அமெரிக்காவின் மத்திய மேற்கில் இருக்கும் மாகாணம் மினசோட்டா. 180 கி.மீ தூரத்திற்கு ஓடும் மினசோட்டா நதி வறண்டிருந்த காலத்தில் அந்த பகுதியின் படகோட்டிகளால் மண்டையோட்டின் ஒரு பகுதி அங்கிருந்து கண்டெடுக்கப்படுகிறது. ரென்வில்லே என்கிற பகுதியின் செரீப் ஸ்காட் ஹேபிள், இது காணாமல் போனவர்களின் அல்லது கொலை செய்யப்பட்டவரின் மண்டையோடாக இருக்கலாம் என ஆய்வுக்கு அனுப்பி வைக்கிறார். ஆய்வின் முடிவில் இது கிட்டத்தட்ட 8000 ஆண்டுகளுக்கு முன்பாக புதையுண்ட மனிதரின் மண்டையோடு எனத் தெரிய வருகிறது.
கி.மு.5500 - 6000 காலகட்டத்தில் வாழ்ந்த மனிதரின் மண்டையோடு இது எனச் சொல்கிறார்கள். "இந்த மண்டையோடு இத்தனை பழைமையானது எனக் கேட்கும்போது எங்களுக்கு முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தது" என்கிறார் ஹேபிள். மானுடவியல் ஆய்வாளர்கள், "இந்த மனிதர் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம். அதுவே அவரது இறப்புக்கு காரணமாக இருந்திருக்கக் கூடும்" என ஆய்வுக்குப் பிறகு கூறினர்.

8000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதரின் உணவுப்பழக்கம் பற்றி குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். "அந்த மனிதர் தன் இளைய வயதிலேயே இறந்திருக்கலாம். மான், ஆமை, நன்னீர் சிற்பிகள், தாவர உணவுகள் இப்படியாக அவர் உண்டிருக்கக் கூடும். இப்போது அங்கு வாழ்கிற தொல்குடிகளின் மூதாதையராக நிச்சயம் அவர் இருக்க வாய்ப்பு உண்டு" என்கிறார் மானுடவியல் பேராசிரியர் கேத்லீன் ப்ளூ.
செரீப் இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததற்கு அந்தப் பகுதியைத் தொல்குடி மக்களால் எதிர்ப்பு கிளம்பியது. இது தங்களின் பழக்க வழக்கங்களுக்கு எதிரானது எனவும் அவர்கள் கூறியதற்குப் பிறகு செரீப் அந்தப் புகைப்படத்தை நீக்கினார்.
மேலும் 8000 வருடங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் இத்தனை அடர்த்தி இருந்ததில்லை. ஐஸ் பாறைகளாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
