Published:Updated:

`வலிமிகுந்த இருமல் சத்தம் அச்சம் தருகிறது!' - #Corona பயத்தால் நடுக்கடலில் நிற்கும் கப்பல்

டைமண்ட் பிரின்சஸ் கப்பல்
டைமண்ட் பிரின்சஸ் கப்பல்

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ளவர்களில் இதுவரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கார்னீவல் ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்குப் பயணமானது. இந்தக் கப்பலில் பணியாளர்கள் உட்பட 3,700 நபர்கள் இருந்தனர். பிப்ரவரி 5-ம் தேதி ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் பயணித்த முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கப்பலானது யோகோமாகா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்தக் கப்பலில் 138 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

டைமண்ட் பிரின்சஸ் கப்பல்
டைமண்ட் பிரின்சஸ் கப்பல்

கப்பலில் உள்ள 3,700 நபர்களில் 279 பேருக்கு கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அவர்கள் சொகுசு கப்பலில் இருந்து வெளியேற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் மேலும் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ளவர்களில் இதுவரை 61 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 28 நபர்கள் ஜப்பானியர்கள் 12 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள நபர்களுக்கு கொரோனா பரிசோதனை முழுமையாக மேற்கொள்ள12 நாள்களாகும் எனக் கூறப்படுகிறது. அதுவரை அவர்கள் அனைவரும் கப்பலில் தங்க வைக்கப்படுவார்கள். சொகுசுக் கப்பலில் இருப்பவர்களுக்கு தெர்மாமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவக் குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

டைமண்ட் பிரின்சஸ் கப்பல்
டைமண்ட் பிரின்சஸ் கப்பல்

இதுகுறித்து அந்தக் கப்பலில் பயணம் மேற்கொண்டுள்ள பயணி ஒருவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ``என் அறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டு பயணி, ஒருவர் கடுமையான இருமல் காரணமாக அவதிப்பட்டுள்ளார். கப்பல் ஊழியர்கள் ஒவ்வொரு அறைக்கு வந்து உணவு கொடுத்து வருகிறார்கள். இன்றோ, நாளையோ நானும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவேன்” என அச்சம் தெரிவித்துள்ளார்.

இதே கப்பலில் இருக்கும் யார்ட்லீ யாங் என்ற பெண் பயணியின் ட்வீட்டர் பதிவுகள் நம்பிக்கை கொண்டதாக இருக்கிறது. ``நாங்கள் 5 நாள்களாக இந்தக் கப்பலில் இருக்கிறோம். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. தற்போது கப்பலில் ஏராளமான மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளனர். யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது அவர்களுக்கு தெரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

குறிப்பிட்ட நேரம் வெளியில் செல்ல அனுமதிக்கின்றனர். ஜன்னல்கள் இல்லாத அறையில் தங்கியிருக்கும் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கப்பலில் இருக்கும் பயணிகளுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக, ஒரு தொலைபேசி எண்ணை அளித்துள்ளனர். அது ஒரு மனநல ஆலோசகரின் எண். உதவி தேவைப்பட்டால் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு