`பணியிலிருந்து பிரேக், மனைவிக்காக பிரசாரம்!' கவனம் ஈர்க்கும் கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப்

தன் மனைவியின் தேர்தல் பிரசாரத்துக்கு நேரத்தைச் செலவிடுவதற்கும், ஜனநாயக கட்சிக்கு ஆதரவைச் சேகரிப்பதற்கும் ஆகஸ்ட் முதல் தனது நிறுவனத்திலிருந்து விடுமுறை எடுத்துள்ளார் எம்ஹாஃப்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடன், செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராவார். அவரின் கணவரான பிரபல வழக்கறிஞர் டக்ளஸ் எம்ஹாஃப், நாட்டின் முதல் `இரண்டாவது மனிதர் (second gentleman)' ஆவார். துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல் ஆசிய அமெரிக்கப் பெண்மணியாக கமலா ஹாரிஸ் பல அரசியல் தடைகளை உடைத்துள்ள நிலையில், அவரின் கணவரின் பற்றிய பாசிட்டிவ் பேச்சுகளும் செய்திகளில் மேலெழும்புகின்றன.
கமலா ஹாரிஸின் தேர்தல் பிரசாரங்களில் முதல் ஆதரவாளராக இருக்கும் எம்ஹாஃப், பெரும்பாலும் ஹாரிஸின் நிகழ்வுகளில் `கமலா டி-ஷர்ட்'டுடன் காணப்படுகிறார். அவர் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஓர் எதிர்ப்பாளர் செனட்டரின் மைக்ரோபோனை பிடிக்க முன்னே வந்தபோது ஹாரிஸைப் பாதுகாக்க விரைந்து பெரும் கவனத்தை ஈர்த்தார் எம்ஹாஃப். அமெரிக்க அதிபரின் மகனான டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், `ஹாரிஸ் கறுப்பின அமெரிக்கர் அல்லர்' என்ற இனவெறிப் பொய்யை ட்வீட் செய்தபோது, ஹாரிஸுக்கு ஆதரவுக்கு வந்தார் எம்ஹாஃப். எம்ஹாஃப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒவ்வொரு புகைப்படமும் கமலாவின் கொண்டாட்டம், பிரசாரத்தில் அவரது முன்னேற்றம் போன்றவற்றையே பதிவு செய்வதாக இருக்கிறது.

எம்ஹாஃப், நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் பிறந்தவர். தெற்கு கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தின் கோல்ட் ஸ்கூல் ஆஃப் லாவில் பட்டம் பெற்றார். தன் திருமணத்துக்குப் பின்பு சட்ட நிறுவனமான டி.எல்.ஏ பைப்பரில் பங்குதாரராக இருந்தார். அவரது நிறுவனத்தின் சுயவிவரத்தின்படி, தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள், சிக்கலான வணிக, ரியல் எஸ்டேட் மற்றும் அறிவுசார் சொத்து வழக்குகளில் இன்றைய வி.வி.ஐ.பிக்களின் வழக்குகளைக் கையாண்ட அனுபவம் உள்ளவர்.
தற்போது, தன் மனைவியின் தேர்தல் பிரசாரத்துக்கு நேரத்தைச் செலவிடுவதற்கும், ஜனநாயக கட்சிக்கு ஆதரவைச் சேகரிப்பதற்கும் ஆகஸ்ட் முதல் தனது நிறுவனத்திலிருந்து விடுமுறை எடுத்துள்ளார் எம்ஹாஃப்.
1992-ம் ஆண்டு, எம்ஹாஃப் தன் முதல் மனைவி கெர்ஸ்டினை மணந்தார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் விவாகரத்து செய்தாலும், நல்ல நட்பில் இருக்கிறார்கள். ஹாரிஸின் தேர்தல் வாய்ப்பையும் கெர்ஸ்டின் ஆதரித்திருக்கிறார். எம்ஹாஃப் மற்றும் கெர்ஸ்டினுக்கு கோல், எலா என இரண்டு பிள்ளைகள். ``எனக்கும் என் சகோதரனுக்கும் நீங்கள் எப்போதும் உலகின் சிறந்த சித்தி (stepmom)" என்று ஹாரிஸைப் பற்றிச் சொல்கிறார் எலா.
எம்ஹாஃப், ஹாரிஸை ஒரு பிளைண்ட் டேட்டில் சந்தித்தார். எம்ஹாஃப் தன் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து செய்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஹாரிஸை சந்தித்த அந்த நேரத்தில், ஹாரிஸ் கலிபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றி வந்தார். ஒரு நிகழ்வில் ஹாரிஸுடனான சுருக்கமான சந்திப்புக்குப் பின்னர், ஒரு வருட டேட்டிங் முடிந்த பிறகு, ஹாரிஸிடம் திருமண விருப்பத்தை எம்ஹாஃப் தெரிவித்தார். இந்தியரான கமலா ஹாரிஸ் திருமணத்தில் கழுத்தில் பூமாலை அணிந்தும், எம்ஹாஃப் யூத பாரம்பர்யத்தை குறிக்கும் வகையிலும் தயாராகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விழாவுக்கு ஹாரிஸின் சகோதரி மாயா தலைமை தாங்கினார்.
இப்போது ஹாரிஸின் அரசியல் முன்னேற்றங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார் எம்ஹாஃப். இந்த அனுபவம் எல்லையற்ற ஆர்வத்தைத் தருவதாகக் கூறுபவர், தன் ட்விட்டர் பயோவில் தன்னை `@கமலஹாரியின் கணவர்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

``ஹாரிஸின் அரசியல் முடிவுகள் அனைத்தையும் நான் இதுவரை ஆதரித்திருக்கிறேன்" என்று சொல்லும் எம்ஹாஃப், ``ஆனால், நான் அவருடைய அரசியல் ஆலோசகர் அல்லர். நான் அவர் கணவன். ஆகவே, அவருக்காக இருப்பது, அவரை நேசிப்பது, அவரைப் பார்த்துக்கொள்வது, அவருக்கு உதவுவது என் வேலை" என அன்பைப் பொழிந்துள்ளார் எம்ஹாஃப்.