Published:Updated:

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இந்தியாவிற்கு ஏன் முக்கியம்? #2020Election

Trump and Modi
Trump and Modi ( AP / Alex Brandon )

அமெரிக்காவின் தேர்தல் இந்தியர்களுக்கு எவ்வளவு முக்கியமானது, அந்த தேர்தலின் முடிவுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பவை குறித்து நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.

அமெரிக்க அதிபர் நினைத்தால், அந்நாட்டின் எல்லையில் மெக்சிகோ மக்களைத் தடுத்து நிறுத்த பெருஞ்சுவர் கட்டலாம்; ஈரான் ராணுவத் தலைவரை ஒரே குண்டில் கொல்லலாம்; ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீயை அணைக்க உதவலாம்; சிரியாவை போர் பூமி ஆக்கலாம்; பருவ நிலை மாற்றத்தைப் புறந்தள்ளலாம்; பாகிஸ்தானைக் கடிந்துகொள்ளலாம்; இந்தியத் தலைவர்களின் அரசியல் முடிவுகள் குறித்துக் கேள்வி எழுப்பலாம். இப்படி உலகம் முழுவதும் தன் ஆக்டோபஸ் கால்களைப் பரப்பி, உலகின் ஏழரை பில்லியன் மக்களின் மீது ஏதோவொரு தாக்கத்தைச் செலுத்திவரும் வல்லரசு அமெரிக்கா.

இந்தியாவில் பிரதமர் தேர்தல் என்றால், காங்கிரஸ் ஜெயித்தாலோ அல்லது பா.ஜ.க ஜெயித்தாலோ, அந்தந்த விளைவுகளை அதற்கேற்ற தாக்கத்தை இந்திய மக்கள் சந்திப்பார்கள். ஆனால் அமெரிக்காவில், அதிபர் தேர்தலின் முடிவுகளின் தாக்கத்தை உலகம் முழுக்கவே சந்திக்கும்.

Representational Image
Representational Image

அந்த அமெரிக்காவின் அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் பெரும் சக்தியான அதிபர் தேர்தல் என்பது, அமெரிக்கர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கும் பெரும் நிகழ்வாகிப் போனது அந்தக் காரணத்தினால்தான்.

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடக்கும். 2016-ம் ஆண்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளின்டனைத் தோற்கடித்து அமெரிக்க அதிபரானார். இந்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து சூடுபிடித்திருக்கிறது அமெரிக்க அரசியல் களம்.

1992-ம் ஆண்டு தேர்தலில் பில் கிளின்டன் வெற்றி பெற்றார். மீண்டும் 1996-ம் ஆண்டும் அவரே அதிபரானார். அவருக்குப் பிறகு ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா என்ற அடுத்தடுத்த அதிபர்களும் இரண்டு தொடர் தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளனர். (அமெரிக்கச் சட்டத்தின்படி, ஒரே நபர் இரண்டு முறைக்கு மேல் அதிபராகப் பதவி வகிக்கக் கூடாது) அந்த சென்டிமென்ட் அடிப்படையில் டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். ஆனால், டிரம்ப் முன்னெடுத்த அதிரடியான அணுகுமுறையால், பிற்போக்கான கொள்கைகளால் அமெரிக்கர்கள் மத்தியிலே அவருக்குச் செல்வாக்கு குறைந்திருக்கிறது. ஆகவே, இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை இந்தப் பிரசார காலகட்டம்தான் தீர்மானிக்கும்.

இம்முறை குடியரசுக் கட்சி வேட்பாளராக மீண்டும் டிரம்ப் போட்டியிடுவார் என்பது உறுதியாகத் தெரிகிறது. அதேசமயம் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக, டிரம்ப்பிற்கு வலிமையான போட்டியாளராக யாரைக் களமிறக்குவது என்று முதற்கட்ட வாக்கெடுப்புக்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர் யார் என்பதை இரு கட்சிகளும் ஜூலை மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும். அதன் பின்னர் தீவிர பிரசாரக் களமாக அமெரிக்கா மாறும். நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். அன்றிலிருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உலக அரசியலின் போக்கை அந்த தினம்தான் தீர்மானிக்கும்.

இந்நிலையில், அமெரிக்காவின் தேர்தல் இந்தியர்களுக்கு எவ்வளவு முக்கியமானது, அந்த தேர்தலின் முடிவுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பவை குறித்து நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.

Modi - Trump
Modi - Trump

டிரம்ப்-மோடி நட்பின் அடிப்படையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது இந்திய அமெரிக்க உறவு. சமீபத்தில், நட்பின் அடிப்படையில் டிரம்ப் பிரத்யேகப் பயணமாக இந்தியா வந்ததையடுத்து, உலக அரசியல் வல்லரசோடு நெருக்கமான நட்பு பாராட்டுகிறார் என மோடியின் பிம்பம் உயர்த்திக்காட்டப்பட்டது, அது மோடிக்கான லாபம். அதேசமயம் அதிபர் டிரம்ப், தேர்தல் லாபத்தை எதிர்நோக்கியே இந்த இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். ஒரு அமெரிக்கா அதிபர் இப்படித் தனிப் பயணமாக இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தில் இந்திய மக்களோடு உரையாடுவதிலேயே டிரம்ப் தரப்பு ஆர்வம் காட்டியது. இதேபோல கடந்த ஆண்டு அமெரிக்காவில், ஹூஸ்டன் மாகாணத்தில் `ஹௌடி மோடி' என்ற பெயரில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் இரு தலைவர்களும் கலந்துகொண்டு அங்குள்ள இந்திய அமெரிக்கர்களிடையே உரையாற்றினர். இவையிரண்டும், இந்திய அமெரிக்கர்களின் கணிசமான ஓட்டு வங்கியை டிரம்ப் குறிவைக்கிறார் என்பதையே சுட்டிக் காட்டியது. அமெரிக்கத் தேர்தல் காய் நகர்த்தலில் இந்தியாவிற்குப் பெரும் பங்கு இருப்பதையும் அது உணர்த்தியது.

மிக முக்கியமான அமெரிக்கத் தேர்தல் ஆண்டில், இப்படி இரு நாட்டுத் தலைவர்களும் தங்களின் உறவைப் பலப்படுத்தி விளம்பரப்படுத்திக்கொள்வதே, அரசியல் ரீதியாக இரு நாடுகளும் கொண்டிருக்கும் சார்பு நிலையைத் தெளிவாய் புரியவைக்கிறது.

எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், தீவிரவாத ஒழிப்பு எனத் தொடங்கி பா.ஜ.கவின் கொள்கை முடிவுகள், அரசியல் மாற்றங்களான காஷ்மீர் CAA பிரச்னை வரை இந்தியாவும் பல விதங்களில் அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்த்து இருக்கிறது. ஏனெனில் அமெரிக்கா போன்ற பெரும் பலம் வாய்ந்த நாடு, தான் நினைத்தால் இந்தியா போன்ற நாடுகளின் மீது சில முடிவுகளை ஒட்டி அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

இந்தியா பலவகைகளில் அமெரிக்காவைச் சார்ந்திருக்கிறது. இந்தியாவின் எண்ணெய்த் தேவையில் பெரும்பகுதியைத் தற்போது அமெரிக்காதான் பூர்த்தி செய்கிறது. உலகம் முழுக்கப் பொருளாதாரத் தொய்வு ஏற்பட்டு வரும் இன்றைய சூழலில், கடந்த ஆண்டு மட்டும் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தகம் பத்து சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவு அதிக அளவிலும், தரத்திலும் ராணுவத் தளவாடங்களை அமெரிக்காவிடம் வாங்குகிறது. தொடர் ராணுவக் கூட்டுப் பயிற்சிகள், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் எனப் பலவற்றில் இருநாடுகளும் சேர்ந்து பணியாற்றுகின்றன. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, CAA, காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளின் அமெரிக்காவின் நிலைப்பாடு என்பது தற்போதைய இந்தியாவிற்குப் பெரும் சாதகமாக இருக்கிறது.

அமெரிக்கா - இரான் சிக்கலும் இடையில் சிக்கிய இந்தியாவும்!

CAA-வைப் பொறுத்தவரை, அதிபர் டிரம்ப் வெளிப்படையாகவே மோடிக்கு ஆதரவு அளித்துள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்கின்றது எனவும், மிக வலிமையான தலைவராக மோடி CAA போராட்டங்களைக் கையாளுகிறார் எனவும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் டிரம்ப். இதுவே அமெரிக்கா நினைத்தால், இந்தியாவின் இறையாண்மையை இந்தச் சட்டம் கேள்விக்குறியாக்குகிறது எனச் சர்வதேச அளவில் இந்தியா மீது ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

அதேபோல காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அம்மாநிலம் முடக்கப்பட்டு, முழுக்க வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட போதும், டிரம்ப்பின் அமெரிக்கா மௌனம் காத்தது. ஆனால், டிரம்ப் தவிர, அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்புள்ள பெர்னி சாண்டர்ஸ் உட்படப் பல அமெரிக்கத் தலைவர்கள் இது மனித உரிமை மீறல் எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்தியாவில் ஏற்படும் பல மாற்றங்களை அமெரிக்கா போன்ற பெரும் சக்தி பெரிதாய்க் கண்டுகொள்ளாமல் விடுவதே மோடியின் அரசுக்கு மிகவும் சாதகமான விஷயம்தான்.

Trump and Modi
Trump and Modi
AP / Aijaz Rahi

தனிப்பட்ட விதங்களிலும், டிரம்ப் மோடி என இரு தனி நபர்களுக்கு இடையே நிறைய ஒற்றுமை உண்டு. அரசியல் கொள்கை வடிவிலும் இருவரும் வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். எனவேதான், அமெரிக்காவின் இந்தத் தேர்தல் இந்தியாவிற்கும் முக்கியம். ஏனெனில், டிரம்ப்பின் அமெரிக்கா மோடியின் இந்தியாவிற்குத் தரும் அளப்பரிய ஆதரவை வேறு அதிபர் தருவது சந்தேகமே.

அடுத்த கட்டுரைக்கு