Published:Updated:

`மதுபோதை கூடாது; வேகக் கட்டுப்பாடு!' - குதிரையில் செல்பவர்களுக்கும் கண்டிப்பு காட்டும் ஆஸ்திரேலியா

குதிரையில் பயணிப்பவர்களும் மது அருந்தியிருக்கிறார்களா என்று கண்டறிய ஆஸ்திரேலிய காவலர்கள் தற்போது பரிசோதனை செய்கிறார்கள்.

குதிரை சவாரி
குதிரை சவாரி

மதுபோதையில் குதிரை சவாரி செய்வது பெரும்பாலான நாடுகளில் சட்டவிரோதமானதே. குதிரையில் செல்பவர்களும் மோட்டார் வாகன சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும் என்பது பல நாடுகளில் விதிமுறையாகவே பின்பற்றப்படுகிறது. அதனால், அந்த நாடுகளில், குதிரை சவாரி செய்பவர்களையும் காவலர்கள் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள்.

Horse riders
Horse riders

மது அருந்துவிட்டுக் குதிரையில் பயணிப்பவர்களுக்கு செக் வைத்திருக்கிறது ஆஸ்திரேலிய காவல்துறை. கடந்த சில நாள்களுக்கு முன் மேற்கு ஆஸ்திரேலியாவின் பெவர்லி காவலர்கள் மது பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்காகக் குதிரையில் பயணித்தவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். மேலும் அந்தப் பதிவில், `150 வாகனங்கள் மற்றும் 2 குதிரைகளை நிறுத்தி அதை ஓட்டி வந்தவர்களிடம் பரிசோதனை செய்தோம். அதில், யாருமே மது அருந்தவில்லை. வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.

`குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.16,000 அபராதம்!' - தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி

மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தைப் பொறுத்தவரை போக்குவரத்துச் சட்டங்களின் கீழ், சாலைகள் மற்றும் நடைபாதைகள் மீது குதிரைகள் சென்றால் அதுவும் ஒரு வாகனமாகவே கருதப்படும். இதனால், அங்கு வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் குதிரைகளில் பயணிப்போரும் கடைப்பிடிக்க வேண்டும். தெற்கு ஆஸ்திரேலியாவிலும் இதே சட்டம்தான். நியூ சவுத் வேல்ஸில் மது மட்டுமல்லாமல் எந்த போதைப் பொருளை உட்கொண்ட பின்னர் குதிரை சவாரி செய்தாலும், அது விதிமீறலாகவே கருதப்படும்.

Australian police
Australian police

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இந்த விதிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ஒயின் குடித்துவிட்டு குதிரையில் பயணித்த சார்மின் மெக்கொயர் என்ற பெண் கடந்த ஜூனில் குயின்ஸ்லாந்து போலீஸாரிடம் சிக்கினார். அந்த மாகாணத்தில், குடிபோதையில் வாகனம் அல்லது குதிரையில் பயணிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 4000 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் அல்லது 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அதுவே ஆஸ்திரேலியா தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில், 5000 டாலர்கள் அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை என்று விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

அதேசமயம் விக்டோரியா மாகாணத்தில் குதிரையில் செல்பவர்களைத் தண்டிக்க என பிரத்யேகச் சட்டங்கள் இல்லை. அதனால், அவர்களைப் போக்குவரத்து விதிமீறல் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல், பொது இடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்கிறோம் என்கிறார்கள் அம்மாகாண காவல்துறையினர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் தேசிய அளவிலான சாலை மற்றும் சாலையில் பயணிப்போர் சங்கமான NRMA, ``குதிரை சவாரி செய்யும்போதும் போக்குவரத்துச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். அதனால், வேகக் கட்டுப்பாட்டுடனும், பயணத்தின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது'' என்று எச்சரித்திருக்கிறது.