Published:Updated:

`அவர்களை சடலமாகப் பார்க்கும் தைரியம் இல்லை’ - காபூல் குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய மணமகன் கண்ணீர்

Kabul attack
Kabul attack ( AP )

காபூல் திருமணவிழாவில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து மணமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காபூலில் கடந்த 17-ம் தேதி நடந்த திருமணவிழாவில் 1,000-க்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என அந்த அரங்கமே அதிர்ந்துகொண்டிருந்தது. திருமணத்தில் பிரத்யேகமாகப் பரிமாறுவதற்காக விதவிதமான உணவு வகைகள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தன. மணமக்களும் பல்வேறு கனவுகளோடு காத்திருந்தனர். இருவீட்டு உறவினர்களும் அந்த அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்தனர். ஏராளமான பணியாட்கள் அந்த மண்டபத்தில் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர். மறுபுறம், இசைக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அரங்கத்தில் இருந்த மக்கள் கூட்டத்தின் பெரும்பகுதி இசைக் கச்சேரியை ரசித்துக்கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அந்த அசம்பாவித சம்பவம் நடந்தது.

Kabul attack
Kabul attack
AP

இசைக் கச்சேரி நடந்துகொண்டிருந்த இடத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. ஒரு நிமிடத்தில் காட்சிகள் மாறின. மண்டபத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். வெளியில் இருந்த பொதுமக்களுக்கும் அங்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குக் காவல்துறையினர் வந்தனர். சில மணி நேரங்களுக்குப் பின்னர் அங்கிருந்த உடல்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. இந்தக் குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் என 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த 182 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காபூல் திருமணத்தை நிலைகுலையச் செய்த தற்கொலைப்படைத் தாக்குதல்! - 60 பேர் பலி; 180 பேர் படுகாயம்

திருமணத்தில் தங்களை வாழ்த்த வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களை சடலமாகப் பார்த்த மணமக்கள் வேதனையடைந்தனர். இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசிய மணமகன், `` நான் என் சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்களை இழந்துவிட்டேன். இந்தச் சம்பவம் என் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அவர்களால் பேசக்கூட முடியவில்லை. எனது வாழ்வில் இனி மீண்டும் மகிழ்ச்சியைப் பார்க்க மாட்டேன். நான் எவ்வளவு மறக்க நினைத்தாலும் இந்த சம்பவத்தை மறக்க முடியாது. இசைக்கலைஞர்கள் வாசித்துக்கொண்டிருந்த இடத்துக்கு அருகில்தான் குண்டுவெடிப்பு நடந்தது. நான் மனதளவில் உடைந்துவிட்டேன். என்னால் என் உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க முடியாது. அவர்களின் முகத்தைப் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை” எனக் கலங்கிய கண்களுடன் கூறியிருக்கிறார்.

Kabul attack
Kabul attack
AP

திருமண விழாவில் கலந்துகொண்ட முனிர் அஹமது என்பவர் பேசுகையில், ``திருமண விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போதுதான் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. எல்லோரும் கதறிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்கள். அரங்கம் முழுவதும் ரத்தக்கறையுடன் காட்சித் தந்தது" என்றார். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

திருமண மண்டபத்தின் உரிமையாளர் ஹூசைன் அலி கூறுகையில், ``இந்தத் திருமணத்தில் சுமார் 1,200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நாங்கள் இன்னமும் இறந்தவர்களின் உடல் பாகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். விரல்கள், கைகள் மற்றும் இதர உடல் பாகங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. திருமண அரங்கில் இருந்த கண்ணாடிகள், மரப்பலகைகள் என அனைத்தும் உடைந்துவிட்டன. இறந்தவர்களின் உடைமைகள் இங்கே உள்ளன. நாங்கள் போலீஸாரைத் தொடர்புகொண்டு அவற்றை எல்லாம் எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளோம்" என்றார் வேதனையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு