Published:Updated:

`ட்ரம்புக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை!’ -சொந்தக் கட்சியிலிருந்தே எழுந்த எதிர்ப்புக் குரல்

ஜோ பிடன் - ட்ரம்ப்
ஜோ பிடன் - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு வாக்களிக்கப் போவதில்லை எனக் குடியரசு கட்சியைச் சேர்ந்த காலின் பாவெல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல், அங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டன. வைரஸ் பரவலை முறையாகக் கையாளவில்லை என ட்ரம்ப் மீதும் அவரது ஆட்சியின் மீதும் பல்வேறு தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், `அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருக்கும் நேரத்தில் ஊரடங்கில் தளர்வு அறிவிப்பதிலேயே அதிபர் குறியாக இருக்கிறார்' என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

தற்போது இவை அனைத்தையும் ஓரங்கட்டும்விதமாக அமெரிக்காவில் நடக்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மினசோட்டா மாகாணத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் கடந்த மாதம் 25-ம் தேதி போலீஸ் பிடியில் இருக்கும்போது உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நீதி கேட்டு அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் அந்நாட்டில் மேலும் வைரஸ் பரவலை அதிகரிக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அதிபர் ட்ரம்ப், போராட்டக்காரர்களை மிரட்டும் தொனியில் பேசி அவர்களை ஒடுக்க ராணுவத்தை அழைப்பேன் என்று கூறியுள்ளார். அதிபரின் இந்தப் பேச்சு போராட்டக்காரர்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இதுமட்டுமல்லாது எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், ட்ரம்பின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் பேசி வருகின்றனர். வைரஸ் பரவல் மற்றும் போராட்டம் ஆகிய இரண்டையுமே ட்ரம்ப் முறையாகக் கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது ட்ரம்பின் சொந்தக் கட்சியிலிருந்தே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காலின் பாவெல்
காலின் பாவெல்

அமெரிக்க ராணுவத்தில் முன்னணி பொறுப்பில் இருந்த காலின் பாவெல், தன் ஓய்வுக்குப் பிறகு ட்ரம்ப் இருக்கும் அதே குடியரசு கட்சியில் இணைந்து அரசியல்வாதியாகச் செயல்பட்டு வருகிறார். இவர்தான் ட்ரம்புக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

சி.என்.என் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள இவர், “நாட்டில் ஓர் அரசியலமைப்பு உள்ளது. அந்த அரசியலமைப்பை நாம் பின்பற்ற வேண்டும். ஆனால் அதிபர் அதிலிருந்து திசை மாறிச் செல்கிறார். அதிபரின் பேச்சு, அமெரிக்க ஜனநாயகத்துக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

`வுகானில் இருந்து ஏன் மற்ற பகுதிகளுக்குப் பரவவில்லை?' - சீனா மீது சந்தேகம் எழுப்பிய ட்ரம்ப்

இந்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் என்னால் நிச்சயமாக ட்ரம்பை ஆதரிக்க முடியாது. நான் சமூக விஷயத்திலும் அரசியல் விஷயத்திலும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். நான் அவருடன் 35- 40 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் இப்போது அதிபர் தேர்தலில் வேட்பாளராக உள்ளார். நான் அவருக்குத்தான் வாக்களிப்பேன்” என்று பேசியுள்ளார்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த பாவெல் 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் ட்ரம்புக்கு வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு