆங் சாங் சூகி. இவருக்கு 1991-ம் ஆண்டு நோபல் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் நடத்தப்பட்டவிதம் குறித்து இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இவர்மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

ஆங் சாங் சூகி
ஆங் சாங் சூகி
Aung Shine Oo

இவரின் தந்தை ஆங் சாங் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர். 1988-ம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற போராட்டத்தில் பாதுகாப்புப் படை தனது அடக்குமுறையை காட்டியது, பலர் கொல்லப்பட்டனர். 1989-ம் ஆண்டு ஆங் சாங் சூகி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். அடுத்த ஆண்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியை அவரிடம் கொடுக்க மறுத்துவிட்டது ராணுவம்.

மியான்மர்
மியான்மர்

2010-ம் ஆண்டு வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார் சூகி. அதன் பிறகு 2012-ம் ஆண்டு இடைத்தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஆனார்.

2015-ம் ஆண்டு சூகியின் தலைமையில் அவரின் தேசிய ஜனநாய லீக் கட்சி வெற்றி பெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கு அந்தத் தேர்தல் வித்திட்டது. தேர்தலில் வெற்றி பெற்றாலும் சூகியால் நாட்டின் அதிபராக பதவியேற்க முடியவில்லை. அதற்குக் காரணம், அவரின் மகன்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருந்தது. எனவே, மியான்மர் நாட்டின் தலைமை ஆலோசகரானார். அவர் அரசமைப்புப்படி அதிபராகச் செயல்படவில்லை என்றாலும், மியான்மரின் உயரிய தலைவராகவே செயல்பட்டுவந்தார்.

மியான்மர்
மியான்மர்

சூகியின் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ராணுவம் தனது அதிகாரத்தைச் செலுத்திவந்ததாகவே கூறப்படுகிறது. மியான்மர் அரசமைப்புப்படி, நாடாளுமன்றத்தில் கால் பங்கு எண்ணிக்கை ராணுவத்தினருக்கானது. அதேபோல முக்கிய அமைச்சரவையின் பொறுப்புகளும் ராணுவத்தினரிடமே இருக்கும்.

2017-ம் ஆண்டு ரகைன் நகரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று கூறப்பட்டு, ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ரோஹிங்கியா இனக்குழு மக்கள் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல நேர்ந்தது.

அகதிகளாக...
அகதிகளாக...
Azim Aunon

மியான்மரில் ரோஹிங்கியா இனத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா-வும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், தற்போது நாட்டில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை செய்து ஒரு வருடத்துக்கு ராணுவம் பொறுப்பிலிருக்கும் என்று கூறியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு