Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!
சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 20-ம் தேதி நிறைவடைகின்றன. இந்தப் போட்டிகள் முடிவதற்குள்ளாகவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது எனக் கூறி, தன்னாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறச் சொல்லியிருக்கிறது அமெரிக்கா. பிரிட்டன், எஸ்டோனியா, லத்திவியா, நார்வே ஆகிய நாடுகளும் இதேபோல தங்கள் நாட்டு மக்களை அறிவுறுத்தியிருக்கின்றன.
உக்ரைன் எல்லைகளில் குவிக்கப்பட்டிருக்கும் ரஷ்ய படைவீரர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்திலிருந்து 1,30,000 ஆக உயர்ந்திருக்கிறது. முன்பைவிட, பெரியளவில் முகாம்களையும் அமைத்திருக்கிறது ரஷ்யா.
``எனவே இன்னும் சில நாள்கள்தான்” என எச்சரிக்கின்றன மேலை நாடுகள். ஆனால், ரஷ்யாவோ அமைதி காக்கிறது.
ஒருவேளை ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து, அதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் நேரடியாகத் தலையிட்டால் நிச்சயம் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மிகப்பெரிய மோதலாக இது இருக்கும். ஐரோப்பாவின் அமைதி குலையும். உலகப் பொருளாதாரத்தில் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவற்றைத் தாண்டி இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?
நிச்சயமாக. மாணவர்கள், ஊழியர்கள் எனச் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் வசிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது முதல் பணி. இது மட்டுமே உக்ரைன் பிரச்னையால் இந்தியா சந்திக்கும் நேரடி சவால். ஆனால், மறைமுகமாக இன்னும் பல சவால்கள் இந்தியாவுக்கு காத்திருக்கின்றன. அவை என்ன?
மொத்தம் 3 முக்கிய சவால்கள்.
1. ரஷ்யாவுடனான நட்பு
2016 - 20 காலகட்டத்தில் இந்தியா இறக்குமதி செய்த பாதுகாப்பு தளவாடங்களில் சுமார் 50% ரஷ்யாவிலிருந்து வந்தவை. இந்திய விமானப்படையில் இருக்கும் 71% ஜெட் விமானங்களும் ரஷ்யாவிலிருந்து வந்தவை அல்லது ரஷ்ய உதவியுடன் தயாரிக்கப்பட்டவையே. அண்மையில் இந்தியா வந்து சேர்ந்த ஏவுகணை பாதுகாப்பு தொழில்நுட்பமும் (S-400 ட்ரையம்ப்) ரஷ்யாவுடையதே.
இவற்றை இங்கு குறிப்பிடக் காரணம், நம் நாட்டின் பாதுகாப்பு படைகளில் ரஷ்யாவின் ஆதிக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை உணர்த்தவே!
இதுமட்டுமன்றி, சர்வதேச அளவில் பல விவகாரங்களில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகவும் இருக்கிறது ரஷ்யா. இந்த உறவுக்கு, உக்ரைன் பிரச்னையால் சிக்கல் ஏற்படலாம்.
இப்போதுவரை, `உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு’ எனச் சொல்லி, அமெரிக்கா - ரஷ்யா இருவர் பக்கமும் சாயாமல் இருக்கிறது இந்தியா. ஆனால், நாளையே உக்ரைன் பிரச்னை உச்சம் தொடும்பட்சத்தில் ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்தாக வேண்டும்; இல்லையெனில், இரண்டு பக்கமும் அதிருப்தியைச் சந்தித்தாக வேண்டும். சரி, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் என்னாகும்?
2. அமெரிக்காவுடன் உரசல்?
வேறென்ன? அமெரிக்காவுடனான உறவு இன்னும் சிக்கலாகும். ஆசியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், அதை எதிர்கொள்வதற்காக Quad அமைப்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது அமெரிக்கா.
தீராத எல்லைப் பிரச்னை, இலங்கை - பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஆதிக்கம் என சீனாவால் நெருக்கடியை சந்திக்கும் இந்தியாவுக்கு, அமெரிக்காவின் நட்பு எப்போதும் விட இப்போது மிக அவசியம்.
மேலும், ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளின்மீது CAATSA (Countering America's Adversaries Through Sanctions Act) சட்டத்தின்படி, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும். ரஷ்யாவுடனான S-400 ட்ரையம்ப் ஒப்பந்தத்தைக் காரணம்காட்டி இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தியாவுடனான நட்புறவு காரணமாக அதைத் தள்ளி வைத்திருக்கிறது. ஒருவேளை உக்ரைன் விவகாரத்தில் இந்தியா, ரஷ்யா பக்கம் சாய்ந்தால், இந்தப் பொருளாதாரத் தடைக்கு வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த S-400 ட்ரையம்ப்-ன் முக்கியத்துவம் குறித்த TSL Explainer
3. சீனாவின் ஆதிக்கம்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை அந்நாட்டின்மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும். இது இயல்பாகவே, ரஷ்யாவை சீனாவை நோக்கித் தள்ளும்.
இப்படி, அமெரிக்காவை பொது எதிரியாகக் கருதும் இரண்டு நாடுகளும் ஒன்றிணைவது அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாட்டுக்கும் பின்னடைவே.
ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இணைந்து சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உருவாக்கிய Quad அமைப்பும் நீர்த்துப்போகும். பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மீது கவனம் செலுத்திவந்த அமெரிக்கா, மீண்டும் ஐரோப்பாவில் ரஷ்யா மீதே அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.
மேலும், ஒருவேளை இந்தியா அமெரிக்காவை ஆதரித்தால், அதனால் ஒருபக்கம் ரஷ்யாவின் நட்பையும் இழந்து, மறுபக்கம் சீனா ஆதாயமடையவும் வழி செய்தது போலாகி விடும்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்பட்சத்தில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்கிற 3 காய்களை இந்தியாவை எப்படி நகர்த்துகிறது என்பதைப் பொறுத்தே, உலக அரங்கில் இதன் முடிவும் பின்விளைவுகளும் தெரியவரும்.
இந்த மூன்றுமே இந்தியாவின் தேச பாதுகாப்பு, வர்த்தகம், வெளியுறவுக்கொள்கை என மூன்று முக்கியமான விஷயங்களுடன் தொடர்புடையவை என்பதால், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை உற்றுநோக்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் விவகாரம் குறித்த முதல்கட்ட TSL Explainer
Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!