Published:Updated:

`கமலா ஹாரிஸைவிட என்னிடம் அதிக இந்தியர்கள் உள்ளனர்!’ - அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

கமலா ஹாரிஸைவிட தனக்கு அதிக இந்தியர்களின் ஆதரவு இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸும் போட்டியிடவிருக்கிறார்கள். அதேபோல் ஜனநாயகக் கட்சியில் அதிபர் பதவிக்கு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனும் துணை அதிபர் பதவிக்கு கலிபோர்னியாவின் செனட்டர் கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார்கள்.

கமலா ஹாரிஸ் - ஜோ பிடன்
கமலா ஹாரிஸ் - ஜோ பிடன்

இவர் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர், தாய் இந்தியர் என்பதால் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண்ணாகவும், முதல் தெற்கு ஆசிய பூர்வீகத்தைச் சார்ந்த பெண்ணாகவும் கமலா ஹாரிஸ் உள்ளார். இவரின் தாய் இந்தியர் என்பதால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் ஆதரவு ஹாரிஸுக்கு கிடைக்கும் எனப் பரவலாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர்களான ஜோ பிடெனையும் கமலா ஹாரிஸையும் தற்போதைய அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா: `துணை அதிபர் பதவி; போட்டியிடும் கமலா ஹாரிஸ்!’ - வரலாறு படைத்த பிடென்

“ஜோ பிடென் அதிபராகிவிட்டால் அவர் உடனடியாக அமெரிக்காவின் ஒவ்வொரு காவல் துறையையும் அகற்றுவதற்கான சட்டத்தை இயற்றுவார். அநேகமாகக் கமலா ஹாரிஸ் அதைவிட ஒரு படி மேலே மோசமானவர். இவர் இந்தியப் பாரம்பர்யத்தை உடையவர். ஆனால் அதைவிட அதிக இந்தியர்கள் என்னிடம் உள்ளனர். நான் அதைச் சோதனை செய்துள்ளேன், நான் சொல்வது உண்மைதான் அவரைவிட எனக்கு அதிக இந்தியர்களின் ஆதரவு உள்ளது. எனவே, ஹாரிஸ் எனக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

பிடென் உங்கள் கண்ணியத்தையும் உங்கள் மரியாதையையும் பறித்துக்கொண்டிருக்கிறார். நவம்பர் 3-ம் தேதி நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் எதைத் திரும்ப பெறப்போகிறீர்கள் என்று. பிடெனின் அமெரிக்காவில் யாரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்” எனக் கடுமையாகப் பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்கா: `சர்வதேச கவனம்; பெண்கள், இளம் வாக்காளர்கள்!' - கமலா ஹாரிஸூக்கு குவியும் ஆதரவு
அடுத்த கட்டுரைக்கு