Published:Updated:

கொரோனா Vs ட்ரம்ப்பின் மீடியா உத்தி! - வாசகர் பார்வை #MyVikatan

Trump
Trump ( Evan Vucci / AP )

சர்ச்சை எதுவானாலும் பின்வாங்காமல் சமாளித்து பின்னர், ``நான் அப்பவே சொன்னேன்ல" என அந்தச் செய்தியையே தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதுதான் ட்ரம்ப்பின் பலம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மூக ஊடகங்களை அரசியலுக்காகப் பயன்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வேறெந்த அரசியல் தலைவராலும் விஞ்ச முடியாது. சமூக ஊடகங்களைத் தேர்தல் பிரசார சாதனங்களாகப் பயன்படுத்திக்கொள்ளும் பல உலகத் தலைவர்களும் வெற்றிபெற்ற பின்னர், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை மறப்பது போலவே அந்த ஊடகங்களையும் மறந்துவிடுவதுதான் வழக்கம். இதற்கு நேர்மாறாய் தனது முதல் இரண்டரை வருட ஆட்சிக் காலத்தில் மட்டுமே ட்ரம்ப் 17,000 ட்விட்டர் குறுஞ்செய்திகளை அனுப்பியிருக்கிறார்.

சமூக ஊடகங்கள் தொடங்கி சர்வதேச மீடியா வெளிச்சம் வரை எங்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் ட்ரம்ப் கடைப்பிடிக்கும் தடாலடி வழிமுறைகளும் வேறெந்த உலகத் தலைவரும் பின்பற்றாதவை.

Trump
Trump
Alex Brandon / AP

ஆட்சியின் ஆரம்பத்தில் வைரலாகிய அவரது கைகுலுக்கும் பாணி தொடங்கி தற்போதைய கொரோனா பரவல் வரை ட்ரம்ப் எந்தச் சூழலில் எப்படி நடந்துகொள்வார், என்ன பேசுவார் என்பது அவரது சகாக்களுக்கே தெரியாது. 2019-ம் ஆண்டில் ட்ரம்ப் வெளியிட்ட சில ட்விட்டர் செய்திகள் இனவெறியைத் தூண்டுவதுபோல் அமைந்ததால் அந்தச் செய்திகளைத் தணிக்கை செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஓட்டெடுப்பு நடத்தும் அளவுக்குப் போனது. ஓட்டெடுப்பு தோற்றாலும், இனவெறி கருத்துகள் முதல் நம்ம ஊர் `தெர்மக்கோல்' பாணி விஞ்ஞான யோசனைகள் வரை ட்ரம்ப்பின் குறுஞ்செய்திகள் அனைத்தும் அடாவடி அட்ராசிட்டிதான்.

சர்ச்சை எதுவானாலும் பின்வாங்காமல் சமாளித்து பின்னர், "நான் அப்பவே சொன்னேன்ல" என அந்தச் செய்தியையே தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதுதான் ட்ரம்ப்பின் பலம்.

மெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நேரத்தில் வந்து குதித்திருக்கும் கொரோனா பெருந்தொற்றை அரசியல் பிரசார வியூகமாய் இவர் பயன்படுத்தி அடிக்கும் இம்சை அரச லூட்டிகளை பார்க்கச் சகிக்காமல் அமெரிக்காவின் பெரும்பாலான ஊடகங்களே, ` வாணாம்... முடியல' எனப் புலம்புகின்றன.

கொரோனா பெருந்தொற்றின் ஆரம்பத்தில் வார்த்தைக்கு வார்த்தை, `வுகான் வைரஸ்' என்று குறிப்பிட்டு சீனாவைக் கடுப்பேற்றினார். எல்லைகள் தாண்டி தொற்று பரவ ஆரம்பித்ததும் கொரோனா எனக் குறிப்பிடத்தொடங்கி, சீனாவிடமிருந்து மாஸ்க்குகள், இந்தியாவிடமிருந்து மருந்துகள் எனக் கோரிக்கை அரசியலுக்குத் தாவி, பிறகு, ` எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகணும்' என மீண்டும் சீனாவை எச்சரிக்க, `வுகான் வைரஸ்' வார்த்தைகளை கையிலெடுத்துக்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று பேரிடர் மேலாண்மையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், மருத்துவ நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மைக்காகவும் அனைத்து நாடுகளின் தலைவர்களும் அன்றாட கொரோனா நடவடிக்கைகளைப் பற்றி விளக்க அந்தந்த நாட்டு மருத்துவ நிபுணர்களையும் விஞ்ஞானிகளையும் ஊடகங்களில் முன்னிறுத்தி அரசியலை அடக்கி வாசிக்கும் சூழலில், ஒவ்வொரு மாலையும் கொரோனா நிலவரம் பற்றி விளக்க வெள்ளை மாளிகையில் நடத்தப்படும் நிருபர்கள் சந்திப்பில் ட்ரம்ப் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருக்கிறார்.

Trump
Trump
Evan Vucci / AP

இந்த சந்திப்புகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் மூத்த நோயெதிர்ப்பு நிபுணரான ஆண்டனி பெவ்சி,

" ஊரடங்கு போன்ற தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்காவிட்டால் அமெரிக்கா மாபெரும் அழிவை சந்திக்க நேரும்" என சீரியஸாகப் பேசியதற்கு பிறகு மைக்கை பிடித்த ட்ரம்ப்,

"இது சாதாரண ப்ளூ ஜுரம் போன்றதுதான்" என ஒரே போடாகப் போட, ஆண்டனி பெவ்சியின் முகம் அழாத குறையாக அஷ்ட கோணலாகிப்போனது.

இதே நோயெதிர்ப்பு நிபுணர், கொரோனாவுக்கு எதிராக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் நம்பகத்தன்மை இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் கொரோனாவை முற்றிலுமாகக் குணப்படுத்தக்கூடிய மருந்து எதுவும் கிடையாது எனவும் தெரிவித்தபோது, தனக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாக உறுதி கூறினார் ட்ரம்ப்.

அதே சந்திப்பில் என்பிசி செய்திச் சேனலின் நிருபர்,

"ஆனால் ஆண்டனி, கொரோனாவுக்கு எதிரான மேஜிக்கல் மருந்து கிடையாது என்கிறாரே?" எனக் கேட்க,

"இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், நான் எதையும் பாசிட்டிவாகப் பார்ப்பவன்" எனத் தன் பாணியில் குழப்பினார்.

மீண்டும் அதே நிருபர்,

"நாளுக்கு நாள் உயரும் உயிரிழப்பு எண்ணிக்கையால் பயந்துகொண்டிருக்கும் மக்களுக்காக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க,

"நீங்கள் ஒரு பயங்கரமான நிருபர் எனச் சொல்வதைத் தவிர வேறொன்றும் இல்லை" எனப் பதிலளித்து ஊடகங்களைத் திடுக்கிட வைத்தார்.

Trump
Trump
Alex Brandon / AP

அடுத்தடுத்த நாள்களில் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கான கோரிக்கையையும் வைத்த ட்ரம்ப், இப்போது அந்த மருந்தையே மறந்துவிட்டு பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன எனக் குறிப்பிடத் தொடங்கிவிட்டார்.

ரடங்கெல்லாம் அவசியமில்லை என்பதாகப் பேசிக்கொண்டிருந்த அமெரிக்க அதிபரை நடுநிலையான ஊடகங்கள் வறுத்தெடுத்த வேலையில், ட்ரம்ப்பின் சொந்த தொலைக்காட்சியில் தோன்றிய அவரது முதிய ஆதரவாளர்கள்,

"அமெரிக்காவின் பொருளாதாரத்துக்காக முதியவர்களான நாங்கள் கொரோனாவால் உயிரிழக்கத் தயார்" என நம்மூர் தொண்டரடிப்பொடிகளின், `உடல் மண்ணுக்கு, உயிர் தலைவனுக்கு' எனக் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

மெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 30,000-த்தை எட்டியபோது, எதிர்க்கட்சியான டெமாக்ரெடிக் கட்சி ஆளுநர்களின் பொறுப்பிலிருக்கும் மிச்ஸிகன், வெர்ஜீனியா மற்றும் மினசோட்டா மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மூன்று மாநிலங்களையும் விடுதலை செய்யுங்கள் என ட்ரம்ப் டிவிட்ட, அந்த மூன்று மாகாணங்களிலும் ஆயிரக்கணக்கான ரிபப்ளிகன் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

50,000-க்கும் மேற்பட்டவர்களை கொரோனாவுக்குப் பறிகொடுத்து, கொரோனா தொற்றின் மிக அதிகமான பாதிப்புக்கு அமெரிக்கா தள்ளப்பட்டிருக்கும் சூழலில், சில நாள்களுக்கு முன்னர் ட்ரம்ப் சொன்ன யோசனையைக் கண்டு அகில உலக ஊடகங்களும் அழுவதா சிரிப்பதா எனத் தெரியாமல் ஸ்தம்பித்துவிட்டன.

கோடைக்காலம் வந்தால் கொரோனா மறைந்துவிடும் என்ற கருத்தை ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறார் ட்ரம்ப். இதே கருத்து சில ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுகிறது. வருடாவருடம் குளிர் காலத்தில் ஏற்படும் ப்ளூ ஜுரத்துடன் கொரோனாவை ஒப்பிட்டதால் எழுந்த கருத்து இது.

Trump
Trump
Alex Brandon / AP

சில நாள்களுக்கு முன்னர் நடந்த வெள்ளை மாளிகை நிருபர் சந்திப்பில், மனித உடலுக்கு வெளியே பலமணி நேரங்கள் முதல் ஒரு சில நாள்கள் வரை சூழலுக்கு ஏற்ப உயிர் வாழும் கொரோனா கிருமிகளை நேரடியான சூரிய வெப்பமும் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினிகளும் அழித்துவிடுகின்றன என அறியப்பட்ட ஒரு அமெரிக்க ஆய்வின் முடிவு வாசிக்கப்பட்டது!

