கட்டுரைகள்
Published:Updated:

வெற்றிக்கானதே புரட்சி!

ஹெலின் போலக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெலின் போலக்

ஹெலின் போலக்

உலகமெங்கும் கொரோனா அச்சத்திலிருக்க, துருக்கியில் 288 நாள்களாகப் பட்டினிப் போராட்டம் நடத்தி வந்த ஹெலின் போலக் உயிர் பிரிந்துள்ளது.

கலை, அரசியல் என துடிப்புடன் செயலாற்றிய 28 வயதேயான குரூப் யோரம் குழுவின் ஹெலின் போலக்கின் மரணம் துருக்கி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. துருக்கியைச் சேர்ந்த குரூப் யோரம் இசைக்குழுவின் புரட்சிகரமான, அதிகாரத்துக்கெதிரான பாடல்கள் துருக்கி நாட்டு மக்களிடையே மிகப்பிரபலமானது. அந்தக் குழுவின்மீது அரசதிகாரம் கட்டவிழ்த்த அடக்குமுறைக்கு எதிராகத்தான் ஹெலின் போலக் போராடி மரித்துப்போனார்.

1985 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள மர்மாரா பல்கலைக்கழகத்தில் (Marmara University ) நான்கு நண்பர்களால் தொடங்கப்பட்டது ‘குரூப் யோரம்’ இசைக்குழு. இடதுசாரிக் கருத்துகள் பொதிந்த நையாண்டி கலந்த பாடல் வரிகள்தாம் இவர்களின் தனித்துவம். ‘தாவிர்’ என்ற கலை பண்பாட்டு இதழையும், கலை பண்பாட்டு மையம் ஒன்றையும் நடத்திவந்தனர்.

ஹெலின் போலக்
ஹெலின் போலக்

வறுமையில் வாடும் மக்களை வஞ்சிக்கும் துருக்கி அரசின் கொள்கைகள், அமெரிக்க எதிர்ப்பு, ஏகாதிபத்தியம் இவற்றுக்கெதிரான பாடல்கள் குரூப் யோரமிலிருந்து ஒலித்தன. அவர்களின் ஒரு பாடல், வானளாவிய பெரும் கட்டடங்கள் எழுப்புவதற்காக காலி செய்யப்பட்ட ஏழைக் குடியிருப்புகளைப் பற்றியதாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தடைசெய்யப்பட்ட குர்திஷ் மொழியிலும் அவர்கள் பாடல்கள் இசைத்தனர். இதன் காரணமாக, போலீஸார் நடத்திய சோதனைகளின் போது, வெடிபொருள்கள் கொண்டு இவர்களின் ஆல்பங்கள் அழிக்கப்பட்டன.

துருக்கியிலுள்ள தடைசெய்யப்பட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்புடன் குரூப் யோரம் குழுவுக்குத் தொடர்பிருப்பதாகவும், அரசுக்கெதிரான பாடல்களைப் பாடுவதாகவும் குரூப் யோரம் இசைக்குழுவின்மீது 400- க்கும் அதிகமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அதன் இசை நிகழ்ச்சிகள் பலவும் எதிர்ப்புகளுக்கிடையே, காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பின் கீழும் நடத்தப்பட்டன. பல இசை நிகழ்ச்சிகள் காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டன. ஆல்பங்கள் பலவும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டன. குழுவிற்குச் சொந்தமான இசைக் கருவிகள் பலவும் அடித்து உடைக்கப்பட்டன. பலவிதங்களில் முடக்கப்பட்டாலும் குரூப் யோரமின் ஆல்பங்கள் விற்பனையில் சாதித்தது. தங்கள் நிலத்தின் இசையாக, தங்களின் குரலாக மக்கள் அதை வரவேற்றனர்.

ஹெலின் போலக்
ஹெலின் போலக்

குரூப் யோரம் தொடர்ச்சியாக மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் விளைவாக குழுவின் கலைஞர்கள் ஆறுபேரை, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களின் தலைக்கு மூன்று லட்சம் துருக்கி லிராவை சன்மானமாக அறிவித்தது துருக்கி அரசு. குரூப் யோரமின் இசை நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை மேல் தடை விதிக்கப்பட்டன. இதை எதிர்த்து குரூப் யோரமின் ஹென்றி போலக், பஹார் கர்ட், பாரே யுக்செல், இப்ராஹிம் கோகேக் மற்றும் அலி அராசி ஆகியோர் 2019 மே 17 அன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்குவதாக அறிவித்தனர். ஜூன் மாதம் இப்ராஹீம் கோகேக் மற்றும் ஹென்றி போலக் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களின் பட்டினிப் போராட்டத்துக்குப்பின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குரூப் யோரம் இசைக்குழுவின் உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். தங்கள் குழுவின் மீதான அழுத்தங்கள், இசை நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடைகள், கலாசார மையங்கள்மீதான சோதனைகள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்த பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். மார்ச் 11, 2020 பட்டினிப் போராட்டத்தின்போது இப்ராஹிம் கோகெக் மற்றும் ஹெலின் போலக் ஆகியோர் உம்ரானிய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். குரூப் யோரமின் வழக்கறிஞர் டிடெம் அன்சால் அளித்த அறிக்கையில், இரண்டு குரூப் யோரம் உறுப்பினர்களும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் அவசர அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்கள் தலையீடு மற்றும் சிகிச்சையை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார். ஏப்ரல் 3-ம் இஸ்தான்புல்லில் உள்ள இல்லத்தில் தனது பட்டினிப் போராட்டத்தின் 288-வது நாளிலிருந்த போது ஹெலின் போலக் உடல் மெலிந்து, உறுப்புகள் செயலிழந்த நிலையில் மரித்துப் போனார்.

ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் அவசர அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்கள் தலையீடு மற்றும் சிகிச்சையை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அவரின் இறப்புக்குப் பிறகும் துருக்கி அரசு அவரின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க மறுத்துள்ளது. சிறையிலிருக்கும் குரூப் யோரமின் இரு கலைஞர்களை விடுவிக்க மறுத்துவிட்டது. லட்சக்கணக்கான துருக்கி மக்களைத் தனது குரலால் அரசியல்வயப்படுத்திய போலக்கின் தெருவில் ஆம்புலன்ஸின் சைரன் சப்தம் விடாது ஒலி எழுப்பிக்கொண்டிந்தது. ஹெலின் போலக்கின் இறுதிச்சடங்கில் பல மக்கள் ‘குரூப் யோரமின்’ ‘வெல்லும் வரையில்’ என்ற பாடலைப் பாடிய ஹெலின் போலக்கிற்கு இறுதி மரியாதை செலுத்தினர். அந்தப் பாடல்,

‘ஒவ்வொரு வீடும் ஓர் அரண்மனை

எங்கள் இல்லம் ஒரு பள்ளி

‘வெற்றிக்கானதே புரட்சி’ எங்கள் மொழியில்

ஒவ்வொரு வீட்டிலும் ஓர் எதிர்ப்பு

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு போராளி

‘வெற்றிக்கானதே புரட்சி’ எங்கள் மொழியில்.