Published:Updated:

உளவாளி... காமெடியன்... அதிபர்கள் கடந்துவந்த பாதை!

விளாடிமிர் புதின் - வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
பிரீமியம் ஸ்டோரி
விளாடிமிர் புதின் - வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

2012-ல் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்ற புதின், முதல் வேலையாக ரஷ்ய அதிபரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டார்

உளவாளி... காமெடியன்... அதிபர்கள் கடந்துவந்த பாதை!

2012-ல் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்ற புதின், முதல் வேலையாக ரஷ்ய அதிபரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டார்

Published:Updated:
விளாடிமிர் புதின் - வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
பிரீமியம் ஸ்டோரி
விளாடிமிர் புதின் - வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் - ரஷ்யா போரை உலகமே அச்சத்துடன் உற்றுநோக்கி வருகிறது. கடந்த இரு வாரங்களாகத் தொடரும் இந்தப் போரால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர்மீது மொத்த உலகின் கவனமும் திரும்பியிருக்கிறது. இருவர் மீதுமே நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்படும் நிலையில் யார் இவர்கள், இவர்கள் கடந்துவந்த பாதை என்ன என்பதைப் பார்ப்போம்!

உளவாளி... காமெடியன்... அதிபர்கள் கடந்துவந்த பாதை!

சர்வதிகாரியான உளவாளி!

21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய போரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ரஷ்ய அதிபர் புதின், ஒரு காலத்தில் உளவாளி. 1952-ல் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தவர், லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1975-ல் ரஷ்யாவின் அதிகாரமிக்க கே.ஜி.பி உளவு அமைப்பில் அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார். உளவாளியாக இருந்த காலத்தில் சோவியத் யூனியனின் முக்கியத் தலைவர்களின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. 1991-ல் சோவியத் யூனியன் உடைந்த பிறகு, ரஷ்யாவின் அரசுப் பணியில் இணைந்து பணியாற்றினார். உயர் பதவிகளிலிருந்த பலரும் புதினுக்கு நண்பர்களானார்கள்!

1990-களின் பிற்பாதியில் ரஷ்யாவின் அரசியல் தலைவர்களுடனும், கட்சிகளுடனும் மேலும் நெருக்கமானார். இதன் பலனாக 1996-ல் ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சினின் சிறப்பு அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றார் புதின். அதிபரின் நம்பிக்கைக்குரியவராக மாறிய புதின், 1998-ல் `ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ்’ எனப்படும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்புக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பிரதமர் பதவியும் புதினைத் தேடிவந்தது. தனக்குப் பின்னர், புதின்தான் அதிபராக வேண்டும் என்பது யெல்ட்சினின் விருப்பமாக இருந்தது. அதை அவர் வெளிப்படையாகக் கூறியும்வந்தார். 2000-ம் ஆண்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் யெல்ட்சின். சில மாதங்களுக்கு இடைக்கால அதிபராகச் செயல்பட்டார் புதின்.

உளவாளி... காமெடியன்... அதிபர்கள் கடந்துவந்த பாதை!

தொடர்ந்து 2000-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர், சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, ரஷ்யாவின் அதிபரானார். 2001-ல் `ஐக்கிய ரஷ்யா’ என்ற கட்சியைத் தொடங்கிய புதின், 2004 அதிபர் தேர்தலிலும் வெற்றிபெற்றார். தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்க முடியும் என்பது ரஷ்யாவின் சட்டம். அதனால், 2008-ம் ஆண்டு தேர்தலில், தான் அதிபராக இருந்தபோது பிரதமர் பதவியை வகித்த டிமிட்ரி மெத்வதேவை அதிபராக்கினார் புதின். மெத்வதேவை பொம்மை அதிபராக வைத்துக்கொண்டு, மொத்த அதிகாரத்தையும் தானே வைத்திருந்தார் புதின்!

2012-ல் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்ற புதின், முதல் வேலையாக ரஷ்ய அதிபரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டார். உக்ரைனுடன் வெளிப்படையான முதல் உரசல் தொடங்கியது... 2014-ம் ஆண்டு உக்ரைனில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, அந்த நாட்டின் க்ரீமியா தீவை ரஷ்யாவோடு இணைத்துக்கொண்டார் புதின். 2018 தேர்தலிலும் வென்று மீண்டும் அதிபரானார். ஆனால், இம்முறை புதின் தேர்தலில் முறைகேடு செய்து வென்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அவர்களையும் விட்டுவைக்கவில்லை புதின். தன்மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய ‘ரஷ்யா ஆஃப் தி ஃபியூச்சர்’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவால்னியை பண மோசடி வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தார். நவால்னி 2018 அதிபர் தேர்தலிலும் போட்டியிட முடியாதபடி தடைவிதித்தார். தற்போது நவால்னியைத் தீவிரவாதி என்று அறிவித்திருக்கிறது ரஷ்ய அரசு.

ரஷ்யாவில் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்ற சட்டத்தின்படி, 2024-ம் ஆண்டுடன் புதினின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆனால், 2036 வரை தானே அதிபராக இருக்கும் வகையில் சட்டம் இயற்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அதை அமல்படுத்தியிருக்கிறார் புதின். உளவாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய புதின், இன்று சர்வாதிகாரத் தலைவராக மாறியிருக்கிறார்!

அதிபரான காமெடியன்!

அசுர பலம் கொண்ட ரஷ்யாவுக்கு எதிராக தனித்துப் போரிடும் வோலாடிமிர் ஜெலன்ஸ்கி, அதிபராவதற்கு முன்பாக நகைச்சுவைக் கலைஞராக இருந்தவர் என்பதுதான் ஆச்சர்யம். 1978-ல் உக்ரைனின் கிரிவி ரி (Kryvyi Rih) நகரில் பிறந்தார் ஜெலன்ஸ்கி. தலைநகர் கீவிலுள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர், சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஒரு கட்டத்தில் உக்ரைன்மீது ரஷ்யா ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டு ரத்தம் கொதித்த ஜெலன்ஸ்கி, உக்ரைனைச் சுதந்திர நாடாக மாற்ற விரும்பினார். 1995-ல் தன் நண்பர்களுடன் இணைந்து `க்வார்ட்டல் 95’ என்ற குழுவை ஆரம்பித்தவர், உக்ரைன் முழுவதும் பயணித்து, உக்ரைன்மீதான அந்நிய நாடுகளின் ஆதிக்கத்தை ஆவேசமாக எடுத்துரைத்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை... என்ன செய்வது என்று யோசித்தவர், க்வார்ட்டல் குழுவை நாடகக் குழுவாக மாற்றினார். மேடை நாடகங்கள் மூலம் ரஷ்யாவின் ஆதிக்கத்தையும், உக்ரைன் ஆட்சியாளர்களின் உழல்களையும் நையாண்டி செய்தார். இவர் செய்த நையாண்டி வேடங்களும், நகைச்சுவைப் பாத்திரங்களும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றன!

2003-ல் தனது நாடகங்களைத் தொலைக்காட்சிக்கும் எடுத்துச் சென்றார் ஜெலன்ஸ்கி. ஸ்டாண்ட்-அப் காமெடியனாக அரசியல் நையாண்டிகள் செய்தவர், உக்ரைன் முழுக்கப் பிரபலமானார். 2010-க்குப் பிறகு சில திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தார். 2014-ல் உக்ரைனின் க்ரீமியா தீவைக் கைப்பற்றியது ரஷ்யா. இதையடுத்து, ரஷ்ய ஆதரவாளரான அப்போதைய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடிக்க... அவர் தலைமறைவானார். இந்தக் கலவரங்கள் அடங்கிய நேரத்தில்தான் ஜெலன்ஸ்கியின் ‘சர்வன்ட் ஆஃப் தி பீப்பிள்’ டி.வி தொடர் வெளியாகி, மிகப்பெரிய ஹிட் அடித்தது. லட்சக்கணக்கான ரசிகர்கள் ஜெலன்ஸ்கியைக் கொண்டாடினார்கள்.

உளவாளி... காமெடியன்... அதிபர்கள் கடந்துவந்த பாதை!

தனக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஜெலன்ஸ்கிக்கு, கட்சி தொடங்கினால் என்ன என்ற யோசனை தோன்றியது. 2017-ல் தனது டி.வி தொடரின் பெயரிலேயே கட்சியைத் தொடங்கினார். ‘சர்வன்ட் ஆஃப் தி பீப்பிள்’ கட்சி உதயமானது! அதுவரை உக்ரைனிலிருந்த கட்சிகள் இரண்டு வகைகள்தான். ஒன்று ரஷ்ய ஆதரவுக் கட்சிகள்; இன்னொன்று ரஷ்ய எதிர்ப்பு கட்சிகள். ஆனால் ஜெலன்ஸ்கியோ, `உக்ரைனுக்கு எந்த நாடு உதவினாலும் ஆதரவு; இல்லையேல் எதிர்ப்பு’ என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் செய்யத் தொடங்கினார். மக்களுக்கு ஜெலன்ஸ்கியின் அரசியல் பிடித்துப்போக, 2019 தேர்தலில் 73 சதவிகித வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றார்.

அதிபராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாகவே இருந்தார் ஜெலன்ஸ்கி. ஆனால், ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன்மீது ஆதிக்கம் செலுத்த முற்பட்டதால் ரஷ்யாவுடனான உறவை முறித்துக்கொண்டார். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் நட்புறவைப் பேணத் தொடங்கிய ஜெலன்ஸ்கி, கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் உக்ரைனை வளர்ச்சியடையச் செய்தார். இவ்வளவு காலம் தனது கட்டுப்பாட்டிலிருந்த உக்ரைன், இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமாவதை புதின் விரும்பவில்லை. நேட்டோ கூட்டமைப்பிலும் உக்ரைனை ஜெலன்ஸ்கி சேர்க்க முயன்றது புதினை இன்னும் கோபமடையச் செய்தது. அந்தக் கோபமே தற்போது போராக மாறியிருக்கிறது!

போர் தொடங்கிய இரண்டாவது நாளில், `உக்ரைன் அதிபர் தப்பி ஓடிவிட்டார்’ என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்போது, ``நான் எங்கும் ஓடவில்லை; உக்ரைன் மக்களோடுதான் இருப்பேன்’’ என்று வீடியோ வெளியிட்டார் ஜெலன்ஸ்கி. குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தபோது உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கையூட்டும்விதமாக அமைந்தது அந்த வீடியோ. அதேசமயம், அழிவுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் `போர் எப்போது நிற்கும்?’ என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கண்ணீருடன் கேள்வி எழுப்புகிறார்கள் உக்ரைன் மக்கள். அமைதியையும் மனிதநேயத்தையும் விரும்பும் அனைவரின் கேள்வியும் அதுதான்!