பின்னர் பேச ஆரம்பித்த ட்ரம்ப், " நான் அப்பவே சொன்னேன்ல" என ஐடியா அய்யாசாமியாக அள்ளி வீசிய யோசனைகள்தான் அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்தன.

"வெப்பமும் கிருமிநாசினிகளும் கொரோனா கிருமியைக் கொல்லும் என்றால் நாம் ஏன் புற ஊதாக் கதிர்களை நோயாளிகளின் உடம்பில் செலுத்தக் கூடாது... அதேபோல கிருமி நாசினிகளையும் ஊசி மூலம் செலுத்தலாம்தானே... இந்த வகையான ஆராய்ச்சிகளை ஏன் முன்னெடுக்கக் கூடாது?" எனப் படு சீரியஸாக ட்ரம்ப் பேசப் பேச, அங்கு கூடியிருந்தவர்களின் முகங்கள் பேஸ்த்தடித்தன.

" இதில் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும்‘" என்று ட்ரம்ப் முத்தாய்ப்பாக முடித்துக்கொண்டாலும் பத்திரிகை, தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும், "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே இந்த ட்ரம்ப்" என மீண்டும் ஆரம்பித்துவிட்டன.

கண்டனங்களும் கேலிகளும் ஒரு புறமிருக்க, புற ஊதாக் கதிர்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் எச்சரிக்க தொடங்கிவிட்டனர். எங்கள் நிறுவனத்தின் கிருமிநாசினி திரவங்களை உட்கொள்வதோ, ஊசி மூலம் உடம்பில் ஏற்றுவதோ மிக மோசமான விளைவுகள் ஏற்படுத்தும் என இங்கிலாந்தின் முன்னணி வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று அறிவித்திருக்கிறது.

Trump
Trump
Alex Brandon / AP

" அமெரிக்க அதிபரின் இதுபோன்ற கருத்துகள் ஆபத்தானவை. ட்ரம்ப்பின் பேச்சை வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் ஆதரவாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்" என எச்சரித்திருக்கிறார் அமெரிக்காவில் வாழும் உலகப்புகழ் பெற்ற நுரையீரல் நிபுணரும் என்பிசி நியூஸ், நியூயார்க் டைம்ஸ் போன்ற பிரபல ஊடகங்களின் சுகாதார ஆலோசகருமான டாக்டர் வின் குப்தா.

இத்தனைக்கும் பிறகு, `அவை நான் கிண்டலாகக் கூறியவைதான்' என ட்ரம்ப் சமாளிப்பு அறிக்கை வெளியிட, `அதிபரின் கருத்துகளை சர்ச்சைகளாக்க வேண்டாம்' என அறிவித்திருக்கிறது வெள்ளை மாளிகை.

மேலோட்டமாகப் பார்த்தால் இம்சை அரசனின் நடவடிக்கைகளாக தெரியும். டொனால்டு ட்ரம்ப்பின் இது போன்ற செயல்களில்தான் அவரது பலமும் அடங்கியிருக்கிறது. பெரும்பாலான தலைவர்கள் ஆட்சியிலிருக்கும் காலங்களில் தங்களின் அடிமட்டத் தொண்டர்களை மறந்துவிடுவார்கள். அதிரடியை விரும்பும் இந்தத் தொண்டர்களை தன் தொடர்பில் வைத்திருக்க, இதுபோன்ற சர்ச்சைகளைப் பயன்படுத்திக்கொள்கிறார் ட்ரம்ப்.

வளைகுடா, வடகொரியா போன்ற மிக சென்சிட்டிவான பிரச்னைகளின்போதுகூட, "அமெரிக்காவுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்", "காணாமல் போய்விடுவீர்கள்" என்பது போன்ற தடாலடி மிரட்டல் ட்விட்டர்களைத் தட்டிவிடுவார் ட்ரம்ப்.

"தலைவா" எனத் தொண்டர்கள் அலறும் சமயத்தில் அமைதியாய் காய்களை நகர்த்திக்கொள்வார். ஆரம்பத்தில் வடகொரியாவின் அதிபரை மிரட்டியவர், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அரவணைத்துக் கொண்டதை உதாரணமாகக் கூறலாம்.

நடுநிலையான அமெரிக்க ஊடகங்களும் அறிவுஜீவிகளும் தலையில் அடித்துக்கொண்டாலும், ரிபப்ளிகன் கட்சியின் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான தொண்டர்கள் ட்ரம்ப்பை இன்னும் ஆதரிப்பதற்கு அவரது மீடியா உத்தியைத்தான் காரணமாகக் கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள். ஆனால், இதே பழக்கத்தால் புது ஆதரவாளர்களை அவரால் கவர முடியவில்லை என்பதும் உண்மை.

கொரோனாவுக்குப் பிறகான உலகளாவிய பரபரப்பாகப்போகும் அமெரிக்க தேர்தலின் முடிவைப் பொறுத்துதான், `டொனால்டு ட்ரம்ப்... அப்பாடக்கரா... அல்லது கைப்புள்ளயா?' என்பது தெரிய வரும்.

- காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு