Published:Updated:

`என் சகோதரனுக்கு கண்ணிவெடி; எனக்கு கொரோனா!' நெகிழவைக்கும் சீன செவிலியரின் பணி

டு புஜியா
டு புஜியா

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் டு புஜியா-வின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

``மருத்துவமனைதான் என்னுடைய போர்க்களம். நோயாளிகளைக் குணப்படுத்தி அனுப்புவதே என்னுடைய தலையாய பணி’ எனக் கூறி நெகிழ வைக்கிறார், சீனாவைச் சேர்ந்த டு புஜியா (Du Fujia). கொரோனா தாக்கம் சீனாவை அச்சுறுத்திவருகிறது. சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2,345 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 76,288-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரிய அளவில் குறையத் தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
`என் மூலமாக வைரஸ் பரவுவதை விரும்பவில்லை!’- கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட  ஆப்பிரிக்க இளைஞர்

கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில், மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுகின்றனர். மருத்துவப் பணியாளர்களும் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இப்படி தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிசெய்துவரும்,மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் சமீபத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார் ஒரு செவிலியர். அவர் பெயர், டு புஜியா (Du Fujia). சீனாவில் இவரின் செயலை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

சீனாவில், ஏராளமான மருத்துவர்களும் செவியர்களும் மக்களுக்கான பணியில் ஈடுபட்டுவரும்நிலையில், டு புஜியா கவனம் பெறுவதற்குக் காரணம், அவரது சகோதர் டு ஃபுகுவோதான். சீன ராணுவத்தில் பணியாற்றும் டு ஃபுகுவோ கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, குண்டு வெடித்ததில் அவரது கைகளையும் கண் பார்வையையும் இழந்துள்ளார். கடந்த ஜூலை மாதம்தான் விழா ஒன்றை ஏற்பாடு செய்து, சீன ராணுவம் அவரை கௌரவித்தது. அந்த ``சகோதரனைப் போலவே மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகிறார், டு புஜியா" என்று கூறி பாராட்டிவருகின்றனர் அந்நாட்டு மக்கள்.

டு ஃபுகுவோ
டு ஃபுகுவோ

``என் சகோதரியை நினைத்துப் பெருமைகொள்கிறேன். துப்பாக்கிகளும் புகையும் இல்லாமல் இந்தப்போர் விரைவில் முடியும் என நம்புகிறேன். நோயாளிகளைக் காப்பாற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதில் அவர்கள் உண்மையாக இருக்கிறார்கள். வலுவாக இருங்கள் மருத்துவர்களே... வலுவாக இரு வுஹான், வலுவாக இரு சீனா..!" என டு ஃபுகுவோ கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த ரியல் ஹீரோவின் வார்த்தைகளுக்குப் பிறகு, அவரது தங்கை கவனம் பெறத் தொடங்கினார். நாட்டுக்காக இவர்கள் ஆற்றும் சேவைகுறித்து இணையவாசிகள் நெகிழச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள டு புஜியா, ``கண்ணிவெடிகள் என் சகோதரனின் போராட்டமாக இருந்தது; இந்த கொரோனா வைரஸ் என்னுடைய போராட்டமாக இருக்கிறது. போர்க்களம் என் சகோதரனுடையது என்றால், மருத்துவமனை என்னுடையது. நோயாளிகளைக் குணப்படுத்துவது மருத்துவர்கள், செவிலியர்களின் பணி. நாட்டுக்காக இந்தச் சேவையை செய்து வருகிறோம். என் சகோதரனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவரது ஆற்றலும் தைரியமும்தான் என்னை வழிநடத்துகிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நாளில் என் சகோதரன் குடும்பத்துடன் இருக்கிறார். என்னால்தான் அவருடன் இருக்க முடியவில்லை. நான் இங்கு இருப்பது குறித்து என் குடும்பத்தினரிடம் கலந்தாலோசிக்கவில்லை. அவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என எனக்குத் தெரியும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு