Published:Updated:

லீக்கான இ-மெயில் உரையாடல் - `அது சீனா வைரஸ் தான்' மீண்டும் டிரம்ப் தடாலடி - என்ன நடக்கிறது வூஹானில்?

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் ( Patrick Semansky | AP )

இதற்கு மேல் சீனாவால் அவர்கள் செய்த தவறை மறைக்க இயலாது. இதற்கு சீனா அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரியே ஆக வேண்டும். அவர்களால் ஏற்பட்ட நஷ்டத்திற்கும் உயிர் சேதத்திற்கும் 10 ட்ரில்லியன் டாலர்கள் நஷ்டஈடு தொகையை அளிக்க வேண்டும். - டொனால்டு டிரம்ப்

``கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தான் பரவியது. இது சீன வைரஸ் என்று நான் ஆரம்பத்தில் குற்றம்சாட்டியத்தை இப்போது ஜோ பைடன் அரசே வழிமொழிந்து வருகிறது. அதற்கான ஆதாரங்களும் இப்போது கிடைத்துள்ளது. உண்மை வெளிப்பட்டுவிட்டது. உடனடியாக சீனா இதற்கு மன்னிப்பு கோரி அமெரிக்காவிற்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்." என்று டிரம்ப் காரசாரமான அறிக்கையை வெளியிட்டு மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது முதலில் எப்படி பரவியது என்பது குறித்த தெளிவான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்த குழப்பம் அதிகரிக்க அமெரிக்க அரசியல் களத்திலும், ஊடகங்களிலும் வெளியான கருத்துக்கள் மற்றும் செய்திகளால் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்திலிருந்து தான் பரவியதா? என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் கீழ் ஆராயந்து 90 நாட்களுக்குள் முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க உளவுத்துறையினருக்கு திடீர் உத்தரவை பிறப்பித்தார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அமெரிக்க உளவுத்துறை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மேலும், ``எங்களுக்கு அமெரிக்காவின் மீது தான் சந்தேகம் அதிகமாக உள்ளது. அதனால், உலக சுகாதார அமைப்பினர் அமெரிக்காவுக்கு சொந்தமான அனைத்து ஆய்வகங்களிலும் சோதனை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தது.

 `வூஹான் ஆய்வகத்திலிருந்து பரவிய கொரோனா..?' - அதிர வைக்கும் அமெரிக்க உளவுத்துறை அறிக்கை?!

அதைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் மூத்த தொற்று நோய் ஆய்வாளரும், அமெரிக்காவின் கொரோனா ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த விஞ்ஞானியுமான டாக்டர்.அந்தோணி ஃபாசிக்கும், சீனாவின் வூஹான் ஆய்வகத்தின் ஆய்வாளர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்த ஆவணங்கள் வெளியாகி, எரிந்து வந்த சர்ச்சைக்கு மேலும் தீனி போட்டுள்ளது.

வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி
வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி
asahi.com

இருதரப்பினருக்குமிடையில், கடந்த 2020-ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின்னஞ்சல் வாயிலாக நிகழ்ந்த உரையாடல்களை அமெரிக்காவின் பிரபல ஊடகங்களான ‘சி.என்.என் (CNN)’ மற்றும் ‘தி வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post)’ முதலானோர் தகவல் சுதந்திரச் சட்டத்தின் (Freedom of Information Act) கீழ் பெற்று அதனை பொதுவெளியில் வெளியிட்டுள்ளனர்.

அந்த உரையாடல்களின் அடிப்படையில், அமெரிக்காவில் தொற்று குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆய்வாளர்கள் வெளியிடுவதற்கு முன்பாகவே டாக்டர். அந்தோணி ஃபாசிக்கும் அவரது குழுவினருக்கும் இது குறித்த தகவல்களை வூஹான் ஆய்வகத்தினர் தெரியப்படுத்தியிருக்கின்றனர். முந்தைய அரசாங்கத்தின் போது கொரோனா வைரஸ் வூஹான் ஆராய்ச்சி மையத்தில் இருந்துதான் பரவியது என்று டிரம்ப் தெரிவிக்கையில் அதனை ஃபாசி முற்றிலும் மறுத்திருந்தார்.

`கொரோனா வைரஸ் எனும் உயிரி ஆயுதம்?!’ - 5 ஆண்டுகளுக்கு முன்பே விவாதித்த சீனா?

தற்போது இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளதால் ஆறு மாதங்களாக ம்யூட் மோடிலிருந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அரசியல் களத்தில் மீண்டும் அதிரடியாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, (03.06.2021) வியாழக்கிழமை நள்ளிரவில் அதிரடி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள டிரம்ப் அதில் குறிப்பிடிருந்ததாவது,``நான் அப்போதே கூறியது போல் கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியது என்பதை தற்போது எனது எதிர்முனையான ஆளும் ஜனநாயகக் கட்சி அரசும் வழிமொழிந்து வருகிறது. டாக்டர். ஃபாசியின் உரையாடல்களும் தற்போது அதையே வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு மேல் சீனாவால் அவர்கள் செய்த தவறை மறைக்க இயலாது. இதற்கு சீனா அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரியே ஆக வேண்டும். அவர்களால் ஏற்பட்ட நஷ்டத்திற்கும் உயிர் சேதத்திற்கும் 10 ட்ரில்லியன் டாலர்கள் நஷ்டஈடு தொகையை அளிக்க வேண்டும். அதேபோல், உலக நாடுகளுக்கும் சீனா நஷ்டஈடு அளிக்க வேண்டும்” என்று காரசாரமாக தெரிவித்துள்ளார்.

டிரம்ப்
டிரம்ப்

இது குறித்து ஃபாசியிடம் அந்நாட்டு ஊடகத்தினர் கேள்வியெழுப்புகையில், அவர் தெளிவான விளக்கத்தை அளிக்காமல் ஊடகங்களில் வெளிவந்துள்ள தமது உரையாடலில் திருத்தம் செய்யப்பட்டிருபதாகத் தெரிவித்தார். அத்தோடு, கொரோனா தொற்று வூஹானில் தான் முதமுதலில் உருவாகியிருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என்று மீண்டும் அதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பினர் சீனாவில் ஆய்வினை தொடங்கியுள்ள சூழலில் இது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இறுதியில் 90 நாட்களுக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே இதில் நிலவி வரும் குழப்பங்களுக்கு விடை கண்டறியப்படும்.

அடுத்த கட்டுரைக்கு